Thursday, December 24, 2020

மேடை நாடகங்கள்

மேடை நாடகங்கள்

சாவிசி’யில் மௌலி & காத்தாடியின் பேட்டிகளைப் பார்த்தபிறகு, நானும் அந்தக் காலத்தில் நாடகங்களில் நடித்த....... பதறாதீங்க... நாடகங்களைப் பார்த்த நினைவுகள் வந்ததால்.. இந்த பதிவு. 

திருவல்லிக்கேணியில், (அப்பாடா, ஊர் பேர் வந்துடுச்சு!!) பார்த்தசாரதிஸ்வாமிசபா (ஒரே சொல் - நன்றி அலெக்ஸ்!) எங்க வீட்டிலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் இருந்தது. நான் (அப்போதும்) சின்ன வயசாக இருந்தப்போ, அது அரங்கமா இருந்தது. நாடகங்கள் தொடர்ச்சியாக நடக்கும். எங்க + அக்கம்பக்க பள்ளிகளின் ஆண்டு விழாக்களும் அங்கேதான் நடக்கும். பிறகு அந்த அரங்கத்தை இடித்து அபார்ட்மெண்ட்களாக கட்டிட்டாங்க. இப்போ அந்தந்த வீடுகளில், தொலைக்காட்சியில் மட்டும்தான் நாடகங்கள் வருது. ஆனா, அவற்றை பார்க்க வெளியாட்களுக்கு அனுமதியில்லை. சரி விடுங்க. 

ஏதோ ஒரு விசு படத்தில் ஒரு வசனம் வரும். ‘ஊரில் இருக்கும் 2 நாடக க்ளப்களில் நான் உறுப்பினர். மாதம் 4 நாடகங்களுக்கு டிக்கெட் வரும். ஆனா இவ எந்த நாடகங்களுக்கும் போக மாட்டேங்கறா’. தீபாவளி சீட்டு மாதிரி அப்போ இருந்த நாடக க்ளப்களில் எங்க மாமாவும் ஒரு மெம்பர். இல்லையில்லை. அவரே ஒரு பார்ட்னர் மாதிரி. 2-3 பேர் நண்பர்கள் சேர்ந்து ஒரு க்ளப் வைத்திருந்தனர். இந்த சபாவில் நடக்கும் நாடகங்களுக்கு மொத்தமாக டிக்கெட் வாங்கி, உறுப்பினர்களுக்கு கொடுக்கும் வேலை. 

வாராவாரம் நடக்கும் நாடகங்களுக்காக இவர் அந்த அரங்கத்தில் இருக்க, நாங்க சிறுவர்கள் அங்கேயே விளையாட்டிருப்போம். நாடகம் துவங்கும்போது, வாசலில் நின்று, சீட்டு கிழித்து அனைவரையும் உள்ளே அனுப்பும் வேலை இவருக்கு. என்னை ஒரு நாற்காலியில் அமர்த்தி, ‘நான் வந்து கூட்டிட்டுப் போறவரை எங்கேயும் ஓடிடாதே. இருட்டில் தேடமுடியாது’ன்னுட்டு போயிடுவார். நாமும் எதுவும் புரியாவிட்டாலும், நாடகங்களைப் பார்த்திருந்தது வழக்கமா இருந்தது. ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.சேகர், காத்தாடி... என இவர்களின் நாடகங்களெல்லாம் அங்கு பார்த்த நினைவு இருக்கு. 

அப்படி துவங்கிய நாடகங்களைப் பார்க்கும் படலம், பிறகு, நினைவு தெரிந்தபிறகு (அப்படின்னா?) கலைவாணர் அரங்கம், ராணி சீதை ஹால், வாணி மகால் இவற்றிலெல்லாம் தொடர்ந்தது. மேற்கூறியவர்களுடன் பிறகு ரசித்துப் பார்த்தது - கிரேசியின் நாடகங்கள்.

பல முறை பார்த்த நாடகம்னா நினைவுக்கு வருவது - எஸ்.வி.சேகரின் ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட். பேய் பிடித்த அவர், ஒரு கதவில் வெளியேறி, சில நொடிகளில் இன்னொரு கதவு வழியா வரும்போது, வேறு உடைகளை அணிந்து வருவதைப் பார்த்தெல்லாம் அந்த காலத்தில் கை தட்டியது, விசில் அடித்தது (சரி.. வெறும் காத்துதான்) இப்போ நினைத்தாலும்... ஒண்ணும் ஆகவில்லை... சும்மா சொன்னேன். 

LIVE நாடகங்கள் என்பதால், அதில் தெரியும் பிழைகள், அவற்றை சமாளிக்க அவர்கள் சொல்லும் வசனங்கள்னு அவையும் ரசிக்கும்படியா இருக்கும். 

ஒரு முறை ஒரு கேரக்டர் தன் சட்டைப்பையிலிருந்து எதையோ எடுக்கும்போது, சில காகிதங்கள் கீழே விழுந்துடும். அவர் அதை எடுக்காமல் திரும்பிவிட, சேகர் அவரைக் கூப்பிட்டு - ‘இந்த குப்பையை யார் அள்ளுவா? நானா? இப்படி குப்பை போட்டா, சபாகாரர் கொடுக்க வேண்டிய பணத்தை குறைச்சிடுவார். ஒழுங்கா எடுத்துப் போங்க’ன்னு அவரைத் திட்டுவார். 

இன்னொரு நாடகத்தில், ஒருவர் மைக்கிற்கு சிறிது தூரத்தில் நின்று பேச, மேடையிலேயே ‘உங்களுக்கு இங்கே நின்று பேசணும்னு மார்க் போட்டிருக்கில்ல. பின்னே ஏன் அங்கே நின்று பேசுறீங்க?’ன்னு ஒரு வசனம். 

