Wednesday, March 19, 2014

நொறுக்ஸ் - 3-19-2014


சென்னையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் எப்போதெல்லாம் ஒலிப்பான் பயன்படுத்துகிறார்கள்? இந்தக் கேள்விக்கு 10 மதிப்பெண்கள் என்றால், விடை பின்வருமாறு:

* சாலையில் இடப்புறம் திரும்பும்போது; வலப்புறம் மற்றும் நேராகப் போகும்போது.
* வீட்டை விட்டு கிளம்பும்போது; மற்றும் வீட்டுக்கு வந்தபிறகு (உள்ளே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்குறாராம்!).
• சிக்னலில் சிகப்பு, மஞ்சள் அல்லது பச்சை விளக்கு எரியும்போது; (கவுண்ட்டவுன் 5க்கு கீழ் வந்துவிட்டால், ஒலி exponentially கூடிக்கொண்டே போகும்).
* ஆடு, மாடு மற்றும் நாய்கள் சாலையில் நடுவே இருந்தாலோ, குறுக்கே வந்தாலோ அல்லது ஓரமாய் நின்றாலோ.
* சாலையில் மேடு, பள்ளம் இருந்தால்; அல்லது சமதரையாக இருந்தால்.
* சாலையில் அதிக போக்குவரத்து இருந்தால்; அல்லது யாருமே இல்லாமல் காலியாக இருந்தால்.
* தங்கள் வாகனத்தை விட சிறிய வாகனங்களின் பின்னால் போகும்போது (கார் பின்னால் வரும் பேருந்து, பைக் பின்னால் வரும் கார், மிதிவண்டி பின்னால் வரும் பைக் இவர்களெல்லாம் தைரியமாக ஒலிப்பான் பயன்படுத்துவார்கள்).

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனால் நிறுத்திக்குவோம். மேற்கண்ட கேள்விக்கு 1 மதிப்பெண்தான்னு சொன்னா, அதற்கான விடை எப்படியிருக்கும்? விடை பதிவில்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போன வாரம் திருப்பதி போயிருந்தோம். நிறைய மாற்றங்கள். பக்தர்களுக்கு அதிக வசதிகள். மாணவர்களுக்கு தேர்வு நேரமாகையால் அதிக கூட்டம் இல்லாமல் இருந்தது. நம் மக்கள் சாமி கும்பிட தலங்களுக்குப் போனாலும், கட்டில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தனி அறை, வெந்நீர் குளியல் இன்னபிற வசதிகளை எதிர்பார்த்தே இருப்பார்கள். அப்படியில்லாமல், கடவுளை நினைத்து, கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி அவன் தரிசனம் பெற முயற்சிக்கலாமே என்று வேளுக்குடி ஒரு சொற்பொழிவில் சொல்வார். அதே போல் நாங்களும் அறை எதுவும் எடுக்காமல், ஒரு பெரிய shed போன்ற இடத்தில் மக்களோடு மக்களாக உறங்கி (சூப்பர் குளிர்!), அதிகாலையில் தண்ணீர்க் குளியலுக்குப் பிறகு தரிசனத்திற்குச் சென்றோம். ஏழுமலையானின் தரிசனம் சில நொடிகளுக்கே கிடைத்தாலும், அதை நினைத்தவாறு சில மாதங்களை ஓட்டிவிடலாம் என்றும், இனி ஆண்டுக்கொருமுறை இங்கு வரவேண்டும் என்றும் நினைத்து மலையிறங்கினோம். மதுரை தூங்கா நகரம்னா, திருமலை தூங்கா மலை. 24x7 சாப்பாடு கிடைக்குது; ஷாப்பிங்கும் செய்யலாம். 

இந்த வாரம் படித்த புத்தகம் வைகோ’வின் பல பேச்சுக்களின் தொகுப்பு. வெல்லும் சொல். விகடன் பிரசுரம். பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மகாபாரதம் என பல தலைப்புகளில், பல்வேறு கூட்டங்களில் பேசிய பேச்சுக்கள் மிக அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. திருவாசகம் விழாவில் இவரது பேச்சைக் கேட்டு (சூப்பர் ஸ்டாரைப் போலவே!) ரசிகனானேன். அதைப் போலவே மேற்சொன்ன தலைப்புகளில் மனிதர் சும்மா பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம், ஆனால் நான் நூலகத்திலிருந்து எடுத்திருந்ததால், திருப்பிக் கொடுத்துவிட்டேன். 

பதிவில் முதலில் சொன்ன கேள்விக்கு 1 மதிப்பெண் மட்டுமே என்றால் அதற்கான விடை:

வண்டி Onல் இருக்கும்போதெல்லாம் ஒலிப்பானை ஒலிப்பார்கள்; Offல் இருக்கும்போது ஒலிப்பானை ஒலிக்கமாட்டார்கள்.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP