தமிழ்லே பேசறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா???
முன்னுரை:
கட்சியிலே எல்லோரும் தூய தமிழில்தான் (ஆங்கில வார்த்தைகள் கலப்பில்லாமல்) பேசவேண்டும் என்று ஒரு கட்சித்தலைவர் கூறிவிடுகிறார். அந்த தலைவரது பிறந்த நாள் விழாவில் ஒரு தொண்டர் "தமிழில்" பேச நினைக்கிறார். அவர் எப்படி பேசுகிறார் என்று பாருங்கள். இனி தொண்டர் பேச்சு.
அம்பத்தெட்டாம் வட்ட சார்பாக பேச வந்திருக்கேன். நம்ம தலைவரைப் பத்தி பத்து நிமிஷம் பேசணும்னு சொன்னாங்க. அவர சின்ன வயசிலேர்ந்து கிட்ட இருந்து பாத்தவன் நான். அதனால அவரோட சின்ன வயசு விஷயங்கள பகிர்ந்துக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.
நம்ம தலைவரு சின்ன வயசில அதிலேதான் பள்ளிக்கூடத்துக்குப் போவாரு. அப்போ அடிக்கடி கீழே அது கழண்டுடும். அவரும் சளைக்காம குனிஞ்சி குனிஞ்சி அதை எடுத்து மாட்டிக்கிட்டே போவாரு. வழியிலே நின்னு அவரு அதை மாட்டும்போது எல்லோரும் கத்துவாங்க. ஆனா அவரு யாரையும் கண்டுக்கவே மாட்டாரு. அந்த பொறுமையும், மன தைரியமும் நாம அவரிடமிருந்து கற்க வேண்டிய பாடங்களாகும்.
நம்ம தலைவரு அதை குடிப்பாரான்னு நிறைய பேர் என்னைக் கேட்டிருக்காங்க. சின்ன வயசிலேர்ந்தே தலைவரு அதை விரும்பி குடிப்பாரு. அவங்க அப்பா, அம்மால்லாம் திட்டினாலும், யாருக்கும் தெரியாம சந்து முனையிலே மறைஞ்சி நின்னு குடிப்பாரு. நானே அதை நிறைய தடவை அவருக்கு வாங்கி குடுத்திருக்கேன். பிறகு, வயித்து வலி வந்தப்புறம் அதை குடிக்கறதை நிறுத்திட்டாரு. இன்னிவரைக்கும் அதை அவர் கையால தொடலியே. இந்த அவரோட பக்குவம் நம்ம எல்லாருக்கும் வரணும்.
நம்ம தலைவருக்கு ரொம்ப இளகிய மனம் அப்படிங்கறது ரொம்ப பேருக்குத் தெரியாது. வீட்லே, அதோட அது மேலே வராமே தவிச்சாக்கூட இவரால பொறுத்துக்க முடியாது. ஓடிப்போய் அதை தூக்கி விட்டுடுவாரு. நம்ம தலைவரோட மனைவி திட்டினாலும் அவரு கண்டுக்கவே மாட்டாரு. அது எப்படி கஷ்டப்படுது பாரு அப்படின்னு, அதை தூக்கி விட்டுட்டே இருப்பாரு.
தலைவரு இப்போல்லாம் அதிலே போறாரே அப்படின்னு நிறைய பேர் சொல்லி என் காதாலே கேட்டிருக்கேன். அவருக்கு என்ன ஆசையா அதிலே உட்கார்ந்து போறதுக்கு? கொஞ்ச நாள் முன்னாலே கூட, அவரு அதிலேதான் போயிட்டிருந்தாரு. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, அவரு போயிட்டுருந்தப்போ, ஒருத்தன் வந்து அவர் பின்னாடி இடிச்சிட்டான். அவரும் கீழே விழுந்து ஒரே அடி. அன்னிலேருந்து, அவரு இதிலேதான் உக்கார்ந்து போறாரு. பாதுகாப்புக்கு கூடவே எப்பவும் ரெண்டு பேரோடதான் போவாரு.
அவரு அதிலே போற அழகை நீங்கல்லாம் பாக்கணுமே... அடடா... ரெண்டு கையையும் காலையும் விரிச்சிக்கிட்டு.. ஆகா.. காண கண் கோடி வேணும்.
அவருடைய பிறந்த நாளாகிய இன்னிக்கு நான் அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாட்டுக்கு பல நன்மைகள் செஞ்ச இவரோட அதை, நம்ம சட்டமன்றத்திலே வைக்கணும்னு கேட்டுக்கறேன். நம்ம கட்சி அலுவலகத்திலே இருக்கறாமாதிரி, அவரோட பெரிய அதை அங்கேயும் மாட்டணும்னு வேண்டிக்கறேன்.
வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
பின்னுரை:
சில வார்த்தைகளுக்கு தமிழில் தெரியாததால், தொண்டர் அது, இது அப்படின்னு பேசி சமாளிச்சிட்டார்.
ஆனா, நீங்க ஏடாகூடமா புரிஞ்சிக்ககூடாது என்பதற்காக, அவர் சொல்ல நினைத்த 'அது/இது'வை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறேன்.
இரண்டாம் பத்தி: சைக்கிள், செயின்
மூன்றாம் பத்தி: கூல் ட்ரிங்க்ஸ்
நான்காம் பத்தி: குக்கர், விசில்
ஐந்தாம் பத்தி: கார், பைக்
ஏழாம் பத்தி: போட்டோ
4 comments:
நல்ல ஒரு "இதா" எழுதியிருக்கீங்க
பிரேம்ஜி சொன்னதேதான்....
அதை ஒரு இதா வாகத்தான் எழுதிட்டீங்க:-))))))
Superb. Can i quote this in my blog if you permit.
Sairam
பிரேம்ஜி -> வாங்க.. நல்லாயிருந்த்தா.. நன்றி...
துளசி மேடம் -> வாங்க வாங்க...
எங்கே இ(த்)துன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்... நன்றி...:-)
சாய்ராம் கோபாலன் -> Welcome... Did you like it?.. Pls dont ask and you can quote this... thanks...:-)
Post a Comment