இதெல்லாம் அந்தந்த நேரத்தில் சேர்க்கப்பட்ட வசனங்கள்னு புரியும். இதே போல பல சொல்லலாம். ஆனா மறந்துடுச்சு. ஆகவே சொல்ல முடியாது. 

1995-96 நினைக்கிறேன். இதுவே சோ இறுதியாக நடிக்கும் மேடை நாடகம்னு விளம்பரம் வந்திருந்தது. கலைவாணர் அரங்கில் தொடர்ச்சியாக ஒரு வாரம் அவருடைய நாடகங்கள். ஒரு 2 நாள் மட்டும் போய் பார்த்தோம். 

1999ல் சென்னையை விட்டபிறகு, தில்லியில் தமிழ்ச்சங்கத்திற்கு அருகிலேயே பல காலம் வசித்தாலும், பல நாடகங்கள் அங்கு நடந்திருந்தாலும், ஒருமுறைகூட போகவில்லை. (வாராவாரம் சனிக்கிழமை திரைப்படத்திற்கு மட்டும் சென்றுவிடுவோம்!!).

அந்த பழைய நாடகங்கள் பெரும்பாலும், யூட்யூப்பிலும், mp3யாக இப்போதும் கிடைக்குது. ஆனா, நேரில் பார்க்கும் அந்த அனுபவம் இதில் இல்லாததால், இவற்றைப் பார்க்கும் / கேட்கும் ஆர்வமே வரவில்லை. 

பல்லாண்டுகள் இத்தகைய நாடகங்களை பார்த்த பாதிப்பில் எழுதியதே இந்த ‘நாடகம் மாதிரி’ மினி தொடர். படிச்சிட்டு திட்டக்கூடாது. நோ பேட் வேர்ட்ஸ்.

http://boochandi.blogspot.com/2009/03/1.html


***


Read more...

Tuesday, July 21, 2020

புத்தகங்கள் (மொழிபெயர்ப்பு)


*** இவை அனைத்தும் கன்னடம் டு தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் பற்றியது மட்டுமே.
** இவை அனைத்தும் மாத்வ சித்தாந்தத்தைப் பற்றிய புத்தகங்கள் மட்டுமே.

* சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாய் சில கட்டுரைகளை மொழிபெயர்த்து ப்ளாக்கில் போட்டு, வாட்சப் லிங்க் மூலமா பலருக்கு அனுப்பிச்சேன்.
** பலர் தொலைபேசி, அருமையா இருக்கு, புத்தகமா போடுங்க நாங்க வாங்கறோம்னாங்க. (அதில் சிலரைப் பற்றிதான் இந்த பதிவே!!).

* சரின்னு புத்தகங்கள் போடத் துவங்கினேன். (இதுவரை 10). அவங்களிடம் சொன்னேன்.
** புத்தகம் படிக்க கஷ்டம், ஈ புக் போடுங்க. படிக்கறேன்னாங்க.

* சரின்னு கிண்டிலில் எல்லா புத்தகங்களையும் இறக்கினேன் (இதுவரை 28). அவங்களிடம் சொன்னேன்.
** புத்தகமெல்லாம் பெருசு பெருசா இருக்கு, சின்ன சின்னதா பிரிச்சி மாதா மாதம் படிக்கற மாதிரி செய்ங்கன்னாங்க.

* சரின்னு ஒரு மாத இதழ் துவக்கினேன். அவங்களிடம் சொன்னேன்.
** அந்த மாத இதழை ஈ-புக்கா போடுங்க. படிக்கறோம்னாங்க.

* சரின்னு அதை ஒரு appல் போட்டேன். அவங்களிடம் சொன்னேன்.
** பெரிய பெரிய கட்டுரைகள் படிக்க கஷ்டமாயிருக்கு. ஏதாவது கேள்வி பதில் தொகுப்பு மாதிரி இருக்கான்னாங்க?

* சரின்னு ஒரு app உருவாக்கி, அதில் 5,000 கேள்வி பதில் போட்டேன். அவங்களிடம் சொன்னேன்.
** நமக்கு எதுவுமே தெரியல. எங்களுக்கு புரியற மாதிரி ஏதாவது சொல்லுங்கன்னாங்க. (அல்லது) எனக்கு சில கேள்விகள் இருக்கு. அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கன்னாங்க.

** OTOH, இந்த அனைத்தையுமே வாங்கி, படிச்சி, அடிக்கடி சந்தேகம் கேட்டு, நம்மை ஊக்குவிப்பவர்களும் உண்டு.

** So, இதிலிருந்து புரிஞ்சிக்கிட்டது என்னன்னா, ஒண்ணுமில்லே. அவ்வளவுதான். :-)

** இதில் யார் மீதும் கோபமோ, வருத்தமோ நமக்கு இல்லை. நாம் செய்வதெல்லாம் நம்ம திருப்திக்கு மட்டுமே. ப்ளஸ் கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - இதுக்கும்தான்.

***

Read more...

Thursday, July 16, 2020

ராமாயணம் - கன்னடப் பாடல்கள்சென்ற ஆண்டு அக்டோபர். சென்னையிலிருந்து ஒருவர் ஒரு 150 பக்க PDFஐ அனுப்பியிருந்தார். கையெழுத்துப் பிரதி. மிகவும் பழைய புத்தகம்னு புரியுது. கன்னட எழுத்துக்கள். எனக்கு கன்னடம் தெரியாது, ஆகவே, இதை படித்து தமிழில் தட்டச்சி கொடுக்க முடியுமான்னு கேட்டார். முதல் பக்கத்தை மேய்ந்தபோது, பல சொற்கள் புரிந்தும், சில புரியாமலும் இருந்தன. சரி நான் பார்த்து சொல்கிறேன்னு சொல்லி விட்டுட்டேன். 

