Showing posts with label நன்பேண்டா. Show all posts
Showing posts with label நன்பேண்டா. Show all posts

Sunday, August 3, 2014

நண்பர்கள் தின வாழ்த்துகள்.


அமெரிக்காவில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்.

ஒரே குழுவில் இருந்த நாங்கள் மூவரும் நண்பர்கள் ஆனோம். வாரயிறுதிகளில் சேர்ந்து ஊர் சுற்றுவது, கடை கண்ணிகளுக்குப் போவது என பொழுது போக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் வேலை & இடமாற்றத்தால் வேறொரு ஊருக்குச் சென்றார். அடுத்து வந்த ஒரு நீண்ட வாரயிறுதியில் எங்கள் இரு குடும்பத்தையும் அவர் ஊருக்கு அழைக்க, அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கி நாங்களும் பயணப்படத் தயாராக இருந்தோம். இங்குதான் George Orwell வருகிறார்.

All Friends are equal, but some Friends are more equal than others-ன்னு சொன்னாரே, அவர்தான்.

இங்கிருந்த மற்றொரு நண்பரின் மனைவியும், போகவிருந்த ஊரிலிருந்த நண்பரின் மனைவியும் மிகச்சிறந்த நண்பிகள். தங்கள் நட்பை கற்பைப்போல எண்ணக்கூடியவர்கள். அதில் உண்டான Possessiveness, மற்ற எவரையும் தங்கள் நட்புக்கிடையில் சேர்க்காத பண்பினைக் கொண்டவர்கள். அப்படி இருக்கும்போது, less equalஆக இருந்த என்னை, இந்தப் பயணத்திலிருந்து எப்படி ‘கட்’ செய்வது? அதைத்தான் த்ருஷ்யம் போல் ஒரு MasterPlan செய்து முடித்தார்கள். அது என்ன ப்ளான் என்பதுதான் இந்தப் பதிவு.

நாள் முழுக்க நடந்த இந்த ஆபரேஷன் பற்றி, துவக்கத்தில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே தெரிந்தது. (’திடுக்’ திருப்பங்களுடன் எவ்வளவு ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் படித்திருப்போம்!!).

அடுத்த நாள் காலை 6 மணிக்குக் கிளம்பி 1மணிக்கு நண்பர் வீட்டில் மதிய உணவு என்று ப்ளான். முந்தைய நாள் நடந்தவை:

9மணி: லோக்கல் நண்பர் அழைத்து - ஏம்பா, நீ கண்டிப்பா வர்றேயில்லே?. அட ஆமாம்பா. கண்டிப்பா போறோம் - இது நான்.

10மணி: லோக்கல் நண்பர் மனைவி அழைத்து: நாளைக்கு போற வழியில் பனி பெய்யும் போலிருக்கு. எப்படிப் போறோம்னு தெரியல. நான்: அட 30% பனிதான். ஒண்ணும் பிரச்னையில்லை. போகலாம்.

11மணி: ஊரிலிருக்கும் நண்பர்: குழந்தைக்கு உடம்பு சரியில்லை. இங்கு வந்தால் உன் குழந்தைக்கும் அது பரவிவிடும். எதுக்கும் நான் மாலை confirm செய்றேன்.

12மணி: லோக்கல் நண்பர்: எனக்கு ஆபீஸ் வேலை வரும் போலிருக்கு. நாம் அடுத்த வாரம் போகலாமா? அல்லது நீ மட்டும் போறியா? நான்: போவதென்றால் சேர்ந்தே போகலாம். நீ போகலேன்னா நானும் போகலை.

1மணி: லோக்கல் நண்பர்: பனி, அவர் குழந்தையின் ஜுரம், ஆபீஸ் வேலை - இதெல்லாம் காரணங்கள். நாம் இந்த வாரம் போகவேண்டாம். நீ வாங்கின பரிசுகளை போய் அந்தந்த கடைகளில் ரிட்டர்ன் கொடுத்துவிடு. நானும் அதேதான் செய்யப் போகிறேன்.

