கியர் மிதிவண்டியும், ஞானும் பின்னே கடைக்காரரும்
கியர் மிதிவண்டி வாங்கி ஓட்டணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தேன். இனி இவன் வேலைக்கு ஆகமாட்டான்னு நண்பர் சீவின் வினோத் ஒரு நாள் மாலை தொலைப்பேசி, இங்கே கடையில் நிக்குறேன். கடனட்டை எடுத்து உடனே வா, உனக்கு ஒரு வண்டி வாங்கணும்ன்றாரு.
அடடா, சரி போவோம்னு போய் வண்டி பார்த்தோம். ஒரு வண்டியைத் தேர்ந்தெடுத்தாச்சு. ஏதாவது கேள்வி இருக்கான்னு கேட்டார் கடைக்கார். நமக்கு கியர் வண்டி எப்படி ஓட்டறதுன்னு ஐடியாவே இல்லாததால், சிலபல மிகவும் அடிப்படையான கேள்விகளைக் கேட்டு அவரை குடைஞ்சாச்சு.
நான் : வேகமா போயிட்டிருக்கும்போது, போக்குவரத்து சிக்னல் வருது. நானும் நிக்கணும். அப்போ எல்லா கியரையும் குறைத்து 1-1க்கு வரணுமா? பைக், கார்லேல்லாம் அப்படிதானே செய்றோம்?
கடை: ஐயோ. அப்படியெல்லாம் இல்லீங்க. எந்த கியரிலும் நிற்கலாம். எந்த கியரிலும் கிளம்பலாம்.
நான்: அப்படியா. அடடே. இந்த தொழில்நுட்பத்தை ஏன் அந்த பைக், கார்காரங்க கொண்டு வரலே?
கடை: அடுத்த மாதம் நான் டெல்லிக்குப் போகும்போது அதைப் பத்தி பேசறேன்.
நான்: சரி. அப்போ நியூட்ரல் அப்படின்னு ஒரு மேட்டரே இல்லைன்றீங்க. க்ளட்ச் எங்கேன்னு சொல்லவேயில்லையே?
கடை: ஆ. க்ளட்ச்’லாம் இதில் கிடையாது. கியர் மட்டும்தான்.
நான்: ஓ. சரி. இந்த கியரை இப்படித்தான் மாத்தணுமா?
கடை: யோவ். வண்டி நிற்கும்போது கியர் போடாதே. அப்புறம் செயின் அவுந்து/அறுந்துப் போச்சுன்னு என்கிட்டே வரக்கூடாது.
நான்; சாரி சாரி. சரி. வண்டி ஓட்டும்போது, நாம் எந்த கியரில் இருக்கோம்னு தெரியறதுக்கு ஏதாவது குறி இருக்கா?
கடை: ஆமா. எந்த கியரில் இருக்கீங்கன்னு நீங்க ஞாபகம் வைக்க அவசியம் இல்லை. பார்த்தாலே தெரியும்.
நான்: நல்லவேளை செய்தீங்க. இல்லேன்னா, நான் வண்டி ஓட்டும்போது, 1-3, 2-4, இப்படி சொல்லிக்கிட்டே போகணும்.
கடை: சரி, அடுத்த கேள்வி?
நான்; இன்னும் ஏதோ கேட்கப் போக, நீங்க முன்னே பின்னே சைக்கிள் ஓட்டியிருக்கீங்களான்ற மாதிரி பார்த்தார் கடை. அதனால், இப்போதைக்கு இவ்வளவுதான் சார்னு சொல்லிட்டேன்.
நம்மகிட்டே இதுவரை இருந்த மிதிவண்டி, பைக் எதிலும் இந்த சின்னச்சின்ன சமாச்சாரங்களான ஒலிப்பான், நிறுத்துவான், பின்னோக்கிப் பார்க்கும் கண்ணாடி எதுவும் இருந்ததேயில்லை. இந்த வண்டியிலும் அதெல்லாம் வேணுமான்னு யோசிக்க, அதற்குள்ளாக எல்லாத்தையும் அவரே வெச்சிக் குடுத்துட்டாரு.
இப்படி ஒரு வழியாக வண்டியுடன் வீட்டுக்கு வந்து, வாங்கின விலையை விட ரொம்ப கம்மியாக ஒரு விலையைச் சொல்லி, அவ்வளவுக்குதான் வாங்கினேன்னு சொல்லியாச்சு.
அப்பா, இதுக்கும் கியர் இல்லாத வண்டிக்கும் என்ன வித்தியாசம்?
அதும்மா, சாலையில் மேடுகளில் ஏறும்போது, அதிக கியர் போட்டு ரொம்ப கஷ்டமில்லாமல் போயிடலாம்.
மிதிவண்டி வாங்கறதே, மிதிச்சி மிதிச்சி, உடற்பயிற்சி போல ஓட்டத்தான். அதிலும் கியர் போட்டு, சிரமமேயில்லாமல் ஓட்டணும்னா, அதுக்கு மோட்டர்பைக்கே வாங்கிடலாமே?
சரி சரி. புது புத்தகத்துக்கெல்லாம் அட்டை போட்டாச்சா? போய் ஏதாவது எடுத்துப் படி. அப்பா ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்.
ஷப்பாஆஆஆ..
***