நமக்கு ஏற்கனவே இருந்த சிலபல ப்ராஜெக்ட்ஸ்களை செய்து கொண்டேயிருக்க, அவரும் நடுநடுவே நிலவரத்தை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் இதோ அதோன்னு சொல்லிட்டே. இந்த ஆண்டு மார்ச் அங்கிருந்து கூப்பிட்டார். அந்த டாகுமெண்ட் எனக்கு கொஞ்சம் தமிழில் கொடுங்க. எனக்கு 70 வயசு. நான் கண் மூடுவதற்குள் அதை தமிழில் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும். இதுவரை 10-15 கன்னடர்களை நான் கேட்டாச்சு. யாருக்கும் நேரம் இல்லை / முடியவில்லை / தெரியவில்லை / புரியவில்லை / ஆர்வம் இல்லை. நீங்க இதை முடித்துக் கொடுத்தால், இதை என் குடும்பம் என்றைக்கும் மறக்கவே மறக்காது.

என்னடா இது அவ்வளவு முக்கியமா? சரி, இதன் வரலாறு என்னன்னு கேட்டால்: 

1820-1890 வரை வாழ்ந்த இவருடைய தாத்தாவுடைய தாத்தா எழுதிய புத்தகம் (பாடல்) இது. பெயர் நரஹரி தாசர். அங்கிதம் (முத்திரை) நாமகிரீஷ. மைசூர் சமஸ்தானத்தில் புலவராக (கவிஞராக) இருந்திருக்கிறார். பிறகு ஏதோ ஒரு சமயத்தில் அவர்கள் தமிழகம் வந்துவிட, தமிழர்களாகிட்டாங்க. இப்போ இவருக்கு கன்னட கொத்தில்லா. 

சரி, இது என்ன புத்தகம்னு தெரியுமான்னா, ராமாயணம் - தீர்க்க கிருதி. (நீண்ட பாடல்). இதை தயவு செய்து... மறுபடி பழைய ராமாயணம்!!.

இப்போ இதில் ஆர்வம் வருது. ஆனா, நமக்கு அச்சிட்ட (printed) புத்தகங்கள் மட்டுமே வேகமாக படிக்க முடியும். கையெழுத்து படிக்க ரொம்ப தாமதம் / நேர விரயம் ஆகும். அதுவும் இதில் ஏகப்பட்ட அடித்தல், திருத்தல்.நம் கன்னட சந்தில் சில பேருடன் முன்னர் பேசியிருந்தாலும், மிகவும் மொக்கையான (சிறியதான) ஓரிரு உதவிகளை கேட்டு, அவர்கள் அதையே செய்யாமல் விட்டதால், அவர்களைக் கேட்காமலேயே செய்யணும்னு முடிவு. இதில் இருக்கும் சிக்கல், படிப்பவர் நேடிவ் கன்னடராகவும், சம்ஸ்கிருதம் & ராமாயணம் தெரிந்தவராகவும் இருக்கணும். அப்படி ஒருவரை தேடணும்னு பார்த்தேன். 

நம் அலுவலக நண்பர் ஒருவரைக் கேட்டு, அவரும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு 40 பக்கம் வரை கடகடன்னு முடித்தனர். ஓரளவுக்கு சரியாகவே இருந்தாலும், சரி முடித்து விடலாம்னு நினைச்சா, அதன் பிறகு நீண்ட ப்ரேக் விட்டுட்டாங்க. இப்போ வேற யாரையாவது பிடிக்கணும். 

எதிர் வீட்டு சார் ஒருவர் கொரோனாக்கு முன்பாக சனி & ஞாயிறு விடுமுறையாக இருந்தாலும் தவறாமல் ஆபீசுக்குப் போய்விடுவார். ஒரே ஒரு நாள்கூட வீட்டில் இருந்தால் என்ன செய்வதென்றே தெரியல. செம போர் அடிக்குது. இப்படி சொன்னவரை கொரோனா வீட்டிலேயே பின் போட்டு அழுத்த, அவரிடம் போய் - சார் இப்படி இப்படி விஷயம். உங்க உதவி தேவைன்னு கேட்டு, வழக்கம்போல டிஸ்க்ளெய்மரும் சொன்னேன். முடியலேன்னா பரவாயில்லை. ஒன்றும் பிரச்னையில்லை. நீங்கதான் செய்யணும்னு கட்டாயமில்லை. சொல்லிடுங்க. நான் வேற ஆள் பார்த்துக்கறேன். 

இல்லேப்பா, ஒரே ஒரு வாரயிறுதி போதும். முடிச்சி கொடுத்துடறேன். ஒன்றும் வேலையெல்லாம் இல்லை. வழக்கம்போல சும்மாதான் இருப்பேன். -- அவ்வளவுதான், அடுத்து மூன்று வாரங்களுக்கு அவர் நம் பக்கம் திரும்பவேயில்லை. நேராக பார்த்தாலும், டேக் டைவர்ஷன் போட்டு திரும்பிடுவார். சரி இவரை நம்பி பிரயோஜனமில்லை. 