2மணி: ஊரிலிருக்கும் நண்பருக்கு தொலைப்பேச, அவரின் அனைத்து தொலைப்பேசிகளும் switchoff.

3மணி: பரிசுகள் ரிட்டர்ன் செய்தாச்சு.

4மணி: மனைவியிடம் சொன்னேன். (ரமணா மருத்துவமனைக் காட்சியில் விஜயகாந்த் குரலில்) இப்போ எந்த நேரத்திலும் தொலைப்பேசி வரும். இவன் மட்டும் புறப்பட்டுப் போறேன்னு சொல்வான். அடுத்த முறை இருவரும் சேர்ந்து போவோம்னு சொல்வான் பாருன்னேன்.

5மணி: லோக்கல் நண்பர்: எவ்வளவு பனி இருந்தாலும், என்னை மட்டுமாவது வரச்சொல்லிட்டாங்க. நான் மட்டும் இப்பவே கிளம்பிப் போறேன். உன்னால் உடனடியா கிளம்ப முடியாதில்லே. அடுத்த முறை சேர்ந்தே போகலாம். பை.

பிறகு நாங்கள் அமெரிக்கா காலி செய்துவிட்டு வரும்போது ஊரிலிருந்த அந்த நண்பரிடம் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, சொல்லிவிட்டு வந்தேன் - அன்னிக்கு என்னை வரவேண்டாம்னு சொல்லியிருந்தாலே, நான் வந்திருக்க மாட்டேன். அதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். பரவாயில்லை. சென்னை வந்தால் கண்டிப்பாக என் வீட்டுக்கு வா.

***

‘நண்பேண்டா’ லேபிளில் இதே போல் வேறு சில சம்பவங்களும் உள்ளன.

***


Read more...

Thursday, September 8, 2011

இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதற்காக?



இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - இப்படி ஒரு அழகான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது நடுநடுவே ட்ரிங்ட்ரிங்னு கைப்பேசி சத்தம். என்னடான்னு பார்த்தா, பாட்டு கனவில். கைப்பேசி ஒலித்தது நிஜத்தில். எவன்டா இந்த நேரத்திலேன்னா (மணி விடியற்காலை மணி மூன்று) - லோக்கல் நண்பரிடமிருந்து.

லோகல்னா ரொம்ப லோக்கல் - பக்கத்து வீட்டு நண்பர்தான் கூப்பிட்டது. என்ன பிரச்னைன்னு தெரியலேன்னு எடுத்துப் பேசினேன். "அவருக்கு ****** பிரச்னை வந்துடுச்சு. ரொம்ப அவஸ்தைப் படறாரு. உடனடியா மருத்துவமனை போகணும். கொஞ்சம் வரமுடியுமா" - பேசியது சகோதரி - நண்பரின் மனைவி.

சடார்னு எழுந்தேன். தங்ஸுக்கு சொல்லிவிட்டு, வண்டி சாவி எடுத்து வெளியே ஓடி, நண்பரை கூட்டிக்கிட்டு குளிரில் மருத்துவமனை அடைந்து அவரை சேர்த்தும்விட்டேன். டாக்டர் வந்து மருந்து மாத்திரை (ரெண்டும் ஒண்ணுதானே?) கொடுத்து பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைத்தார்.

இந்த ஊர் டாக்டர்கள் சும்மாவே இருக்க மாட்டாங்க. ஏதாவது ஜோக் அடிச்சிக்கிட்டு, வந்தவங்களோட லொடலொடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. நமக்கு வாய்ச்சவரும் அப்படியே. நம்ம நண்பரைப் பார்த்து சாதாரணமா கேட்டாரு.

”இவரு (என்னைக் காட்டி) உங்க சகோதரரா”?

அவரும் - ”இல்லீங்க டாக்டர்” அப்படின்னாரு.

அடப்பாவி, ஒண்ணுமண்ணா பழகினோமே, என் மனைவிகூட உன்னை அண்ணா அண்ணான்னு கூப்பிடுவாளே? அதை எப்படிடா மறந்தேன்னு
நினைக்கும்போதே, அடச்சே, என் மனைவிக்கு அண்ணன்னா நான் மச்சான்தானே, ஒரு தெய்வ மச்சானை எப்படி சகோதரன்னு சொல்றது என்பதால் நண்பர் மறுத்துட்டார்னு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

அந்த டாக்டரும் விடமாட்டேன்றாரு.

”அப்படின்னா, கலீகா (கூட வேலை பார்ப்பவரா)”?

நான் எதுவாயிருந்தா இந்த டாக்டருக்கு என்னன்னு எனக்கு புரியல. ஆனாலும் நம்ம நண்பர் அசராமே பதில் சொல்றாரு.

”கூட வேலை பார்ப்பவரா - இல்லே இல்லே”.

அடப்பாவி, நேத்திக்கு சாயங்காலம் வரைக்கும் நானும் இவனும் ‘கலீக்’தானே. ஒருவேளை இவன் வேலையை விட்டுட்டானா அல்லது எனக்கு வேலை போயிடுச்சா, எதுவும் புரியலியேன்னு கைப்பேசியில் மின்னஞ்சலை பார்க்கிறேன். வேலையை விட்டு தூக்கினதா எதுவும் செய்தி இல்லை. அப்பாடான்னு இருந்தது.

சரி. இத்தோட நிறுத்திக்குவோம்னு நான் சொல்றதுக்குள்ளே டாக்டர் மறுபடி - ”அப்போ நண்பரா?”.

அப்பாடா. இதுக்கு கண்டிப்பா “ஆமாம்” என்று சரியான பதிலைச் சொல்லி நண்பர் பரிசை அள்ளிச் செல்வாருன்னு பார்த்தா - என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு சொன்னாரு - “ம்ஹூம்”.

அட்றா அட்றா - இனிமே டாக்டருக்கு கேட்பதற்கு எந்த ‘ஆப்ஷனும்’ இல்லேன்னு நான் கணிச்சது சரியாப் போச்சு. டாக்டர் இப்ப டென்சனாகறாரு.

"அப்படின்னா இவர் யாரு? உங்களை இவரு ஏன் கூட்டிட்டு வரணும்?"

இப்பத்தான் நண்பர் தன் திருவாயைத் திறந்து பதில் சொன்னார்.

“இவரை சில வருடமா எனக்குத் தெரியும்.”

அதுக்கப்புறம் அந்த டாக்டர் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கலே. அவருக்கு என்ன புரிஞ்சுதோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு இன்று வரைக்கும் புரியாத விஷயங்களில் இதுவும் ஒண்ணு. நண்பர்(?) ஏன் அப்படி சொன்னாரு?



***



Read more...

Saturday, August 13, 2011

தமிழர்னா தமிழ்லேதான் பேசணுமா?


எங்க ஊரே மொத்தம் 10 கிமீ சுற்றளவுதான் இருக்கும். தமிழர்கள் (எனக்குத் தெரிந்து) சுமார் 15 குடும்பங்கள் இருக்கலாம். இது ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.

***

நாங்க இந்த ஊருக்கு வந்த புதுசு.

அந்த நண்பரை பார்த்தாலே தமிழர் என்று தெரிந்துவிடும். தெரிந்தது. போய் பேசினேன். அட, நீங்களும் தமிழ்தானா என்று பேசினார். தொலைபேசி எண்கள் / மின்னஞ்சல் முகவரிகள் பகிரப்பட்டன. பிறகு சிறிது நாட்கள் இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தோம்.

இரண்டாவது சந்திப்பும் நடந்தது. ஒரு பேரங்காடியில் இருந்தவரை சென்று, ஹலோ என்றேன். உடனே ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். நானோ - அட என்னங்க, என்னைத் தெரியலியா, நாம்தான் அன்னிக்கு பாத்துக்கிட்டோமே என்றேன் தமிழில். ஓ சாரி சாரி, மறந்துட்டேன் - என்றவாறு தமிழில் பேசினார். சரி போகுதுன்னு விட்டுட்டேன்.

