Saturday, May 15, 2010
Friday, May 14, 2010
FeTNA-2010 விழாவுக்கு கண்டிப்பா வாங்க...
பல்லக்கில் பவனி வரப்போகிறாள் நம் தமிழ்த்தாய், சுதந்திரமாக. எப்போது? வட அமெரிக்க சுதந்திர தின விடுமுறை வரும் ஜூலை 3 - 5 தினங்களில். எங்கே? நம் தாய் பேரரசி அல்லவா. அரண்மனையில்தான் இருக்கும், இந்த அலங்காரத் திருவிழா. அமெரிக்காவில் கனெக்டிகட் என்ற மாநிலத்தில், Waterbury என்ற ஊரில் உள்ள "Palace Theater"ல் நடக்கவிருக்கிறது. அந்த இடம் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி. அந்த அரங்கில் க்லை நிகழ்ச்சிகளும் இருந்தால், இன்னும் எப்படி இருக்கும்!
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23வது தமிழ் விழா இது. FeTNA என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது (Federation of Tamil Associations of North
America) 'செந்தமிழ்க் காவலர்' என்று போற்றப்படும் ச.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவாகவும் இந்த வருடம் அமைந்திருக்கிறது. FeTNA தலைமைக் குழு ஒவ்வொரு வருடமும் ஒரு மாநிலத்தில் இந்தத் திருவிழாவை திட்டமிட்டு அங்குள்ள தமிழர்களுடன் உற்சாகத்துடன் ஒன்றுபட்டு உழைத்து, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். போன
வருடம் அட்லாண்டா என்ற நகரில், மிக அருமையாக நடத்தியிருந்தார்கள்.
அமெரிக்க மண்ணில் தமிழினம் ஒற்றுமையாக வாழ்ந்து ஒரு அடையாளத்தை ஆழமாக பதிக்க, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை இந்திய, அமெரிக்க வல்லுனர்களையும், கலைஞர்களையும் வரவழைத்து, எல்லோருக்கும் நல்லுணர்வையும், புல்லரிப்பையும் உண்டாக்கும் வகையில் கொண்டாட இருக்கிறார்கள் FeTNA தலைமையும், வெவ்வேறு குழுக்களும், தன்னார்வத் தொண்டர்களும்.
கனெக்டிகட் தமிழ் குழந்தைகள் 'சங்கே முழங்கு' என்ற பாட்டுக்கு, படியெடுத்து நடந்து, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று தொடங்கவிருக்கிறது, இந்த பெருவிழா.
இயக்குனர் சிகரங்களில் ஒருவரான பாரதிராஜா, இளமைக்கூட்டம் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரபல நடிகர் விக்ரம், பிரபல நடிகை த்ரிஷா, சேவைக்கும், சனாதன தர்மத்துக்கும் பெயர் போன தவத்திரு மருதாசல அடிகளார் இளையபட்டம், சிரிக்க வைக்க நடிகர் சந்தானம், சிந்திக்க வைக்க பேராசிரியை பர்வீன் சுல்தானா, கவிதையை சுவைக்க வைக்க கவிஞர் தாமரை என்று சிறப்பு விருந்தினர்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.
July 3,4 இரண்டு மாலை வேளைகளிலும் இரண்டு அருமையான கலை நிகழ்ச்சிகள். பாரம்பரியக் கலையை பரிமளிக்க வைக்க புதுச்சேரி தலைக்கோல் குழுவினர் தெருக்கூத்து "மதுரை வீரனை" அமெரிக்க அரண்மனை அரங்கத்துக்கே அழைத்து வருகிறார்கள். மெல்லிசை
இயக்குனர் மன்னர் ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக்குடன், சாதனா சர்கத்துடனும் இணைந்து, இன்னிசை அளிக்கவிருக்கிறார், இரண்டாவது தினம்.
இவற்றை தவிர்த்து அந்தந்த மாநிலங்களிலிருந்து தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், தொடர் மருத்துவ கல்லூரி, வாழ்க்கைத்துணை சந்திப்பு, தொழிலதிபர்கள் வரவேற்பு என்று parallel programs.