நம் பழைய வீட்டில் ஒரு அக்கா. பேராசிரியை. சரி அவங்களிடம் கேட்கலாம்னு கேட்டாச்சு. கண்டிப்பா செய்து தர்றேன்னு சொல்லி, ஒரே வாரத்தில் சுமார் 30-40 பக்கங்கள் வரை படித்தும் ரெகார்ட் செய்து கொடுத்தார். அவ்ளோதான் முடிஞ்சுது. வேற வேலை இருக்குன்னுட்டாங்க. பரவாயில்லை. மிக்க நன்றின்னு அந்த ரெகார்டிங்கை வாங்கினேன். 

அவங்க ரெகார்டிங்கில் ஒரே ஒரு பிரச்னைதான். வேகம் வேகம் அப்படியொரு வேகம். நமக்குத் தேவையே, சிலபல கடினமான சொற்கள், அடித்து திருத்திய இடங்களில் இருக்கும் வாக்கியங்கள் இப்படி. ஆனா இந்த அக்காவோ, 

* சிக்கலான சொற்கள் வந்தால் அதை படிக்காமல் விடுவது
* அடித்து திருத்தப்பட்ட சொற்கள் வரும் இடத்தில் மூச்சு வாங்கும் சாக்கில், அவற்றை முழுங்கிவிடுவது
* வாக்கியத்தின் கடைசி சொற்களை முழுங்கிவிடுவது.
* நடுநடுவே சில வரிகளையே விட்டுவிடுவது

என ரெகார்டிங்கைக் கொடுத்தார். 

ஆக, நம் தேவைகள் முழுமையா பூர்த்தி ஆகவில்லை. சரி மேடம், இது போதும் மிக்க நன்றின்னு சொல்லியாச்சு.

அடுத்து இன்னொருவர். அதே டிஸ்க்ளெய்மர். வாரயிறுதி மாலையில் நான் ஒரு அரை மணி ப்ரீயா இருப்பேன். அப்போ செய்யறேன். (வாரம் முழுக்க அப்படி என்னதான் செய்றார்னா, அது மிகப்பெரிய ரகசியம்!! சும்மாதான் இருப்பார்). அவரும் ஒரே ஒரு வாரம் ஒரு ஐந்து பக்கங்கள் படித்துக் கொடுத்தார். அஷ்டே.

இப்படியாக சுமார் 7-8 பேரை அணுகி, அதில் 3-4 பேர் கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொடுக்க, அவற்றைத் தொகுத்து, அலசி, அடுக்கி, ஆராய்ந்து, சிக்கெடுத்து, தட்டச்சி, தமிழில் கன்னடப் பாடல்களைப் படிக்கணும்னா போடவேண்டிய 1,2,3,4 ஆகியவற்றை போட்டு, சரிப்படுத்திக் கொடுத்து, முடிக்க வேண்டிய வேலை இந்த வாரயிறுதியுடன் முடிஞ்சிடும்(னு நம்பறேன்).

இது வரை வந்ததை படித்துப் பார்த்தால், ராமாயணத்தை - குட்டி குட்டி பாடல்களாக -  சுமார் 100 பாடல்கள் - வெவ்வேறு ராகங்களில், நல்ல எதுகை மோனை சந்தங்களுடன் இயற்றியிருக்கிறார் தாசர். அவர் கொள்ளு-கொள்ளு-பேரனின் ஆசைப்படி, தமிழில் புத்தகமாக வந்தால் நல்லது. நமக்கு அன்பளிப்பாக ஒரு தொகை தர்றேன்னு சொல்லியிருக்கார். நமக்காக இல்லைன்னாலும், நமக்கு மேற்படி உதவியவர்களுக்கு பகிர்ந்தளிக்கணும். 

ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஸ்ரீராமார்ப்பணமஸ்து.

***

Read more...

Saturday, April 25, 2020

என்னிடம் ஏன் குறைவான சட்டைகளே இருக்கின்றன?


சிறிய வயதில்.. என்ன சிறிய வயதில்.. என்னுடைய 22 வயது வரையே என்னிடம் இருந்தது மொத்தம் 3-4 சட்டை பேண்ட்கள்தான். அதுவும் பம்மல் கமல் சொல்கிற மாதிரி சாயம் போனதாகதான் இருக்கும். சட்டை அளவு சிறியதாக இருந்தபோது தீவளிக்கு தீவளி அப்பா சட்டை வாங்கிக் கொடுத்த நினைவு. அளவு பெரிதானபிறகு அதுவும் கிடையாது. 

ஒரு முறை உறவினர் ஒருவர், அவருடைய உறவினர் யாருடைய திருமணத்திற்கோ போகவேண்டி, என்னை துணைக்கு வரச்சொல்லியிருந்தார். அது ஒரு பெரிய IAS அதிகாரி வீட்டுத் திருமணம். அதற்காக நல்ல சட்டை, பேண்டா போட்டுட்டு வான்னு சொல்லிட்டார். நல்ல சட்டை பேண்ட்க்கு நான் எங்கே போறது?. பக்கத்து வீட்டுப் பையனிடம் சட்டை மட்டும் கைமாத்து வாங்கிக்கிட்டு போய் வந்தாச்சு. பேச்சுவாக்கில் அவரிடம் இது இரவல் சட்டைன்னு சொல்ல, நான் உனக்கு வாங்கித் தர்றேன்னு சொன்னவர், மறந்துவிட்டு, இன்று வரை அதை நினைவுபடுத்தியும் அவர் வாங்கித் தரவேயில்லை. 

பிறகு, வேலைக்கு போகத் துவங்கும்போதே உருப்படியான சட்டை வாங்கியதாக நினைவு. ஆனால், அப்போதும் ஒரு சமயத்தில் 5-6 சட்டைகள், 2-3 டி-ஷர்ட்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. 

