Sunday, January 16, 2011

கும்பகர்ணனும் நானும் தோஸ்து..



அமெரிக்காவில் பேச்சிலராக இருந்த நாட்களில் ஓர் இரவு. 11 மணி. கூட இருந்த ஒரு நண்பன் இந்தியாவுக்கு தொலைபேசறேன்னு தவறுதலா 911 அடிச்சிட்டான். பத்து நிமிடத்தில் போலீஸ் வந்துடுச்சு. வெளியில் அழைப்பு மணி அடிச்சி, உள்ளே வந்து, வீட்டிலுள்ளவர்களை விசாரித்து, வீட்டில் யாராவது பதுங்கியிருக்காங்களான்னு இண்டு இடுக்கு முழுக்க பாத்துட்டு, அரை மணி கழிச்சி போயிருக்காங்க. இதெல்லாம் எனக்கு காலையில் நண்பன் சொல்லித்தான் தெரியும். ஏன், அப்போ நீ வீட்டில் இல்லையான்னு கேக்காதீங்க. ஹிஹி. நானும் அதே வீட்டில்தான் இருந்தேன். ஆனா தூங்கிட்டு இருந்தேன். அதனால் எனக்கு எதுவும் கேக்கலே. தெரியலே.

இப்ப புரியுதா? தூங்கணும்னு படுத்தா 5ஏ நிமிஷத்தில், என் சொந்த மாயக்கம்பளத்தில் ஏறி கனவுலகில் பறக்க ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் யார் வந்து எழுப்பினாலும், ம்ஹூம். தங்ஸ் கேப்பாங்க. இப்படி தூங்கும்போது ஆத்திர அவசரத்துக்கு உங்களை எப்படி எழுப்பறது? ஜெமினியை கமல் அப்படியே அலேக்கா தூக்கிட்டு போவதுபோல் தூக்கிட்டுப் போயிடு. 7 மணி நேரம் ஆனதும், நானே முழுச்சிப்பேன். ஒண்ணும் பிரச்சினையில்லேன்னு சொல்லி திட்டு வாங்கறது என் வழக்கமா ஆயிடுச்சு.

ஆனாலும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என் தூக்கத்தில் மேல் பொறாமையாதான் இருந்துச்சு. என்ன பண்ணலாம்னு யோச்சிட்டே இருக்கும்போதுதான், அந்த பிரச்சினை வந்தது. கும்பகர்ணனே வந்து எழுப்பினாலும் எழுந்துக்காத நான், அந்த கும்பகர்ணனின் தூக்கத்தையே கெடுக்கற மாதிரி ‘கொர் கொர்’ விட ஆரம்பித்தேன்(னாம்). நான் நம்பவில்லை. தங்ஸும் பொண்ணும் ஆமா.. பயங்கர சத்தமா இருக்கு. எங்களால் தூங்கவே முடியலே.. நிறுத்துங்கன்னு கதற ஆரம்பிச்சாங்க.

ஏதாவது சொல்லி சமாளிச்சாகணுமே.

இப்போ கஷ்டமாயிருக்குன்னு சொல்வீங்க. நான் கொர்கொர்ரை கஷ்டப்பட்டு நிறுத்தினபிறகு, இந்த சத்தம் இல்லாமே தூக்கமே வரலேன்னுவீங்க. அதனால், பேசும்படம் கமல் மாதிரி இப்பவே இதை ரெகார்ட் பண்ணி வெச்சிக்குங்க. அப்புறம் உதவும்னு சொல்லிட்டு ஓடிடுவேன்.

இந்த கொர்கொர்ரை நிறுத்துவதற்கு என்ன செய்யறதுன்னு 2 பேரும் கூகுளிட்டு பார்க்க ஆரம்பிச்சாங்க. தலையணை உசரமா இருந்தா கொர் வராதுன்னு போட்டிருந்தானாம். உடனே வால்மார்ட் போய் 4 ஸ்பெஷல் சாதா தலையணை பார்சல்.4 தலையணைகளை வெச்சிக்கிட்டு ’படுத்து’ தூங்க முடியுமா. உக்காந்துதான் தூங்கணும். அவ்வளவு உசரத்திலிருந்து பக்கத்தில் உன் மேல் விழுந்தா என்னை சத்தம் போடக்கூடாதுன்னு அபாயமணி அடிச்சிட்டேன். உங்க கொர்ருக்கு அது எவ்வளவோ பரவாயில்லை. ஒரு கையால் தள்ளிவிட்டு(!) மறுபடி படுத்துடுவேன்னு சொல்லி 4ஐ கொடுத்துட்டாங்க. சரி ரெண்டு நாளைக்கொரு தடவை ஒவ்வொண்ணா குறைச்சிக்கலாம்னு சொல்லி 4 - 3 - 2லே வந்து நிக்குது. இப்ப கொர்கொர் இல்லையாம். அவங்க நிம்மதியா தூங்கறாங்க.

என் கொர்கொர்ரை நிறுத்திவிட்டு அவங்க எப்படி நிம்மதியா தூங்கலாம்? இப்பவே கூகுளுக்கு போறேன். எப்படி குறட்டை விட ஆரம்பிப்பதுன்னு யாராவது எழுதாமேயா இருக்கப் போறான்? இல்லேன்னா 30 நாட்களில் குறட்டை விடுவது எப்படின்னு யாராவது (அவங்க?) புத்தகம் போட்டிருக்காங்களான்னு பாக்கணும். நீங்க யாராவது உதவி பண்ணுவீங்களா?

நன்றி.

Read more...

Monday, January 10, 2011

ISO 9000 - நானே கேள்வி நானே பதில்!

ISO - ஒரு முன்குறிப்பு?

** ISOவின் விருவாக்கம் - 'International Organization for Standardization'.
** உலகளவில் செந்தரங்களை உருவாக்குவதற்காக ஜெனிவாவில் 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
** 1987ம் ஆண்டு முதல் ISO 9000௦௦௦ செந்தரங்கள் உருவானது.
** 1994, 2000, 2008 ஆண்டுகளில் அந்த செந்தரங்கள் மேம்படுத்தப்பட்டன.

ISO 9000 - யாருக்கெல்லாம் பொருந்தும்?

** தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும். அதாவது சோப்பு டப்பாவிலிருந்து விமானம் வரைக்கும் தயாரிக்கும் அனைவருக்கும் ISO பொருந்தும்.
** மென்பொருள் நிறுவனங்களும் "Product" தயாரிப்பதால் அவர்களுக்கும் பொருந்தும்.
** இதைத்தவிர, (தகவல், தொழில்நுட்ப) சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் ISO பொருந்தும்.

ISO 9000, 9001, - இவை இரண்டும் ஒன்றுதானா? வெவ்வேறா? 9000ஐப் போல் இன்னும் என்னென்ன சான்றிதழ்கள் உள்ளன?

ISO 9000 குடும்பத்தில் சில கிளைகள் உள்ளன.

** ISO 9000 - Fundamentals and Vocabulary
** ISo 9001 - QMS - Requirements
** ISO 9004 - QMS - Guidelines for performance improvements

நிறுவனங்கள் இந்த 3 கிளைகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்ற வேண்டிய அவசியம் இருந்தாலும், 9001க்குதான் சான்றிதழ் கொடுப்பார்கள்.

9000௦௦௦ஐப் போல் இன்னும் பல சான்றிதழ்கள் உள்ளன. அவற்றில் சில:

** ISO 14000 - Environment Management Systems
** ISO 15000 - Hazards Analysis and Critical Control Point
** ISO 18000 - Occupational Health and Safety Management

ISO 9001ஐ ஒரு நிறுவனத்தில் எப்படி நிறைவேற்றுவது (implement)?

** மேற்கூறிய 9000, 9001 மற்றும் 9004ல் கூறப்பட்டுள்ள முறைகளை நன்கு படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

** நம் நிறுவனத்தின் நடவடிக்கைகள், முறைநெறிகளை நன்று அறிந்து கொண்டு அதை, 9001ல் கூறப்பட்டுள்ள தேவைகளுக்கேற்ப பொருத்த வேண்டும். இந்த வேலைதான் இந்த சான்றிதழ் வாங்கும் வேலையில் மிகவும் கடினமானதும், மிகுந்த நேரம் தேவைப்படும் வேலையுமாகும்.

** அப்படி 9001ல் கூறப்பட்டுள்ள சில விதிமுறைகள் நம் நிறுவனத்திற்கு பொருந்தாது போனால், ஏன் பொருந்தாது என்ற காரணங்களை (exclusions) தனியாக ஆவணப்படுத்த வேண்டும்.

** மேற்கூறிய பொருந்தி வந்த நடவடிக்கைகளை, முறைநெறிகளை நம் நிறுவனத்தில் சரியாக நிறைவேற்ற வேண்டும் (Implement).

** இந்த நிறைவேற்றம் திருப்திகரமாக இருக்குன்னு நினைத்தாலோ, அல்லது நிறுவனத்தில் அனைவருக்கும் ISOவில் பயிற்சி தேவைப்படுமென்று நினைத்தாலோ, சான்றிதழுக்கு பரிந்துரைக்கும் நிறுவனங்கள் ஏதேனுமொன்றை தொடர்பு கொள்ளலாம்.

** அப்படி வரும் நிறுவனங்கள், நம் நிறுவனத்தின் முறைநெறிகளை தணிக்கை செய்து, அதன் வெளியீட்டைப் பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கைகளை பரிந்துரைப்பார்கள்.

ஒரு தடவை ISO 9001 தரச்சான்றிதழை வாங்கிட்டா, அப்புறம்?

