சங்கீத வாத்தியார்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்!!
அமெரிக்காவில் இருந்தபோது சஹானாவிற்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுக்கவேண்டுமென்று ஒரு நல்ல ஆசிரியரைத் தேடினோம். கர்நாடக முறையிலான பாட்டு சொல்லிக் கொடுக்க எங்க கிராமத்தில் யாரும் இல்லாது போகவே, ஹிந்துஸ்தானி பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் சேர்ந்தார். இரு வருடங்கள் பாட்டு கற்றும் கொண்டார்.
இதற்கிடையில் சென்னை திரும்பி வர நேர்ந்ததும் இங்கே அதே ஹிந்துஸ்தானிக்காக ஒரு வாத்தியைப் பிடித்தோம். இவரை பாடச் சொல்லிக் கேட்ட வாத்தி, நல்லாத்தான் பாடுறாங்க. ஆனா, அவர் (அமெரிக்க வாத்தி) சொல்லிக் கொடுத்த முறை வேறு. நான் சொல்லிக் கொடுக்கும் முறை வேறு. அதனால், முதல் இரு மாதங்கள் மறுபடி ஆரம்பத்திலிருந்துதான் சொல்லிக் கொடுப்பேன். சஹானாவின் வேகத்திற்கேற்ப அடுத்தடுத்த கட்டத்திற்குப் போய்விடலாம் என்றார். அப்போ இரண்டு வருடங்கள் கற்றுக் கொண்டது வேஸ்ட்தானா என்றதற்கு, அப்படி சொல்ல முடியாது. ஆனா அப்படிதான் என்று மழுப்பி பாடத்தை ஆரம்பித்தார். ஆனால், வேகமாகவும் பாடங்களில் முன்னேறினார்.
அதே வகுப்பில் கர்நாடக வாத்தி ஒருவரும் இருந்தார். சஹானா நல்லா பாடுறாங்க. நேரம் இருந்தால் கர்நாடக பாட்டு வகுப்பிலும் சேர்த்து விடுங்க. வேகமா பிக்கப் செய்துடுவாங்க என்று சொல்லி அதிலும் சேர்த்துக் கொண்டார்.
இதற்கிடையில் சஹானா, வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே, அதிலும் சேர்த்துவிட்டோம். இப்படியாக சென்னையில் இந்த மூன்று வகுப்பிலும் சேர்ந்து சஹானா பாடி / வாசித்து வந்தார்.
கால மாற்றம். காலச் சக்கரத்தில் சுழற்சி. எங்களை பெங்களூருக்கு தள்ளியது.
இங்கே பாட்டு வகுப்பில் சேர்ப்பதற்காகப் போனோம். எங்கே பாடுங்க? - இது வாத்தி. சஹானாவும் 2-3 பாடல்களைப் பாடிக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்ட வாத்தி இறுதியில் என்ன சொல்லியிருப்பார்? அதேதான். இதுவரை இவர் கற்றவை ஹிந்துஸ்தானி & கர்நாடிக் ஆனாலும், கற்றுக் கொடுக்கும் வகைகள் எல்லா இடத்திலும் வெவ்வேறாக இருப்பதால், மறுபடி முதலிலிருந்து துவக்க வேண்டும் என்றார். செம டென்சன் ஆனோம். மறுபடி - சரிகமபதநி என்று முதல் வகுப்பிலிருந்தா, அப்போ நான்கு ஆண்டுகளாக இவர் கற்றதெல்லாம் வீண்தானா என்று கேட்க - அப்படியில்லை ஆனால் அப்படித்தான் என்றார். ஆனால் கவலைப்படாதீர்கள் ஓரிரு மாதங்களில் நான் மறுபடி இதே நிலைமைக்குக் கொண்டு வந்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.
அடுத்து வயலின் வாத்தி. இதிலும் 1-2 பாடல்களை வாசித்துக் காண்பித்தார் சஹானா. மேலே உள்ள பத்தியில் பாட்டுக்கு பதிலாக வயலின் என்று போட்டுக் கொள்ளவும். சொந்தமாக பாடல்களை வாசித்துப் பழகி வரும் நிலையில் இருந்தாலும், அடிப்படை வகுப்பில் இந்த வாத்தி சொல்லிக் கொடுக்கும் முறை மாறுபடுகிறது என்று சொல்லி, ஓரிரு மாதங்கள் மறுபடி பாடங்களை கற்றுத் தருகிறேன். வேகமாக பிக்கப் செய்துவிடுவார் என்று சொல்லியுள்ளார்.
என்ன கொடுமை இது வாத்திகள்? புதிய பள்ளி, புதிய மொழி இப்படி எல்லாப் பிரச்னைகளையும் கடந்து ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாறினாலும், இந்த பாட்டு / வயலின் வகுப்பு வாத்திகள் படுத்தும் ‘பாட்டுக்காக’ இனிமேல் அடுத்த முறை இடப்பெயர்வுக்கு பயங்கரமாக யோசிக்க வேண்டியிருக்கும்.
இப்படி இந்த சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வாத்திகள், பள்ளிக்கூடம் நடத்தினால் என்ன ஆகும்? மூன்றாம், நான்காம் வகுப்பில் சேர வரும் மாணவ/விகளை மறுபடி முதல் வகுப்பிலேயே சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவார்களோ? #மிடியல.
***