நினைவு தெரிந்தும் (அப்படின்னா என்ன?) சட்டை வாங்க வசதியில்லாமல் இருந்ததாலோ என்னமோ, எப்பவும் நமக்குன்னு சட்டை வாங்குவதில் / வைத்துக் கொள்வதில் ஒரு ஈடுபாடு / ஆர்வம் (இரண்டும் ஒண்ணுதானோ?) இருந்ததில்லை. வாரத்துக்கு ஐந்து நாளில் ரிப்பீட் செய்யாமல் இருந்தால் போதும். அவ்வளவே வைத்துக் கொண்டிருந்தேன். 

நாம் வாங்கும் சட்டைகள், வேறு ஏதாவது திருமணத்திற்கு நமக்கு பரிசாக வரும் சட்டைகள், மராத்தன்களில் கொடுக்கும் பனியன்கள் என எதையும் நாம் வைத்துக் கொள்வதில்லை. மனதில் என்னுடைய சிறுவயது கொசுவர்த்தி வர, அந்த நிலையில் இருந்த அண்ணன் பையன், அக்கா பையன் இவங்களுக்குக் கொடுத்துடுவேன். (இப்போ அந்த பசங்களும் நல்ல நிலைக்கு வந்து, கொரோனா பட்டியலில் டாப்-3யில் இருக்கும் நாடுகளில் டாப்பா, நலமா இருக்காங்க). அதைத்தவிர மாமனார் வரும்போதெல்லாம் பாசமாக ஒரு ட்-ஷர்ட் வாங்கித் தருவார். அதை அப்படியே பத்திரமா வைத்திருந்து, தம்பி வரும்போது அப்படியே பார்சல். கொஞ்ச நாள் கழித்து, எங்க அப்பா வாங்கித் தந்த சட்டை எங்கேன்னு DW கேட்க, எங்கேயாச்சும் மேலே பெட்டியில் இருக்கும், அப்புறம் தேடிக்கலாம்னு சொல்லி சமாளிச்சிடுவேன். 

ஒரு காலத்தில், அமெரிக்காவில் இருந்தபோதும் அதே நிலைதான். ஒரு கிழமைக்கு ஒரு சட்டை. கருப்பு திங்கள், வெள்ளை செவ்வாய்ன்னு சன் டிவி அறிவிப்புகள் போல அந்தந்த கிழமைக்கு அந்தந்த நிற சட்டைகள். ஊருக்குப் போன புதிதில் அனைவரையும் போல, ஊருக்கு புகைப்படங்களை அனுப்பணும்ற கட்டாயத்திற்காக பல வாரயிறுதிப் பயணங்களை மேற்கொண்டோம். அப்போது நம்மிடம் இருந்த 1-2 டீஷர்ட்களையே போட்டுட்டுப் போக, இங்கிருந்த DWவின் பாட்டி (85+ வயதிலும் அவங்க கண் அவ்ளோ ஷார்ப்) - என்ன மாப்பிள்ளை எப்போவும் ஒரே சட்டையே போட்டிட்டிருக்காரு? அவர்கிட்டே ஒரேயொரு சட்டைதான் இருக்கான்னு கேட்டுவிட, ஒரே களேபரம்தான். இன்னிக்கே நிறைய சட்டை வாங்கறோம்னு DW மேலுக்கும் கீழுக்கும் (அறைக்குள்ளேயேதான்) குதிக்க, சரின்னு போய் நிறைய (2தான்) வாங்கி வந்தோம். வந்ததும், பழைய சட்டைகளை ஃப்ரிட்ஜ், அவன் இவற்றைத் துடைக்க வைத்துவிட, மறுபடி டி-ஷர்களின் எண்ணிக்கை அதே 2-3 எட்டியது!!.

இருக்கும் 5-6 சட்டைகளை மேலும் எப்படி குறைப்பதுன்னு யோசித்தபோது, செமையான ஐடியா சிக்கியது. ஒரே நிற  சட்டை மட்டும் வைத்துக் கொண்டால் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கருப்பு-வெள்ளை மட்டும் போதும் இதில் 2 அதில் 2ன்னு முடிவெடுத்தா, வீட்டில் தடை. கருப்பு வேண்டாம். வேற வேறன்னு சொல்ல, சரி அப்துல் கலாம் மாதிரி தலைமுடிதான் மாத்திக்க முடியல. அவர்போல நீல சட்டை?ன்னு கேட்க, அப்ரூவ்ட். ஆக, இப்போ இருக்கிறது (50 shades of blue மாதிரி) 5-6 நீல சட்டைகள் மட்டுமே. 

சட்டை ரொம்ப பெரிசாயிடுச்சு. ஐ மீன் பதிவு ரொம்ப பெரிசாயிடுச்சோ? இத்தோட முடிச்சிக்கலாம். நன்றி.

***
Read more...

Monday, October 28, 2019

கைப்பேசி வழிப்பறியா?


சமீபத்தில் ஒரு நாள், நங்கநல்லூரில், மணிரத்னம் / பிசிஸ்ரீராம் படக்காட்சி போல இருந்த, வெளிச்சம் குறைந்த ஒரு சாலையில், ரண்டக்க ரண்டக்க என்று மனதில் பாடியவாறு நடந்து கொண்டிருந்தேன்.