** தரம் - எப்படி ஒரு தரம் (தடவை) மட்டும் செய்யும் வேலையில்லையோ, அதே போல்தான் தரச்சான்றிழும்.

** ISOவைப் பொறுத்தவரை, தணிக்கைகள் ஒவ்வொரு வருடமும் செய்யப்பட வேண்டும்.

** அந்த தணிக்கையில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவை களையப்பட வேண்டும்.

ISOவின் நன்மைகள் என்னென்ன?

இந்த நன்மைகளை நாம் ஏற்கனவே நிறைய தடவை பாத்துட்டோம். இருந்தாலும் இன்னொரு தடவை இங்கே.

** நம் முறை நெறிகளின் வெளியீட்டின் தரம் உயரும்.
** வாடிக்கையாளரின் திருப்தி அதிகரிப்பு.
** சட்ட / ஒழுங்குமுறைகளின் தேவைகள் நிறைவேற்றம்.
** ஒட்டுமொத்த மேலாண்மையில் முன்னேற்றம்.

*****

Read more...

Sunday, January 9, 2011

கழுகுப் பார்வை - தர நிர்ணயம் - பகுதி 5


கீழே இருக்கிற படத்தை ஒரு தடவை பாத்துடுங்க. ஒரு கட்டிடம் மாதிரி தெரியுதா. ஒரு அடித்தளம்; நான்கு தூண்கள்; ஒரு கூரை இருக்குதா. இதுதான் 'தர'த்தின் கழுகுப்பார்வை.

ஒரு நிறுவனத்தின் அடித்தளம், அதனுடைய 'தர மேலாண் அமைப்பு'தான். அந்த அமைப்பை சரியா நிறுவியிருக்கோமான்னு அடிக்கடி பாத்துக்கதான் ISO, CMMi போன்ற வழிமுறைகள் இருக்கு.

அடுத்து நான்கு தூண்கள். நம்ம தரத்தை தொடர்ச்சியா எப்படி முன்னேற்றலாம்னா இந்த நான்கு தூண்களை வெச்சித்தான்.

(1) Tools - நமக்குத் தேவையான மென்பொருட்களை தயாரித்தோ, சந்தையில் வாங்கியோ பயன்படுத்தினால், நம் வேலைகள் சுலபமாவதோடு வெளியீடுகளிலுள்ள வேறுபாட்டையும் களையலாம்.

(2) Six Sigma - தவறுகள் எதனால் ஏற்படுதுன்னு கண்டுபிடித்து அவற்றை குறைக்க வழி செய்யும் ஒரு முறைதான் இது. புள்ளியியல் (Statistics) முறைகளைப் பயன்படுத்தி மாறும் தன்மையை (Variation) கண்டுபிடிக்கும் இந்த முறை மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்ததாகும்.

(3) Training - புதிய தொழில்நுட்பமோ, மென்பொருட்களோ அல்லது ஏற்கனவே இருக்கும் முறைவழிகளில் (Process) மாற்றங்களோ, எதுவாக இருந்தாலும் - பணியாளர்களுக்கு பயிற்சி அவசியமாகும். இதனால் தவறுகள் குறைவதோடு, தரமும் மேம்படும்.

(4) Metrics - தரத்தில் நாம முன்னேறுகிறோமா இல்லையான்னு பார்க்க எல்லா நிறுவனங்களிலும் நிறை பகுப்பாய்வு (Quantitative Analysis) செய்வார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் மெட்ரிக்ஸ். உதாரணத்துக்கு : Defect variance, Effort variance. இதுக்கெல்லாம் நிறுவனத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து - இந்த மெட்ரிக்ஸ் மூலமாக அந்த இலக்கை எட்டுகிறோமா இல்லையான்னு பார்ப்பார்கள்.

இந்த நான்கு தூண்களின் உதவியுடன் பொருட்களின் தரத்தை மேன்மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.

இப்போ அடுத்து இன்னொரு படத்தை பாருங்க.


தர மேலாண் அமைப்பில் என்னென்ன இருக்கணும்னு சொல்றதுதான் இந்த படம்.

கீழிருந்து மேலாக:

1. பொருளை உற்பத்தி செய்வதிலுள்ள பல்வேறு நிலைகளை எப்படி செய்வதுன்ற முறைவழிகளை (Process) தெளிவா ஆவணப்படுத்தணும்.

2. அந்த முறைவழிகளை செய்ய உதவும் படிமங்கள் (Forms), படிம அச்சுகள் (Templates), செந்தரங்கள் (Standards) போன்றவற்றை ஆவணப்படுத்தணும்.

3. மேற்கண்ட முறைவழிகளை எப்படி வகுப்பதுன்ற வழியையும் கண்டுபிடிக்கணும்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக தரக் கையேடு (Quality Manual) ஒன்று உருவாக்கணும். இதுதான் ஒரு நிறுவனம் எப்படி செயல்படுதுன்னு சொல்லக்கூடிய ஆவணமாகும். ஒவ்வொரு நிறுவனத்திலும் ISO பார்க்க விரும்பும் முதன்மையான ஆவணம் இது.