20 திருமணங்களைக் கூட ஒன்று சேர்த்து நடத்தி விடலாம். ஆனால், இது போன்ற எல்லா தமிழர்களின் ஆர்வத்துக்கும், திறமைக்கும், வயதுக்கும், கலையுணர்ச்சிக்கும் முக்கியத்துவத்துக்கும் ஏற்ப ஒரு விழா நடத்த பொறுப்பேற்க விரும்பும் மனிதருக்கு ஒரு அசாதாரண திறமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அதற்கு சொந்தமானவர் முனைவர் பழனி சுந்தரம். அவர்தான் இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர். FeTNAவின்
செயலாளரும் அவர்தான். தலைவராகவும் சீக்கிரம் பொறுப்பேற்க இருக்கிறார். தற்போது தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா, சுந்தரத்துக்கு பலத்த ஆதரவு கொடுத்து, இந்த விழாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் முனைந்து பாடுபடுகிறார்.
இந்த செய்தியை ஆர்வத்துடன் படிக்கும் வாசகர் என்ன செய்யலாம்?
http://www.fetna.org என்ற வலைதளத்துக்குள் புகவும். எல்லா விவரங்களையும்
கூர்ந்து படிக்கவும். விழாவுக்கு போகலாமா / வேண்டாமா என்ற யோசனையிருந்தால் "போகலாம்" என்று உள்மனதிற்கு ஆணையிடுங்கள். உடனே வலைதளத்துக்கு சென்று பதிவு செய்யவும்.
ஆசையிருந்தும் நேரம், தூரம், பணவீக்கம் போன்ற நெருக்கடியால், உங்களால் வர முடியாவிட்டாலும், அமெரிக்காவில் உள்ள உங்கள் உறவினர் / நண்பருக்கு தெரிவியுங்கள். அப்படியும் இல்லையென்றால், உங்கள் வாழ்த்துக்களையாவது FeTNAவுக்கு அனுப்புங்கள்.
"நிதி மிகுந்தவர், நேரம் உள்ளவர் வந்து மகிழுங்கள்.
நேரம் குறைந்தவர், நிதி மிகுந்தவர் தந்து உதவுங்கள்.
நிதி குறைந்தவர் நேரம் மிகுந்தவர் பிறருக்கு சொல்லுங்கள்.
எதுவும் இல்லையென்று நினைப்பவர் (மின்) அஞ்சலில் வாழ்த்துங்கள்".
Please visit : www.fetna.org
Contact : Dr.Pazhani Sundaram (203)-271-2064
Dr.Muthuvel Chelliah (443)-538-5774
"செந்தமிழால் சேர்ந்திணைவோம். செயல்பட்டே இனம் காப்போம்".
Submitted by
Dr.Chitra Vaitheeswaran
Connecticut, USA
*****
Read more...
Tuesday, May 4, 2010
உன்னியும், மீனும் பின்னே ஒரு ஜோக்கும்...
எச்சரிக்கை: இது ஒரு அக்மார்க் சொந்தக்கதை/விளம்பர இடுகை. லேபிளிலும் சொல்லிட்டேன். படிச்சப்புறம் - இடுகையில் கருத்து எதுவுமே இல்லையேன்னு சொல்லக்கூடாது, ஆமா.
*****
சென்ற ஞாயிறு மாலை www.ragact.org சார்பாக திரு.உன்னி கிருஷ்ணன் கர்நாடக இசைக் கச்சேரி எங்க மாநிலத்துலே நடந்தது.
4 மணி கச்சேரிக்கு என் கார் (சொந்த கார்!) போய் சேரும்போது மணி 3.58. அரங்க வாசல்லே சுமார் 50 பேர் நின்னுக்கிட்டிருந்தாங்க. நான் கச்சேரி கேக்க வர்றேன்னதுக்கே இவ்ளோ பேர் என்னை வரவேற்க வெளியே காத்திருக்காங்கன்னா, பாட வர்றேன்னா இந்த ஊரே திரண்டு வந்துடுமேன்னு கவலைப்பட்டேன்.
ஒரு வழியா எல்லாம் சரியாகி - உள்ளே போய் - உன்னி உடனடியாக ஆரம்பித்தார். அடுத்த இரண்டரை மணி நேரம் உன்னியின் இசைமழையில் நனைந்தோம்.