ஆள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. ஒரு மிக முக்கிய தொலைபேசி அழைப்பை (மோடி இல்லை. அதற்கு முந்தைய நாள்தான் அவருடன் பேசியிருந்தேன்) எதிர்பார்த்திருந்ததால், கைப்பேசியை கையிலேயே வைத்து, அடிக்கடி எடுத்து பார்த்தவாறு போனபோது, எதிரில் ஒரு ஸ்கூட்டரில் ஒரு பெண் வண்டி ஓட்ட, பின்னாடி ஒரு பையன் அமர்ந்து வந்தார். ஜானவாசக் கார் மாதிரி இது ஜானவாச ஸ்கூட்டர் போலன்னு நினைத்தேன். மிகவும் மெதுவாக ஓட்டி வந்த அந்தப் பெண், வெயிலும் இல்லையே, ஏன் இப்படி முழுக்க மூடியவாறு வண்டியை ஓட்டிப் போறாங்கன்னு நினைத்தவாறு - ரண்டக்க...

நம்மைக் கடந்து போகும்போது, அந்தப் பெண் ‘மொபைல்’னு கத்தியது கேட்டது. சரி, அவங்க மொபைல் விழுந்துடுச்சு போல; இல்லையே எதுவும் விழுந்த மாதிரி தெரியலையேன்னு நினைத்து, நான் ’பாட்டு’க்கு போயிட்டிருக்கேன். நமக்குப் பின்னால், ’க்றீச்’சென்று தரையில் கால்களை தேய்க்கும் சத்தமும் (அந்தப் பெண் வண்டியை நிறுத்தறாங்க!!), அந்தப் பையன் இறங்கி என் பின்னால் வரும் சத்தமும், எனக்கு முன்னால் அவனுடைய நிழலும் (முறையே) கேட்டது / தெரிந்தது.

இந்த இடத்தில் 5 நொடிகள் freeze பண்றோம். எவ்வளவு செய்திகளைப் படிக்கிறோம். கைப்பேசி வழிப்பறி நம் நண்பர்களுக்கே ஆகியிருக்கு என்னும் தகவல்களெல்லாம் நினைவுக்கு வர, *Freeze முடிந்தது* கையில் இருந்த கைப்பேசியை உடனடியாக பேண்ட் பாக்கெட்டில் போட்டுட்டேன்.

என்னைக் கடந்து, எனக்கு முன் ஓடிய அந்தப் பையனை, ஸ்கூட்டரில் வந்து அந்தப் பெண் வண்டியில் ஏற்றிப் போயிட்டார்.

கேள்விகள்:
* மொபைல்னு ஏன் கத்தினாங்க?
* கீழே விழுந்திருந்தா, அதைத் தேடியது போலவும் இல்லையே?
* வீட்டிலேயே மறந்துட்டு வந்ததற்கான எச்சரிக்கைன்னா, அந்தப் பையன் இறங்கி ஓடி வந்தது ஏன்?
* என் கைப்பேசியைப் பார்த்துதான் மொபைல்னு கத்தினாங்களா?
* அதைப் பறிக்கத்தான் அந்தப் பையன் ஓடிவந்தானா?

இப்படி பல சந்தேகங்கள்.

கைப்பேசி போயிருந்தாலாவது, வீட்டில் சொல்லி, ஒரு புது கைப்பேசிக்கு அனுமதி வாங்கி, வாங்கியிருப்பேன். அதுவும் இல்லை. இந்த காலத்து பசங்க, எதைத்தான் ஒழுங்கா செய்றாங்க?

ம்ஹும்.

***


Read more...

Sunday, July 7, 2019

பிறந்த நாள் வாழ்த்துகள்!!நண்பர்கள் / சொந்தக்காரர்கள் அப்படின்னு பல பேருக்கு தினம் தினம் பிறந்த நாள் / திருமண நாள்னு பல சிறப்பு நாட்கள் வருகின்றன. அதில் என்ன பிரச்னைன்றீங்களா? அதில் ஒண்ணும் பிரச்னையில்லை. அதுக்கு அந்தந்த வாட்சப் க்ரூப்பில் இருக்கும் பலர் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள்னு (அவங்கவங்க சார்புக்கேற்ப!!) வாழ்த்துவாங்க. சரி. இதில் என்ன பிரச்னைன்றீங்களா? ஹிஹி. இதிலும் ஒண்ணும் பிரச்னையில்லை. 

அப்போ எதுக்குடா இந்த பதிவுன்றீங்களா? விஷயத்துக்கு வர்றேன். இந்த வாழ்த்துக்கு  நன்றி சொல்றாங்க பாருங்க. அதுதான் விஷயம். 

இப்போ கல்யாண வீடுகளில் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருப்போம். (சரி. மடங்களில் / கோயில்களில்!!). ஒரு இனிப்போ, பாயசமோ பரிமாறிக் கொண்டிருக்கும்போது, நமக்கு முன் இலைக்கு வரும்போது அது முடிஞ்சிடும். எடுத்துட்டு வர்றேங்கன்னு போவார். எடுத்துட்டும் வருவார். ஆனா, நம் இலையை விட்டுட்டு அடுத்த இலையிலிருந்து துவங்கிப் போயிடுவார். கேட்டால், ஒருவருக்கு ஒண்ணுதாங்க / ஒரு கரண்டிதாங்கன்னு சொன்னாலும் சொல்லிடுவாரோன்னு பக்கத்து இலையையே முறைச்சிப் பார்த்திருட்டிருப்போம். 

அதுபோலவே இந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வதும். முதலில் நான் இதை கண்டுகொள்ளவில்லை. நான் வாழ்த்து சொல்றதோட என் கடமை முடிந்ததுன்னு விட்டுட்டு வந்துடுவேன். நன்றி சொல்றாங்களோ இல்லையோ பார்ப்பதில்லை. 