*****

இன்னும் அடுத்த பகுதிகளில் ISO மற்றும் CMMi பற்றி பாக்கப் போறோம். அத்துடன் இந்த தொடர் முடிந்து விடும். அதனால் கேள்விகள் இருந்தா இப்பவே கேட்டுடுங்க.

*****

Read more...

Wednesday, January 5, 2011

டென்சனை குறைங்க! டென்சனை குறைங்க!!

நேற்றைக்கு ரொம்ப நேரம் விவேக் ஜோக்குகளை பார்த்துக்கிட்டிருந்ததால் நானும் ஏதாவது கருத்து சொல்லலாம்னு கிளம்பிட்டேன். படிச்சிட்டு டென்சனாகாதீங்க. ஏன்னா, பதிவே டென்சனைக் குறைப்பது எப்படின்றதுதான்.

நீங்க கடவுள் இல்லை!

உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய இருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க. அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நீங்க வருத்தப்படாமல், பேசாமே அந்த வருத்தங்களை outsource பண்ணிடுங்க. அதுதான் உடம்புக்கு நல்லது. உதா: வடநாட்டுப் பெண்மணியும் தென்நாட்டுப் பெண்மணியும் தொலைபேசியதை உங்களால் வெறும் கேட்கத்தான் முடியும். வேறெதாவது செய்ய முடியுமா?

தமிழக அரசுக்கு உதவாதீங்க.

டென்சனைக் குறைக்க தண்ணி அடிக்காதீங்க. அதனால் டென்சன் குறையாது. அப்படின்னா, தம் அடிக்கலாமான்னு கேக்காதீங்க. மூச். கூடவே கூடாது. எனக்குத்தான் ஓவியம் வரையத் தெரியாதே. அப்புறம் சுவர் எதுக்குன்னு கேக்காதீங்க. 'சுவர்' கண்டிப்பா தேவை. பாத்துக்குங்க.

மிட்நைட் மசாலா வேண்டாம்.

சீக்கிரம் படுத்து தூங்கற வழியைப் பாருங்க. டென்சனைக் குறைக்கறதுக்கு நீண்ட இரவுத் தூக்கம்தான் நல்ல மருந்துன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதுக்காக ஆபீஸ்லே தூங்காதீங்க. தூங்கினாலும் வேலை போகாமே இருக்க நீங்க ஒண்ணும் பாராளுமன்றத்தில் வேலை செய்யலே!

மிருகமா மாறிடுங்க!

சாப்பிடுற விஷயத்துலே மிருகமா மாறிடுங்கன்னு சொல்ல வந்தேன். பசி எடுத்தபிறகு சாப்பிடுங்க. overload பண்ணாதீங்க. ஆத்துலே போடும்போதே அளந்து போடும்போது, ஆத்துலே (வீட்டுலே) உக்காந்து வயித்துக்குள் போடும்போது அளந்து போடாமே இருக்கமுடியுமா.

நாயைப் பாத்து கத்துக்குங்க.

ஏதாவது ஒரு நாய்க்கு தொப்பை இருந்து பாத்திருக்கீங்களா? ஏன்? அது நாள் முழுக்க ஓடிட்டே இருக்கு. உங்களையும் அதே மாதிரி நாள் முழுக்க ஓடச் சொல்லலே. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஓடுங்க. உடற்பயிற்சி செய்யுங்க.

சைட்லே பாக்காதீங்க!

நேர்மறைன்னு ஒரு வார்த்தை இருக்கான்னு கவலைப்படாமே நேர்மறையா இருங்க / பேசுங்க / யோசிங்க. அப்பத்தான் யார்கிட்டே என்ன (பொய்) சொன்னோம், என்ன பேசினோம்னு நினைவில் வெச்சிக்க வேண்டாம். Excel கோப்பில் நிறைய ஃபார்முலா இருந்தா, சேமிக்கறது கஷ்டம். ஜிம்பிளா இருங்க.

பைத்தியமாயிடுங்க.

தனக்குத்தானே பேசிக்கோங்க. அட, வாய் விட்டு இல்லேங்க. மனசுக்குள்ளே. அப்படி பேச முடியலியா, அமைதியா உக்காருங்க. எவ்ளோ புலன் முடியுதோ அவ்ளோ புலன்களை அடக்கி தினமும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.

ஒரு வேலை ஒரே வேலை

தொகா பெட்டியில் சன் டிவி, ஜெயா டிவின்னு நூறு சேனல்கள் இருந்தாலும், ஒரு சமயத்தில் ஒரு டிவி பாத்தாதான் நல்லாயிருக்கும். அதே மாதிரி ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை செய்யுங்க. டென்சனை குறைங்க.

*****

Read more...

Tuesday, January 4, 2011

தொ(ல்)லைபேசி - அரைபக்கக் கதை

நேரம்: விடியற்காலை 4 மணி
இடம்: அமெரிக்காவில் எங்க வீடு
செய்துகொண்டிருப்பது : காலையில் 4 மணிக்கு என்ன செய்வாங்க, தூக்கம்தான்.