கர்நாடக இசை கேட்கும்போது எல்லோரும் ஏன் தலையை அப்படி இப்படி ஆட்டுறாங்கன்னு தங்ஸ் கேட்டாங்க. இசை மழையில் நனையறதால், அந்த தண்ணி தலையில் தேங்கி - அப்புறம் அதனால் ஜல்ப் பிடிச்சிக்கிச்சின்னா கஷ்டமில்லையா, அதனால்தான் தலையை அப்படி இப்படி ஆட்டி, அந்த (இசை) மழைத்தண்ணியை தள்ளி விட்டுடறாங்கன்னேன். நல்லவேளை, எனக்கு இந்தப்பக்கம் இன்னொருத்தர் உக்கார்ந்திருந்ததால், தங்ஸ் என்னை தள்ளி விடலை!.
தொண்டையில் கிச்கிச் இருந்தாலும் அதை சமாளித்து அட்டகாசமாய் பாடினார் உன்னி. தெலுங்கு, கன்னட மொழிகளில் கர்நாடக சங்கீத பாடல்களைப் பாடியவர் ரொம்ப நேரமாய் தமிழிசைப் பாடல்கள்
பாடவேயில்லை. சிந்துபைரவி சுஹாசினி கணக்கா நானும் எழுந்து கேக்கலாம்னு எழுந்து நிற்பதற்குள், அடடா.. தமிழ்ப் பாடல்கள் ஆரம்பமாயின. கடைசியில் அனைத்தும் தமிழ்ப் பாடல்கள். அத்தனையும் அருமை.
இந்த மாலைப் பொழுதை இனிமையானதாக மாற்றியதற்காக உன்னிக்கு நன்றி கூறி - அடுத்த நிகழ்ச்சிக்குள் கிச்கிச்-சிலிருந்து மீண்டு வர வாழ்த்திவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
*****
ரொம்ப நாளாய் ஏதாவது ஒரு 'குட்டி' வாங்கணும்னு சஹானா சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வேண்டுகோளுக்கு வெளிப்படையாக ஆதரவு தராமல், வெளியிலிருந்து ஆதரவு தந்துகொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழிச்சிதான் தெரிஞ்சது அவங்க கேக்குறது ஏதாவது ஒரு விலங்குகுட்டியாம்.
என்ன குட்டி வாங்கலாம்னு அடுத்த சுற்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஒவ்வொரு நாளும் அவர் ஏதாவது ஒரு விலங்கு சொல்லி - அதை வாங்க முடியாதுன்னு நாங்க சொல்லி - பிறகு அழுகை, திட்டு, அழுகை, சமாதானம் - இப்படி தொலைக்காட்சி சீரியல் மாதிரி ஒரே சீன் பல நாட்கள் நடந்தேறியது.
டைனோசர் குட்டியிலிருந்து ஆரம்பித்து, குதிரை, பன்றி, பூனை, நாய், எலி, அணில், குருவி வரை நம்மூரில் சர்வ சாதாரணமாய் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் விலங்குகளை (டைனோசர், குதிரை தவிர்த்து!!) வளர்க்கவேண்டுமென்பது சஹானாவின் அவா.
அதுங்கல்லாம் சூசூகக்கா போகும்மா, வீடு நாறிடும். அதுவுமில்லாமே இந்தியன் கவுண்டமணி மாதிரி அதுங்ககிட்டேல்லாம் கடி/அடிபட என்னால் முடியாதுன்னு சொல்லிப் பாத்தாச்சு. ம்ஹூம்.
கடைசியில் ஒரு மனதாக மீன் வாங்குவதென்று முடிவாகி - தொட்டி, மீன்(2) மற்றும் சில அலங்காரப் பொருட்கள் அனைத்தும் வாங்கியாற்று.
அடுத்தது அந்த 2 மீன்களுக்கும் பேர் வெக்கணுமே. அங்கவை, சங்கவைன்னு பேர் வைக்கலாம்னு நினைச்சோம். இந்த மீனோ அமெரிக்க மீன், அதுக்கு எப்படி தமிழ் புரியும்னு நாந்தான் சொல்லி - ஸ்வீட்டி, ப்யூட்டி - அப்படின்னு ரெண்டுக்கும் பேரு வெச்சிருக்கோம். மீனு படத்துலே தெரியுதா?
****
டாக்டர் : இந்த ஜலதோஷம் உங்களுக்கு எப்பத்திலிருந்து இருக்கு?
அவர் : நேத்து ராத்திரி சுமார் 10 மணியிலிருந்து 12 மணி வரைக்குள் வந்திருக்கும்னு நினைக்கிறேன் டாக்டர். அந்த சமயத்தில் எனக்கு தெரியல. நானே காலையில் எழுந்து (டிஷ்யூ) பேப்பர் பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.
****