போன ஆண்டு ஒரு புதிய குழுவில் சேர்ந்திருந்தேன். சரி. பேரும் சொல்லிடறேன். துவக்கப்பள்ளி 1-5 வகுப்பில் கூடப் படித்தவர்கள். ஆண்/பெண் என வகுப்பில் அனைவரையும் ஒருவர் கண்டுபிடித்து சேர்த்திருந்தார். நான் சேர்ந்தபிறகு, இன்னும் ஓரிருவரே பாக்கின்னு சொல்லிட்டிருந்தாங்க. 

சேர்ந்த புதிதில் அனைத்து பிநா, திநாக்கும் பறந்து பறந்து வாழ்த்து சொல்லிட்டிருந்தேன். ஒரு முறை ஒருவர் யாரோ ஒரு பொண்ணுக்கு நன்றி சொல்ல மறந்துட்டாரு போல. டக்குன்னு ஒரு கமெண்ட் வந்துச்சு. ’ஏண்டா, புதுசா வந்தவங்க வாழ்த்துக்கு நன்றி சொல்லுவே, எங்களுக்கு சொல்ல மாட்டியா?’. வந்த வேகத்தில் கமெண்ட் டெலீட்டும் ஆயிட்டுச்சு. ஆனாலும் நான் படிச்சிட்டேன். 

அன்றிலிருந்து அந்த க்ரூப்பும் ம்யூட்டில் போயிடுச்சு. யாருடைய பிநாதிநா’க்கும் வாழ்த்து சொல்வதில்லை. ஆனா வேறு பல குடும்ப க்ரூப்களில் சொல்ல வேண்டிய கட்டாயம். அந்த பொண்ணு மாதிரி, நமக்கு நன்றி சொல்றாங்களான்னு பார்ப்போம்னு சும்மா பார்க்கத் துவங்கினேன். (தேவையில்லாத ஆணின்னு பிறகே புரிந்தது!!)

ட்விட்டரிலாவது மக்கள் DMல் நன்றி / ட்வீட்டை Like போல செய்திடுவார்கள். ஆனா நமக்குன்னு வாய்ச்சிருக்கிறாப்போல வாட்சப் க்ரூப்களில்:

* நாம வாழ்த்து சொல்வதற்கு முன் தனித்தனியாக அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பவர், நமக்குப் பின் ‘அனைவருக்கும் மிக்க நன்றி’ன்னு முடிச்சிடுவார். நம்ம பேர் தனியா வராது. அவ்வ்..

* சுமார் 20-25 பேருக்கு தனித்தனியா நன்றி சொல்பவர், சரியாக நம்ம பேரை மட்டும் விட்டுடுவார். இது மட்டும் 3-4 தடவை நடந்திருக்கு. சரி, நாம நம் கடமையை செய்வோம் பலன் வேண்டாம்னு விட்டாச்சு. ம்ம்..

* நமக்கு முன் அனைவருக்கும் நன்றி சொல்பவர், நாம் சொன்னபின், காணாமலேயே போய்விடுவார். ஒன்லி அப்ளை நோ ரிப்ளை. சரி போகுது.

* ஓரிருமுறை நமக்கு மட்டும் நன்றின்னு சொல்லாமல், Sure / OK & இன்னபிற பதில்லாம் போடுவாங்க. அடேய்ஸ்.. எனக்கு மட்டும் ஏண்டா இப்படி...

இது மாதிரி பல வகைகள். ஓரிரு முறை நன்றிப்பான்னு தனியா குறிப்பிட்டும் பதில் போட்டிருக்காங்க. அதையும் சொல்லிடறேன். 

சரி இவ்ளோ சொல்றியே, உன் பிநாதிநா வாழ்த்துக்கு நீ நன்றி சொல்றியான்னு கேட்டா, ஹிஹி. என் பிநாதிநாவை நான் எங்கும் ரிஜிஸ்டர் செய்யவில்லை. FBயில் / ட்விட்டரில் வராது. ட்விட்டரில் ஒரே ஒருவர் மட்டும் நினைவில் வைத்து வாழ்த்துவார். 2 நாள் முன்னாடி அவருக்கும் ஒரு warning கொடுத்து, TLல் வாழ்த்த வேண்டாம்னு சொல்லிடுவேன். பிரச்னை சால்வ்ட். 

வெகு நெருங்கிய சொந்தங்கள் கூப்பிட்டு சொல்லிடுவாங்க. பிற சொந்தக்கார வாட்சப்பில் பலருக்கு என் பிநாதிநா நினைவிருந்தாலும் சரியா அந்தந்த நாட்களில் மறந்துடுவாங்க. பிறகு வேறொரு நாளில் நேரில் பார்த்தால் வாழ்த்திடுவாங்க. 

அவ்ளோதாங்க பதிவு. 
படித்த அனைவருக்கும் *தனித்தனியான* நன்றி.
வணக்கம்.

***

Read more...

Tuesday, May 21, 2019

10ம் வகுப்பு பிரச்னைகள்!


இந்தியாவுக்கு வரும்போது #மகளதிகாரத்தின் 4ம் வகுப்பு சேர்க்கைக்காக பள்ளிகள் தேடல் பிரச்னைகளைப் பற்றி எழுதிய மூன்று பதிவுகள் இங்கே. 


காலச்சக்கரம் கடகடன்னு உருண்டு இப்போ அவங்க 10வது வந்தாச்சு. இந்த வகுப்பில் வரும் பிரச்னைகள், அடுத்து 11க்கு வேறு பள்ளி பார்க்கணும். அதில் என்ன பிரச்னைகள்னு இங்கே பார்ப்போம். 