***

ட்ரிங் ட்ரிங்..

”என்னங்க, தொலைபேசி அடிக்குது பாருங்க. போய் எடுங்க”.

”யாரும்மா இந்த நேரத்துலே. நீயே போய் எடு”.

”என்னங்க. இந்தியாவிலேந்து வருது. ஆனா நம்பர் யார்துன்னு தெரியல. உங்க அம்மாவா இருக்குமோ.. அவங்கதான் இப்படி நேரம்காலம் தெரியாமே தொலைபேசுவாங்க”.

”ச்சேச்சே.. அதெல்லாம் ரொம்ப முன்னாடிம்மா. இப்போதான் அவங்களுக்கு நேர வித்தியாசம் தெரிஞ்சிடுச்சே”.

”சரி. ஆனா எனக்கு இந்த அழைப்பை எடுக்க பயமா இருக்கு”.

”கட்டாயிட போகுது. ஆமா. நீ உங்க பாட்டிகிட்டே பேசினியோ”?

”மொதல்லே வாயை கழுவுங்க. நேத்துதான் பாட்டியோட பேசினேன். அவங்க நல்லாதான் இருக்காங்க”.

(இதற்கிடையில் தொலைபேசி அழைப்பு நின்றுவிடுகிறது).

”ஒரு வேளை உங்கப்பா புறப்பட்டு அமெரிக்கா வர்றேன்னு சொல்ல தொலைபேசறாரோ என்னவோ? கட்டானதும் நல்லதுதான்”.

”ம்கும். அவரை வம்பு இழுக்கலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதே. அந்த விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ சீக்கிரம் கூப்பிடப்போறாரு. யாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. ஆண்டவா.. எதுவும் கெட்ட செய்தியா இருக்கக்கூடாது. இந்தியா வரும்போது, உன் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏத்தறேன்”.

”சரி சரி புலம்பாதே. அழைப்பை எடுக்கவும் இல்லே. இப்போ தூக்கமும் போச்சு”.

”உங்களுக்கென்ன. ஆபீஸ் வேலையிருக்குன்னு போயிடுவீங்க. நான்தானே வீட்டில் உக்காந்து யார் போன் பண்ணாங்களோன்னு பயந்துட்டே இருக்கறது”.

”அதுக்கென்ன இப்போ, காலையில் எல்லாருக்கும் நீயே போன் பண்ணி பேசிடு. இப்போ வந்து தூங்கற வழியைப் பாரு”.

(மறுபடி ட்ரிங் ட்ரிங்...)

”ஹலோ. ஹலோ”.

”...”

”யெஸ்.. ஆமா. சொல்லுங்க”.

“...”

“நீங்க யார் பேசறீங்க? உங்களுக்கு யார் வேணும்?”

“...”

டொக்.

“காலங்கார்த்தாலே ரோதனையா போச்சு இந்த ராங் நம்பரோட. நாடு விட்டு நாடுகூடவா பண்ணுவாங்க இந்த ராங் நம்பர்காரங்க.”

*****

Read more...

Monday, January 3, 2011

தலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி!

அமெரிக்காலிருந்து வந்த என் நண்பன் ஒரு பல்லி மிட்டாய் கொண்டு வந்து கொடுத்திருந்தாகூட சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படி சொதப்புவான்னு நான் நினைக்கவேயில்லை. அப்படி என்னதான் கொடுத்தான்னு கேக்கறீங்களா? நமக்கு நாமே திட்டத்துலே தலைமுடி வெட்டிக்கிற ஒரு கருவியை கொண்டு வந்திருக்கான். அங்கே நம்மவங்க நிறைய பேர் இப்படித்தான் அவங்களே (தலைமுடியை) வெட்டிப்பாங்களாம். எனக்கு வேண்டாம்டான்னு சொன்னாலும் கேக்காமே, வெச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டான்.

என் அறை நண்பர்கள் ரொம்பவே த்ரில்லாயிட்டாங்க. மாதா மாதம் 60-70 ரூபாய் மிச்சம். வருடத்தில் 750 ரூபாய் வரைக்கும். கண்டிப்பா இதை நாம எல்லோர் தலைக்கும் பயன்படுத்தறோம்னு சொல்லிட்டாங்க.

இப்போதான் பிரச்சினையே. முடிதிருத்தகத்துக்குப் போய் தலைய கொடுத்துட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டே பழக்கமாயிடுச்சே தவிர, எப்படி முடி வெட்டறதுன்னு யாருக்கும் தெரியல. எந்த தலையை வெச்சி சோதனை பண்றது? சுத்திமுத்தி பாத்து, விரோதிகள் (நண்பர்களுக்கு எதிர்ப்பதம்) மூவரும் என் தலையை பார்த்தார்கள். நான்தான் வீட்டிலும் எலி, சோதனைக்கும் எலி. உடனடியா சோதனை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

குரங்கு ஒண்ணு, ரொட்டித்துண்டை ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுத்த கதை தெரியும்தானே? அதே மாதிரி, இங்கே எடுத்தா அங்கே குறையுது, அ எ இ குறையுதுன்னு - இவங்க என் தலையை ஒரு வழியாக்கிட்டாங்க. ஆபரேஷன் சக்ஸஸ் - கத்தினான் ஒருவன். எல்லோருக்கும் பரம திருப்தி. என் தலைதானே, அவங்களுக்கென்ன.


