இரண்டு குரு’க்கள் வர்றார். வழி விடுங்கோ!!
இரண்டு குரு’க்கள் வர்றார். வழி விடுங்கோ!!
மொத்தம் இரண்டு தத்துவ நூல்கள். (பேர் இப்போதைக்கு தேவையில்லை!). ஒன்று சமஸ்கிருதத்தில். இன்னொன்று கன்னடத்தில். இரண்டு மொழிகளுமே நமக்கு ததிங்கினத்தோம். ஆனா அந்த நூல்களை படிக்கணும். அதனால், சரியான குரு ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த சமயம்.
நான்கு மாதங்களுக்கு முன்:
அந்த சமஸ்கிருத நூலை கற்றுத்தரும் ஒரு குரு கிடைத்தார்னு போனேன். அவருடன் இருந்த ஒரு சிஷ்யர் நமக்குத் தெரிந்தவர். இந்த மாதிரி.. இந்த மாதிரின்னு சொன்னதற்கு, குரு - ஆஹா, அதுக்கென்ன? பேஷா சொல்லித் தரலாமே? வந்துடு.
நமக்கோ - சரிதான், இன்னிக்கு நரி முகத்தில்தான் முழிச்சிருக்கோம்னு நினைப்பு. ஆனா... ஊஊஊஊ..
அந்த சிஷ்யர் - குருஜி, இவருக்கு (அதாவது எனக்கு) கன்னடம் சரியா பேச வராது. தடுமாறி தடுமாறித்தான் பேசுவார். நம்ம கூட்டத்தில் நாம் எல்லாருமே கன்னடிகா. கன்னடம்தான் பேசுவோம். அதனால் இவருக்கு கஷ்டமா இருக்கும். ஒத்துப் போகாது.
குருஜி - தடுமாறியாவது பேசுவார்லே. அது போதும்.
சிஷ்யர் - வேண்டாம் குருஜி. திரும்பி என்னிடம் - அதுவும் தவிர, இவருக்கு ரொம்ப வயசாயிடுச்சு. பேசுவதே எங்களுக்கு சரியா கேட்கவில்லை. அதனால், இது சரிப்படாது.
குருஜியும் ஒன்றும் பேசவில்லை. நானும் சரின்னு திரும்பி வந்துவிட்டேன்.
No Hard feelings on either குருஜி or சிஷ்யர்.
ஒரு மாதத்திற்கு முன்:
கன்னட நூலுக்காக ஒருவர் சிக்கினார். அவரிடம் போய் கேட்டேன். சார், எனக்கு கன்னடம் மெதுவாகத்தான் படிக்க வரும். பேசுவதும் தமின்னடம் or கன்னமிழ் (கன்னடம்+தமிழ்) மாதிரிதான் இருக்கும். ஆனா எனக்கு இந்த புத்தகம் படிக்கணும்.
அவரும் ஊஊஊஊ சொல்லி அனுப்பிடுவார்னு நினைத்திருந்தபோதுதான், காதில் அந்த இன்பத்தேன், இன்பத்தேன்னு சொல்வாங்களே, அது -
அதனால் என்ன, நூலைக் கற்க மொழி அவசியமேயில்லை. எனக்கு கன்னடம் தெரியும். உனக்கு கன்னடம் புரியும். நம்ம இருவருக்கும் ஆங்கிலம் தெரியும். நான் கன்னட+ஆங்கிலத்திலேயே சொல்லித் தர்றேன். ஓகேதானே?
சலங்கை ஒலி கமல் போல் expression காட்ட நம்மால் முடியாது. ஆனால் மிகவும் நன்றி ஐயா என்றேன்.
கூடவே, நம் தளமான தாசர் பாடல்களைப் பற்றியும் சொன்னேன். இன்னொரு நற்செய்தியும் சொன்னார்.
தாச சாஹித்ய பாடத்தில் மணிபால் பல்கலையில் உள்ள ஒரு பிரிவில் பல்வேறு தேர்வுகள் நடப்பதாகவும், அதையும் நீ முயற்சிக்கலாமே என்றார்.
எனக்கு தலை கீழே. கால் மேலே. அப்புறம் சரியாக திரும்பி நின்றுவிட்டேன்.
மொத்தம் 12 செமஸ்டர்கள். குறைந்த பட்சம் 6 வருடங்கள் ஆகும். 12 தேர்வுகளும் முடித்தால், தாச சாஹித்யத்தில் M.Philக்கு நிகரான ஒரு பட்டம்.
அதற்கு மேல் பேச ஒன்றுமேயில்லை. எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினேன்.
இதோ, இந்த ஜன 10 முதல் அந்த கன்னட நூல் + முதல் நிலைத் தேர்வுக்கான coaching வகுப்புகள் துவக்கம்.
இந்த ஆண்டு இனிய ஆண்டு.
***