உலகம் உருண்டைன்னா, எங்க ஊரும் உருண்டைதானே. மூன்றாவது முறையும் பார்த்துக் கொண்டோம். இப்போதும் ஆங்கிலத்தில் கதைத்தார். எனக்கு சரியான கோபம். நான் தமிழில் பேசப்பேச, அவர் ஆங்கிலத்தில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அது கூட பரவாயில்லை, அவர் கடைசியாக சொன்னது - ஒரு நாளைக்கு 100 பேரை பார்க்கிறோமா, அதனால், யாரு தமிழ்? யாரு ஆங்கிலம்னு தெரியல என்றார்.

இப்போது ஒரு முறை பதிவின் முதல் பத்தியை படிக்கவும். இருப்பதே 10-15 பேர்தான். அதிலும் ரெண்டு தடவை பார்த்து தமிழ்லே பேசியிருக்கோம். அதெப்படி அதுக்குள்ளே என் மூஞ்சி மறக்கும்? இனிமே இவன்கூட பேசப்போறதேயில்லை என்று தங்ஸிடம் கோபத்துடன் கூறினேன்.

இதுக்கு போய் எதுக்கு இப்படி கோவிச்சிக்கிறீங்க என்ற தங்ஸுக்கு நான் சுற்றிய கொசுவர்த்தி இதோ.

தில்லியில் இருக்கும்போது நாங்க 30 பேர் [கன்னிப்பசங்க] ஒரே வீட்டில் இருந்தோம். தமிழ், தெலுங்கு, ஒரியா இப்படி பல மாநிலங்களைச் சேர்ந்தவங்க அங்கே இருந்தோம். ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. தெலுங்கர்கள் சமாதானமடைந்தாலும், அந்த ஒரியாக்காரர் ’இந்தி’தான் பாக்கணும்னு அடம் பிடிப்பார். இதுக்காகவே, அவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, மெட்டிஒலி
பார்க்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டோம்.

அப்படி ஒரியாக்காரரையே தமிழ் பேச வைத்த காலம் போய், இந்த தமிழரை தமிழ் பேச வைக்க வேண்டியிருக்குதே என்று வருந்தினேன்.

கொசுவர்த்தி முடிந்தது.

பிறகு அந்த தமிழரை பார்ப்பதையே தவிர்த்தேன். நம்ம மூஞ்சி மறந்தவங்ககிட்டே நமக்கு என்ன பேச்சு?

அப்புறம் ஒரு நாள் - ஒரு படத்தில், கேப்டனும் சிம்ரனும் ஒரு ஆற்றுப்பாலத்தில் நேருக்கு நேர் சந்தித்ததைப் போல் நானும் அவரை சந்தித்தேன். மாட்டிக் கொண்டேன். ஆனால், இன்ப அதிர்ச்சி. இப்போது தமிழில் பேச ஆரம்பித்தார்.

சிரித்துக்கொண்டே நான் கேட்டது - ஏங்க, இன்னிக்கு 99 பேரைத்தான் பாத்தீங்களா? நான் தமிழ்னு எப்படி தெரிஞ்சுது?

கோபம் வரும்னு நினைத்தாலும், அப்படியில்லை. பகபகவென்று சிரித்த நண்பர் - சரி சரி. மறுபடி மன்னிச்சிடுங்க. இனிமே மறக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

பிறகு தமிழ் தமிழ் தமிழ்தான்.

வேலை மாறி வேறொரு ஊர் போனபிறகு மின்னஞ்சல் அனுப்ப ஆரம்பித்தார். ஆங்கிலத்தில்.

இப்போது மறுபடி தகராறு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். தமிழில் தட்டச்சி அனுப்புங்க. இல்லேன்னா பதில் போடமாட்டேன்.

அனுப்பறேன்னு சொல்லியிருக்கார். அனுப்புவார்.

***

Read more...

Monday, August 1, 2011

நன்பேண்டா - 1

சிலபல ஊர்களில், பலசில வருடங்களாக வேலை செய்வதால், வாழ்க்கையில் நிறைய நண்பர்கள் வந்து போவதுண்டு. ஓரிரு வருடங்கள் நட்பு பாராட்டியவர்களும் உண்டு - ஓரிரு நாட்களில் துண்டித்துப் போனவர்களும் உண்டு. பல துன்பமான நேரங்களில் மிகப்பெரிய உதவி செய்தவர்களும் உண்டு - இன்பமான நேரங்களில் காதுக்கினிய(!) வார்த்தைகளால் துன்புறுத்திவிட்டு சென்றவர்களும் உண்டு.