இருந்தாலும் வெளியில் பாக்கறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியணும்லே. இரவு சாப்பிட வெளியே போனோம். வழக்கமா சாப்பிடற ஹோட்டலில் பரிமாறுபவர் என்னை மட்டும் ரெண்டு தடவை திரும்பி பார்த்த மாதிரி இருந்தது. நண்பர்களோ, அதெல்லாம் ஒண்ணுமில்லேடான்னு சமாளிச்சிட்டாங்க. நான் இன்னும் சமாதானமடையவில்லை. இருட்டில் சரியா தெரியாது. நாளை காலை வெளிச்சத்தில் அலுவலகம் போனாதான் தலையப் பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியும்னு சொல்லிட்டே வீட்டுக்கு திரும்பி போனேன்.

**

அடுத்த நாள் காலை.

இன்னிக்குன்னு பாத்து எல்லாரும் என் தலையை பாக்கறமாதிரியே இருக்குது. ஆனா நான் அவங்களை பாக்கும்போது, டக்குன்னு குனிஞ்சிடறாங்க.

ட்ரெயினில் தினமும் பார்க்கும் பொண்ணுங்க சிரிக்கிறா மாதிரியே இருக்குது. இதே இன்னொரு நாளா இருந்தா, நானும் அவங்கள பாத்து.. சரி விடுங்க. இப்போ எனக்கு அழுகை அழுகையா வருது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்ப வீட்டுக்கே போய் ஒரு வாரம் மறுபடி தலைமுடி வளர்ற வரைக்கும் லீவ் போட்டுடலாமான்னு ஒரு யோசனை திடீர்னு வந்து போனது.

ஆனா அதுக்குள் அலுவலகமே வந்துடுச்சு.

உள்ளே போனவுடன், ஒரு நண்பனை கூப்பிட்டு கேட்டேன் - "டேய். என்னை சரியா பாரு. ஏதாவது வித்தியாசமா தெரியுதா"?

என்னை மேலே கீழே பார்த்தவன், பகபகன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டான்.

"டேய். ஒழுங்கா சொல்லு. என் தலை அப்படி கேவலமாவா இருக்கு. எல்லாரும் ஏண்டா என்னையே பாக்கிறீங்க"?

அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னால் கோபத்தை.

"டேய்ய்ய்".

"என்னடா? உன்னால் மட்டும் எப்படி இப்படி செய்ய முடியுது"?

"மரியாதையா சொல்லு. எதுக்கு சிரிக்கிறே? தலைய பாத்துதானே"?

"என்னது. தலையா? உன் தலைய யார்றா பாத்தா"?

"அப்புறம் வேற எதுக்கு எல்லாரும் லூசு மாதிரி பாக்கறாங்க? நீ ஏன் சிரிக்கிறே"?

"ரெண்டு காலிலும் வெவ்வேறே ஷூ போட்டிருந்தா முறைச்சி பாக்காமே, என்ன கொஞ்சுவாங்களா"?


**

ஹிஹி. தலைகால் புரியாம நடந்துக்கறான்னு கேள்விப்பட்டிருக்கீங்கல்ல. அதே மாதிரிதான். தலையப் பத்தியே யோசித்துக் கொண்டிருந்ததால், இந்த ஷூவை கவனிக்காமே மாத்திப் போட்டுக்கிட்டேன் போல. போதும் ரொம்ப சிரிக்காதீங்க. ஏன், நீங்க இந்த மாதிரி செய்ததே இல்லையா? போங்க சார், போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.

*****

Read more...

Sunday, January 2, 2011

ச்சின்ன ஒற்றி... பெரிய ஒற்றி...


எங்களை ஒரு தடவையாவது உங்க அலுவலகத்துக்கு கூட்டிப் போங்கன்னு அம்மாவும் பொண்ணும் (பெரிய ஒற்றி & ச்சின்ன ஒற்றி) சொல்லிட்டே இருப்பாங்க. அது என்ன, சும்மா விளையாடற இடமா? ரத்த பூமிம்மா.. உள்ளே வந்துட்டா ரத்த காயம் இல்லாமே வெளியே போகமுடியாதுன்னு சொன்னாலும் கேட்டாதானே?

இது போதாதுன்னு, குடும்ப சந்திப்புகளில் நண்பர்கள் என்னைப் பற்றி தவறாமல் சொல்வது - இவரு எங்கே வேலை செய்யறாரு? எப்ப பாத்தாலும் பக்கத்துலே கடலை, இல்லே ட்விட்டர்/இணையம் இதிலேதான் இருப்பாரு.

இப்படி சொன்னதுக்கப்புறம் விடுவாங்களா? சன் டிவியில் எந்திரன் விளம்பரம் போல், மேலே சொன்னதையே தொடர்ச்சியா சொல்லிட்டே இருந்தாங்க.

கடைசியா அந்த நாளும் வந்தது.

**

ச்சி.ஒ க்கு பள்ளி விடுமுறை. எனக்கு அலுவலகம் இருந்தது. அதனால் அவரை கூட்டிப் போகவேண்டுமென்று அரச கட்டளை. கூடவே ச்சி.ஒ விடம் - அப்பா ஆபீஸ்லே வேலை பாக்கறாரா இல்லே கணிணியில் விளையாடறாரான்னு பாத்து எனக்கு உடனே தொலைபேசி சொல்லுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

அந்த ச்சின்ன ஒற்றியும் என்கூடவே அலுவலகம் வந்து - பக்கத்தில் உட்கார்ந்து - இது என்ன? அது என்னன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.

மறைந்தவை கேட்கவற்(று) ஆகி, அறிந்தவை
ஐயப்பா(டு) இல்லதே ஒற்று.- (587)

அவருக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லாமே / காட்டாமே மறைக்கற விஷயங்களை எப்படியாவது தெரிஞ்சிப்பவர்தான் நல்ல ஒற்றன்(றி)னு ‘அவரே’ சொல்லிட்டாரே.


அம்மா, இந்த linkedinன்னா என்ன? ரொம்ப நேரமா இதைத்தான் பாத்துக்கிட்டிருக்காரு.

எப்படியாவது வேலை செய்யற மாதிரி ’நடிச்சி’ நேரத்தை ஓட்டிடணும்னு - பழைய, செய்ய விரும்பாத வேலைகள் ரெண்டு மூணை எடுத்து செய்ய ஆரம்பிச்சேன்.

நடுநடுவே வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வருது.

"என்ன நடக்குது அங்கே?"

"என்னன்னு தெரியலேம்மா. என்னவோ கணிணியில்தான் பாத்துட்டே இருக்காரு. நான் கேட்டுட்டு சொல்றேன்".

டொக்.

போற போக்கைப் பாத்தால், என்னை ‘ஃபெயில்’ பண்ணிடுவாங்கன்னு - தொலைபேசியில் இன்னொரு நண்பரை அழைத்து - (அலுவலக வேலையைப் பற்றி பேசுவதைப் போல்!) ஆங்கிலத்தில் சீரியஸாக பேச ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிடம் பேசியபிறகு, அடுத்த ஸ்டேடஸ் ரிப்போர்ட்டில் கொஞ்சம் அதிகமாக மார்க் கிடைத்தது. - யார்கிட்டேயோ ஆங்கிலத்தில் பேசிட்டிருந்தாரு. ட்விட்டரை திறக்கவில்லை.

(ட்விட்டர் எப்படி இருக்கும்னு ச்சி.ஒ.க்கு தெரியுமாகையால், அந்த மூணு மணி நேரம் ட்விட்டரை திறக்கமுடியவில்லை). சிபிஐகிட்டே மாட்டிக்கிட்ட ராசா நிலைமை ஆகிப்போச்சு எனக்கு.

இதுக்கு நடுவில், அலுவலகத்தை சுத்திப் பாக்கணும்னு விருப்பப்பட்டாங்க. சரின்னு நண்பர்கள் அறைகள், காபி/டீ குடிக்குமிடம் - எல்லாத்தையும் கொண்டு போய் காட்டினேன்.

அன்னிக்குன்னு பாத்து நேரம் ஓடவே மாட்டேங்குது. கடிகாரத்தை தட்டித் தட்டி ஓடவைக்கிறேன்.

ஒரு மூணு மணி நேரம் கழிச்சி - கிரிக்கெட் மேட்சுலே பெவிலியனிலிருந்து டிக்ளேர் செய்யும் அணித்தலைவர் போல் - கடைசி அழைப்பும் வந்தது. - "போதும். புறப்பட்டு வந்துடுங்க".

வைக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்து விட்டேன்னுதான் நினைக்கிறேன். அன்னிக்கு அர்ச்சனை எதுவும் நடக்கலை.

கூட இருக்கும் நண்பரில் ஒருவரே சிறப்பு ஒற்றராக மாறும்வரை இப்படியே ஓபி அடிப்பதில் பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்த் ஆண்டவன்தான் காப்பாத்தணும்.

*****

Read more...

Saturday, January 1, 2011

மெதுவா, வேகமா, மெதுவா, மெதுவ்வ்வா!

இந்தியாவில் இருந்தவரை காரை வெறும் தொட்டு மட்டுமே பார்த்திருந்ததால், இங்கு வந்த புதுசில் நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டவே பயமாயிருக்கும். திருமணத்தின்போது ஜானவாசம் வைக்காமல் (ஏமாற்றி) விட்ட மனைவி குடும்பத்தினரை நினைத்தோ என்னவோ, வண்டி மெதுவாவே ஓட்டுவேன். தவிர, பெரிய பெரிய லாரிகள் (இந்த ஊர்லே ‘ட்ரக்குகள்’) நம்மை சர்வசாதாரணமாய் கடந்து செல்லும்போது - நயனிடம் ஒட்ட முயற்சிக்கும் பிரபுதேவா மாதிரி என் ச்சின்ன வண்டி அந்த லாரியின் பக்கத்தில் போகும். அந்த சமயத்தில் நான்தான் ரமலத் மாதிரி அந்த ஒட்டுற வேலை கூடாதுன்னு பிரிச்சி ஒழுங்கா என் பாதையில் ஓட்டுவேன்.

அப்புறம் கொஞ்ச கொஞ்சமா பயம் தெளிந்த பிறகு, வண்டி படுவேகமா ஓட ஆரம்பிச்சுது. உச்ச வேக வரம்பு 65 மைல்கள் இருக்கும்போது, வண்டி எப்பவும் 80லேயே போகும். மனைவியும், என்னங்க - 65தானே போட்டிருக்கு, நீங்க 80ல் போறீங்களேன்னுவாங்க. நானும் - அந்த 65 நமக்கில்லேம்மா. பச்சை அட்டை வெச்சிருக்குறவங்களுக்கும், அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவங்களுக்கு மட்டுமே 65 பொருந்தும். சும்மா வேலை செய்யற விசாவில் இருக்குற நமக்கெல்லாம் அது கிடையாதுன்னு சமாதானம் சொல்வேன்.

அப்புறம் ஒரு நாள் இரவு 11 மணி - வழக்கம்போல் 80ல் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். பக்கத்தில் மனைவி. அருமையான காற்று. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமேன்னு பாடியவாறே பின்னால் பார்த்தால், யாரோ ஒருவர் என்னை துரத்திக்கொண்டே வந்தார். என் வேகத்தை எட்டமுடியாமல் தோற்றபிறகு, விளக்கடித்து பின்னர் அபாயமணியும் ஒலிக்க ஆரம்பித்தார். சரிதான், ஏதோ ஆபத்தில் மாட்டிக்கிட்டாரு போல, போய் காப்பாத்தலாம்னு வண்டியை நிறுத்தினேன். கடைசியில் பார்த்தால், நம் சொந்தக்கார்தான், அமெரிக்க மாமா. எங்கே இவ்வளவு அவசரமா போறீங்கன்னார். நெடுஞ்சாலை I-87ல் 80யில்கூட போகமுடியாதான்னு நான் கேட்ட கேள்வி, என் தொண்டையை விட்டு வெளியே வராததால் அவருக்கு கேட்கவில்லை. என் வரலாற்றையே சோதித்தபிறகு, $150 கட்டிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, என் வண்டியில் ஒரு புது ப்ரேக் உருவானது. என் காலில் ஏற்கனவே இருந்த ஒன்றோடு, பக்கத்து இருக்கையிலும் ஒன்று உருவானது. அட, என் மனைவிதாங்க. ஒரு கண்ணை சாலையில் தெரியும் அதிகபட்ச வேக அறிவிப்பிலும் (a), இன்னொரு கண்ணை வண்டியின் வேகத்திலும் (b) வைத்தவாறே வருவார். (a)விட (b) அதிகமாகிவிட்டால், நெற்றிக்கண்ணை என் மேல் வைத்து எரிப்பார்.

இப்படியாக, மெதுவாக ஆரம்பித்து (முதல் பத்தி), வேகம் பிடித்து (இரண்டாம் பத்தி), பின்னர் மாமாவால் ஒரு தடவை நிறுத்தப்பட்டபிறகு (மூன்றாம் பத்தி), வண்டியின் வேகம் மனைவியால் குறைந்தது (நான்காம் பத்தி).

இதன் விளைவு, இப்போல்லாம் என்ன நடக்குதுன்னா -


நெடுஞ்சாலையில் நான் தனியா போயிட்டிருப்பேன். பின்னாடி பார்க்கும் கண்ணாடியில் பார்த்தால், நிறைய வண்டிங்க வந்துட்டிருக்கும்.


மெதுவா அவை எல்லாம் என்னைக் கடந்து முன்னாடி போயிட்டிருக்கும்.


கொஞ்ச நேரத்தில் எல்லாரும் கடந்துவிட, மறுபடி நான் மட்டும் தனியே போயிட்டிருப்பேன்.


*****

சரி எனக்கும் ஒரு காலம் வரும். மறுபடி வேகமெடுப்பேன்னு சபதம் போட்டுட்டு அதுவரை ‘ஆஹா இன்ப நிலாவினிலே...’.

*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP