டைரக்டர் விசுதான் கைப்பை வாங்க உதவி பண்ணனும்!!!
ஒண்ணுமில்லேங்க. ஒரு கைப்பை. ஒரே ஒரு கைப்பை வாங்கணும்னு தங்கமணி சொன்னாங்க. சரி வாம்மா போகலாம்னு சொன்னேன். அதுக்கு - இருங்க. கடைக்குப் போறதுக்கு முன்னாடி என் கண்டிஷன்களையெல்லாம் சொல்றேன். கேளுங்கன்னாங்க.
இதென்னம்மா, மணல்கயிறு எஸ்.வி.சேகர் மாதிரி எட்டு கண்டிஷன் போடப்போறியா... ச்சீச்சீ. அவரை மாதிரி எட்டெல்லாம் கிடையாது. என்னோடது வெறும் அஞ்சே அஞ்சு கண்டிஷன்ஸ்தான். கொஞ்ச நேரம் பேசாமே நான் சொல்றதை கேளுங்க.
சரி சரி. சொல்லும்மா சொல்லு.
******
கண்டிஷன் நம்பர் 1: Size
கைப்பை பெரிசா கைப்பெட்டி மாதிரியும் இருக்கக்கூடாது. ச்சின்னதா பர்ஸ் மாதிரியும் இருக்கக்கூடாது. நடுவாந்தரமா இருக்கணும்.
அவ்ளோதானே. வெரி சிம்பிள். வா கடைக்குப் போகலாம்.
இருங்க. நான் இன்னும் மிச்ச நாலு கண்டிஷன்களை சொல்லவே இல்லையே?
சரி. சொல்லு.
கண்டிஷன் நம்பர் 2: நீளம்
கைப்பையை தோள்லே மாட்டினா, நீளமா கால் வரைக்கும் வரக்கூடாது. அதனால் தோள்லே மாட்ட முடியாதவாறு சின்னதாவும் இருக்கக்கூடாது.
ஏம்மா. இப்பதான் எல்லாத்திலேயும் adjustable மாடல் இருக்குமே. நமக்கு எவ்ளோ நீளம் வேணுமோ, அவ்ளோ வெச்சிக்க வேண்டியதுதானே?
எனக்கு adjustable வேண்டாம். வாங்கும்போதே சரியானதா வாங்கிடணும். வாங்கித்தர முடியாதுன்னா இப்பவே சொல்லிடுங்க... என்ன?
சரி சரி வாங்கித் தர்றேன். அடுத்த கண்டிஷனை சொல்லு.
கண்டிஷன் நம்பர் 3a: கலர்.
கொஞ்சம் dark கலர்தான் வேணும். அதுக்காக ரொம்ப darkஆ இருக்கக்கூடாது.
கறுப்பு ஓகேவா?
எனக்கு தமிழ்லே பிடிக்காத ஒரே கலர் - கறுப்பு. அதனால் அது வேணாம். brown ஓகே.
கண்டிஷன் நம்பர் 3b:
எந்த கலரா இருந்தாலும், ரொம்ப பளபளான்னு இருக்கக்கூடாது. அதுக்காக மங்கின கலராவும் இருக்கக்கூடாது.
அப்போ நடுவாந்திரமா இருக்கணும். சரியா?
எப்படி கரெக்டா சொல்றீங்க?
அதைத்தானே முதல்லேந்து சொல்லிட்டு வர்றே? ம். சரி. மேலே..
கண்டிஷன் நம்பர் 4: Cost
ஆஹா.. இப்பத்தான் எனக்கு தேவையான விஷயத்துக்கு வந்திருக்கே. இந்த கண்டிஷனை நான் சொல்றேன்.
சரி சொல்லுங்க.
உனக்கு என் க்ரெடிட் கார்டை கொடுத்துடறேன். உனக்கு எவ்ளோக்கு வாங்கணும்னு தோணுதோ நீ வாங்கிக்கோ. அப்புறம் எந்த கேள்வியையும் கேக்க மாட்டேன்.
அதெல்லாம் வேணாம். நான் ரொம்ப காஸ்ட்லியால்லாம் வாங்க மாட்டேன். அதனால் எனக்கு கார்டெல்லாம் வேணாம்.
ஏம்மா? நாந்தான் திட்ட மாட்டேன்னு சொல்றேன்ல.
காரணத்தை சொல்றேன். அவசரப்படாதீங்க. ஏன்னா, அதுதான் எனது அடுத்த கண்டிஷன்.
கண்டிஷன் நம்பர் 5:
நான் வாங்கப்போற கைப்பை, ஒரு வருஷத்துக்கு மேலே உழைக்கக்கூடாது.
அப்படின்னா, என்ன ஒரு வருஷத்துலே அதை கிழிச்சிடப் போறியா?
கிழிக்க மாட்டேன். அதுக்காகத்தான் ரொம்ப விலை கொடுத்து வாங்க மாட்டேன்னு சொன்னேன்.
அப்புறம்?
நான் எந்த கைப்பையையும் ஒரு வருஷத்துக்கு மேலே பயன்படுத்த மாட்டேன். அதனால், விலை கொஞ்சம் கம்மியா வாங்கி, அதை ஒரு வருஷத்துக்கு மட்டுமே பயன்படுத்தி, அடுத்த வருஷம் மறுபடியும் புதுசா வேறே ஒண்ணு வாங்கணும். அதான். இப்ப புரிஞ்சுதா?
மனதில்: விளங்கிடும். இந்த கண்டிஷனுக்கெல்லாம் உட்பட்டு ஏதாவது கைப்பை கிடைக்கும்னு நினைக்கிறே? ஒரு வருஷம் தேடினாலும், நோ சான்ஸ்...
வாயில்: ரொம்ப நல்லா புரிஞ்சுதும்மா. ஒரு ரெண்டு நாள் தேடினா போதும். கிடைச்சிடும்னு நினைக்கிறேன். இன்னிக்கே தேட ஆரம்பிச்சிடுவோம். நீ உடனே கிளம்பு. போகலாம்.
*****
டைரக்டர் விசுதான், எஸ்.வி.சேகரை ஏமாத்தி கல்யாணம் செய்து வெச்சா மாதிரி, எனக்கும்... வெயிட் வெயிட்.. கல்யாணம் செய்து வெக்கச் சொல்லலே... ஒரே ஒரு கைப்பை வாங்கித்தர சொல்றேன். அவ்ளோதான். செய்வாரா?
*****