ட்யூஷன்:

9வது முடிந்த அடுத்த நாளிலிருந்தே பல நண்பர்கள் 10வதுக்கு ட்யூஷன் சேர்ந்துட்டாங்க. அவங்க கணிதத்தில் 3 பாடம் முடிச்சிட்டாங்க. கணினி முழுக்க கத்துக்கிட்டாச்சுன்னு ஒரே புலம்பல். அதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா விடுமுறையை எஞ்சமாய் பண்ணு. திட்டமிட்டபடி ஹரிபுத்தர் எல்லா புத்தகங்களும் படி / படங்களைப் பாரு. விடுமுறையில் கொடுத்த assignments மட்டும் முடிச்சா போதும். படிப்பது பிறகுன்னு சொல்லியாச்சு.

பள்ளி திறந்தபிறகு மறுபடி ட்யூஷனுக்கான peer pressure. சரி, ட்யூஷன் இல்லாமல் எவ்வளவு % எடுப்பே? ட்யூஷன் சேர்ந்தா எவ்வளவு கிடைக்கும்? இல்லாமல் 90% சேர்ந்தா 95%. சரி நமக்கு 90% போதும். என்ன வேணுமோ நானே சொல்லித் தர்றேன். Question Bank வாங்கிப் படிப்போம். சொல்லிக் கொடுக்கதானே பள்ளியில் வாத்திமாருங்க இருக்காங்க. எல்லாரின் வாட்சப் எண் வாங்கு. எந்நேரமும் சந்தேகம் இருந்தா கேட்பேன்னு (லார்ட் லபக் தாஸ்!!) சொல்லு. பிறகு பார்த்துக்கலாம்னு ட்யூஷன் பேச்சை நிறுத்தியாச்சு. 

வயலின்:

சாதாரண நாட்களிலேயே ஒரு நாளைக்கு 1மணி நேரம் வாசிக்க வைக்க படாதபாடு படுவோம். அதுவும் இப்போ Boardexam வேற. வயலின் வாசிக்க முடியுமா? வகுப்புக்கு போகமுடியுமான்னு பல கேள்விகள். என் கேள்வி. வயலின் வாசிப்பதால் எவ்வளவு % மார்க் போகும்?. அவர் பதில். வாசிக்கலேன்னா 95% வாசிச்சா 90%. போதும். 90% போதும். ஒழுங்கா வாசி.  இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. கிளம்பு, வயலின் வகுப்புக்குப் போகலாம்னு கிளப்பியாச்சு.

11வது:

இந்த பள்ளியில் 10வது வரைக்குமே உள்ளது. லுருவில் பெரும்பாலும் (அனைத்து?) பள்ளிகளிலும் இதே நிலைதான். 11வதுக்கு வேறொரு பள்ளி. அதுக்கு 10வது படிக்கும்போது அக்-நவம்பரில் போய் பேர் கொடுத்துட்டு (admission) வரணும். வெறும் பேர் மட்டும் கிடையாது, ஒரு நுழைவுத் தேர்வு எழுதிட்டு, token advance admission fees கட்டணும். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ரூ.25,000. 

இப்போ மூன்று பள்ளிகளில் admission போடறோம்னு வைங்க, ரூ.75000 போச்சு. இதில் ஒரு பள்ளியில்தான் சேரப் போறோம். பாக்கி ரூ.50000 போயே போச்சு. நல்ல வியாபாரம் இல்லே!!. சரி ஒரே ஒரு பள்ளியில் மட்டும் register பண்ணுவோம்னா, பிறகு அங்கு நாம் கேட்கும் அறிவியல் பிரிவு கிடைக்கலேன்னா, வரலாறு / பொருளாதாரம்னு வேற ஏதாவது எடுக்கச் சொல்லிட்டா, பிடிக்காமல் படிக்க வேண்டியதாப் போயிடும்னு புலம்பல். சரி, இதுக்கு என்ன பண்றதுன்னு பார்ப்போம்னு சொல்லி வெச்சிருக்கு. 

Class test:

பள்ளி துவங்கி 2ம் நாளே class testஆம். அவ கூப்பிட்டு சொல்றா. நான் இப்ப படிக்கணுமே?. இப்போ நான். அதெப்படி இப்படி எதுவுமே சொல்லித் தராமல் test வைப்பாங்க. நாளைக்கு நான் வர்றேன் பள்ளிக்கு. டீச்சரைப் பார்த்து கேட்கறேன். இப்போ அவங்க. வேண்டாம். நானே பார்த்துக்கறேன். பல பேர் ட்யூஷன் போவதால், அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். எகொஇச? மறுபடி நான். அப்படி அவங்க test வெச்சி அதில் நீ ஒண்ணுமே எழுதலேன்னா பரவாயில்லை. நான் வந்து பிறகு பேசறேன்னு அடக்கியாச்சு. பிறகு அந்த testம் இல்லை. வசந்தியாம். 

அடுத்த அறிவுரை. இனி இந்த மாதிரி வசந்தியெல்லாம் பல வரலாம். எதையும் ஆராயாமல் நம்ப வேண்டாம். நம் இலக்கு boardexam மட்டும்தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதுக்கு மட்டும் படின்னு சொல்லி அடக்கியாச்சு. வரவர பள்ளி வகுப்புகளிலும் fakenews வசந்திகள் பரவ ஆரம்பிச்சிடுப்பா!!

இப்பதான் வருசம் துவங்கியிருக்கு. இன்னும் அடுத்த ஆண்டு தேர்வு வரும்முன் வேறு என்னென்ன பிரச்னைகள் வருமோ? அதுக்கு இன்னொரு பதிவுடன் வர்றேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். 

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP