@விவாஜி, எங்க வீட்டுக்கு வராதீங்க!
முதல் மேட்டர் அமெரிக்காவில் நடந்தது.
தண்ணீர் லாரியிலிருந்து கனெக்ஷன் மாறிப் போய் வடிவேலுவின் வாயிலிருந்தும் அங்கிருந்தும் தண்ணீர் வந்ததுபோல், அமெரிக்காவிலும் எங்க வீட்டில் கனெக்ஷன் மாறிப்போய் கேபிள் டிவி ஒளிபரப்பு வந்துகொண்டிருந்தது. நாங்களும் மாதா மாதம் $79.99 கட்டாமல் சுமார் 4-1/2 வருடங்கள் அதை ஓசியில் பார்த்து வந்தோம். அப்போ வந்தாரு பாருங்க எங்க வீட்டுக்கு, இந்த @விவாஜி. என்ன பண்ணாரோ தெரியாது, அடுத்த நாளே Comcastலிருந்து ஆள் வந்து, நீங்க ரொம்ப நாளா பணமே கட்டாமே டிவி பாக்குறீங்க, இனிமே அப்படி முடியாதுன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டுப் போயிட்டாரு. அப்படி பணம் கட்டி, டிவி பார்க்கவேண்டிய அவசியமேயில்லைன்னு நாங்களும் சொல்லிட்டு, ஓசியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் யூட்யூப்க்கு மாறிட்டோம்.
இந்த மேட்டரை நினைவில் வைச்சிக்கோங்க. அடுத்தது இந்தியாவில்.
இந்தியா வந்த புதிதில் சரியான வெயில் காலம். ஏசி, மின்விசிறி எல்லாம் பயன்படுத்த வேண்டியதாப் போச்சு. ஒரு வருஷம் கழிச்சி இப்பதான் எவ்வளவு வெயில் அடிச்சாலும், ஒரு கன்னத்தில் அடிச்சா, இந்தான்னு மறு கன்னத்தை காட்டுற அளவுக்கு பழகிப் போச்சு. அப்போ NRIதானே. அதனால்தான் வெயில் தாங்கமுடியல. அடுத்த மாசம் மின்கட்டணம் வந்தது. ரூ.50 மட்டுமே. சரி, புதுசா இந்தியா வந்ததுக்காக எனது மன தைரியத்தைப் பாராட்டி தமிழக அரசு, சோப்பு டப்பா தராமல் இப்படி மின் கட்டணத்துலே சலுகை தர்றாங்கன்னு நினைச்சி விட்டுட்டோம்.
மறுபடி அடுத்த தடவை. இப்பவும் அதே ரூ.50க்கு பில். அதெப்படி இவ்வளவு பயன்படுத்தறோம். ஆனா கட்டணமே வசூலிக்க மாட்றாங்கன்னு எங்களுக்கு செம கோபம். ஆனாலும், அரசு செய்தா எதுவுமே சரியாதான் இருக்கும்னு எதுவுமே பேசாமே கட்டிட்டோம். ஆனா, எங்க அபார்ட்மெண்ட் நண்பர்கள் சும்மா இருக்க மாட்டாங்களே. அவங்களுக்கு பயங்கரக் கடுப்பு. எங்களுக்காக அவங்களே புகார் செஞ்சாங்க. ‘எங்களுக்கு மட்டும் ரூ.1000க்கு மேல் போகுது. இவங்களுக்கு வெறும் ரூ.50தானா. உடனே சரிசெய்யவும்’. ஆனா, அது அரசு இயந்திரமாச்சே. கொஞ்சம் மெதுவாதான் செயல்படும்.
அடுத்த முறை மீட்டர் கணக்கிடவந்த நபரிடம் எங்க சார்பா மொத்த அபார்ட்மெண்ட் ஆட்களும் பேசினாங்க. (நாங்க அமைதியா பின்னாடி நின்றிருந்தோம்!). அவரும், நாளை காலை 11 மணிக்கு ஆபீஸ் வாங்க, சரி செய்துடுவோம்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
அடுத்த நாள். எங்களைவிட எங்க நண்பர்கள்தான் பயங்கர பரபரப்பா இருந்தாங்க. இரவு 1 மணியிலிருந்து ஒரு மணிக்கொருதடவை ஒருத்தர் அலாரம் வைச்சிண்டு, எங்கே 11 மணி ஆயிடப்போகுதோ, எங்கே நாங்க மின் அலுவலகத்திற்கு போகாமே இருந்துடுவோமோன்னு பாத்துக்கிட்டே இருந்தாங்க. ஒரு சில குழந்தைகளும் வந்து, ‘அங்கிள், டைம் என்ன ஆச்சு?, 11 மணி ஆச்சான்னு அப்பா கேட்டு வரச்சொன்னாரு’ன்னு நடமாடும் அலாரமா மாறினாங்க.
மொத்த கட்டிடமே தெருவுக்கு வந்து, வெற்றியோடு வாருங்கள் என்று எங்களை வீரத்திலகமிட்டு அனுப்பி வெச்சாங்க. நாங்க திரும்பி வர்றவரைக்கும் யாரும் குளிக்காமே, சாப்பிடாமே, ஒரு நல்ல செய்திக்காக காத்திருந்தாங்க.
ஆனா EB ஆபீஸ்லே என்ன நடந்துச்சு? மீட்டர் கருவியை மாத்தணும். அதுவரைக்கும் உங்க வீட்டுப் பயன்பாடு இவ்வளவு (x) இருப்பதால், நீங்க இந்த கட்டணத்தை (y) கட்டிட்டு வாங்கன்னு ஒரு கட்டணத்தை சொன்னாங்க. வழக்கம்போல இந்த கட்டணம் எங்களுக்கு ஓகே. ஆனா, எங்க நண்பர்களுக்கு - ம்ஹூம். அவங்க மறுபடி ஆபரேஷன் புகாரை ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு தடவையும் மின் அளவை குறிக்க வரும் நபரிடம் புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க.
ஆனா... ஆனா.. இன்றுவரைக்கும் அந்த பிரச்னைக்கு தீர்வே வரலை.
இந்த அருமையான சந்தர்ப்பத்தில், நண்பர் @விவாஜி நம்ம வீட்டுக்கு வந்து, அதனால் நம் மின்வாரியமும் வீறுகொண்டு எழுந்து எங்க பிரச்னையை தீர்த்துட்டாங்கன்னா, என்னை எங்க வீட்டுலே தீர்த்துடுவாங்க. ஆகவே, <தலைப்பு>.
****