அப்படிப்பட்ட சில (எனக்கு) இன்பமான கணங்களையும், பல (அவர்களுக்கு) இன்பமான கணங்களையும் வரப்போகிற பதிவுகளில் பார்க்கலாம்.

***

ஒரு நெருங்கிய நண்பர். இவரை x என்றழைப்போம். தமிழர்தான். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவது, கலாட்டா செய்து பேசிக்கொள்வது என்று நன்றாக பொழுது போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் மதியம், ஒரு கடையில் நாங்கள் மேய்ந்து கொண்டிருந்தபோது, xம் குடும்பத்துடன் வந்திருந்தார். பேச்சுவாக்கில் நான் கேட்டேன் - ”இன்னிக்கு சாயங்காலம் என்ன ப்ரோக்ராம்?. சும்மா இருந்தீங்கன்னா வீட்டுக்கு வாங்களேன்”.

அந்த ஊருக்கு வந்த புதிதில் அதிகப்பிரசங்கித்தனமாய் (நன்றி: தங்ஸ்) எல்லோரிடமும் எங்கே போறீங்க, எங்கே வர்றீங்க, அது என்ன பையிலே - இப்படி ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவர் உடனே மறுத்து - ”இல்லேப்பா. இன்னிக்கு ஒரு டின்னர் இருக்கு. நாளைக்கு வேணா வர்றேன். சேர்ந்து சாப்பிடுவோம்” என்றார்.

நான் (மறுபடி அ.பி.) - ”ஹை. வெளியில் சாப்பாடா? ஜாலிதான். எங்கே டின்னர்?”

அவர் - ”அந்த நண்பரை உனக்குத் தெரியாது. ஊருக்கு புதுசா வந்திருக்கார். இன்னொரு நாள் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்".

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு போனார்.

அதற்குப்பிறகுதான், எனக்கு என் இன்னொரு நண்பர் (y), இரவு தன் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டிருப்பது நினைவுக்கு வந்தது. ஆனா, அது அன்றைக்குத்தானா, அடுத்த நாளான்னு ஒரு ச்சின்ன சந்தேகம். வீட்டுக்கு ஓடி வந்து மின்னஞ்சல் பார்த்தா - அன்றைக்கேதான். நல்லவேளை, நமக்கும் ஒரு டின்னர் மாட்டிக்கிச்சு. சாப்பாடும் ஆச்சு (அதுதானே முக்கியம்!) பொழுதும் போன மாதிரி ஆச்சுன்னு சந்தோஷமா அந்த வீட்டுக்குப் போனோம்.

நிறைய தமிழ் சினிமா / தொலைக்காட்சி தொடர்கள் பார்க்கிற எல்லோரும் இப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்க. கரெக்ட்.

நண்பர் xம் அதே வீட்டுக்கு வந்திருந்தார். y என்பவர், எனக்கும் xக்கும் தெரிந்த பொதுவான நண்பர்தான்.

பிறகென்ன, ஹிஹிதான். நான் இல்லேப்பா. அவரு.

இரவு வீட்டுக்குத் திரும்பி வந்த தங்ஸுக்கு அடுத்த 2 நாள் வரை கோபம் போகவில்லை. ”நம்மகிட்டேயே எப்படி பொய் சொல்றாங்க பாருங்க. உண்மையை சொல்லியிருந்தா, நான் என்ன கூடவே வர்றேன்னா சொல்லியிருப்பேன். இப்படி அல்பமா இருக்காங்களே”.

ஹிஹி. தங்ஸுக்கு தெரியாது - y வீட்டுக்குத்தான் போறேன்னு x சொல்லியிருந்தா, நானும் வர்றேன்னு கூடவே கிளம்பியிருப்பேன் - அல்பம் மாதிரி!

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP