Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, January 3, 2011

தலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி!

அமெரிக்காலிருந்து வந்த என் நண்பன் ஒரு பல்லி மிட்டாய் கொண்டு வந்து கொடுத்திருந்தாகூட சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படி சொதப்புவான்னு நான் நினைக்கவேயில்லை. அப்படி என்னதான் கொடுத்தான்னு கேக்கறீங்களா? நமக்கு நாமே திட்டத்துலே தலைமுடி வெட்டிக்கிற ஒரு கருவியை கொண்டு வந்திருக்கான். அங்கே நம்மவங்க நிறைய பேர் இப்படித்தான் அவங்களே (தலைமுடியை) வெட்டிப்பாங்களாம். எனக்கு வேண்டாம்டான்னு சொன்னாலும் கேக்காமே, வெச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டான்.

என் அறை நண்பர்கள் ரொம்பவே த்ரில்லாயிட்டாங்க. மாதா மாதம் 60-70 ரூபாய் மிச்சம். வருடத்தில் 750 ரூபாய் வரைக்கும். கண்டிப்பா இதை நாம எல்லோர் தலைக்கும் பயன்படுத்தறோம்னு சொல்லிட்டாங்க.

இப்போதான் பிரச்சினையே. முடிதிருத்தகத்துக்குப் போய் தலைய கொடுத்துட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டே பழக்கமாயிடுச்சே தவிர, எப்படி முடி வெட்டறதுன்னு யாருக்கும் தெரியல. எந்த தலையை வெச்சி சோதனை பண்றது? சுத்திமுத்தி பாத்து, விரோதிகள் (நண்பர்களுக்கு எதிர்ப்பதம்) மூவரும் என் தலையை பார்த்தார்கள். நான்தான் வீட்டிலும் எலி, சோதனைக்கும் எலி. உடனடியா சோதனை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

குரங்கு ஒண்ணு, ரொட்டித்துண்டை ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுத்த கதை தெரியும்தானே? அதே மாதிரி, இங்கே எடுத்தா அங்கே குறையுது, அ எ இ குறையுதுன்னு - இவங்க என் தலையை ஒரு வழியாக்கிட்டாங்க. ஆபரேஷன் சக்ஸஸ் - கத்தினான் ஒருவன். எல்லோருக்கும் பரம திருப்தி. என் தலைதானே, அவங்களுக்கென்ன.


இருந்தாலும் வெளியில் பாக்கறவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியணும்லே. இரவு சாப்பிட வெளியே போனோம். வழக்கமா சாப்பிடற ஹோட்டலில் பரிமாறுபவர் என்னை மட்டும் ரெண்டு தடவை திரும்பி பார்த்த மாதிரி இருந்தது. நண்பர்களோ, அதெல்லாம் ஒண்ணுமில்லேடான்னு சமாளிச்சிட்டாங்க. நான் இன்னும் சமாதானமடையவில்லை. இருட்டில் சரியா தெரியாது. நாளை காலை வெளிச்சத்தில் அலுவலகம் போனாதான் தலையப் பத்தி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியும்னு சொல்லிட்டே வீட்டுக்கு திரும்பி போனேன்.

**

அடுத்த நாள் காலை.

இன்னிக்குன்னு பாத்து எல்லாரும் என் தலையை பாக்கறமாதிரியே இருக்குது. ஆனா நான் அவங்களை பாக்கும்போது, டக்குன்னு குனிஞ்சிடறாங்க.

ட்ரெயினில் தினமும் பார்க்கும் பொண்ணுங்க சிரிக்கிறா மாதிரியே இருக்குது. இதே இன்னொரு நாளா இருந்தா, நானும் அவங்கள பாத்து.. சரி விடுங்க. இப்போ எனக்கு அழுகை அழுகையா வருது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்ப வீட்டுக்கே போய் ஒரு வாரம் மறுபடி தலைமுடி வளர்ற வரைக்கும் லீவ் போட்டுடலாமான்னு ஒரு யோசனை திடீர்னு வந்து போனது.

ஆனா அதுக்குள் அலுவலகமே வந்துடுச்சு.

உள்ளே போனவுடன், ஒரு நண்பனை கூப்பிட்டு கேட்டேன் - "டேய். என்னை சரியா பாரு. ஏதாவது வித்தியாசமா தெரியுதா"?

என்னை மேலே கீழே பார்த்தவன், பகபகன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டான்.

"டேய். ஒழுங்கா சொல்லு. என் தலை அப்படி கேவலமாவா இருக்கு. எல்லாரும் ஏண்டா என்னையே பாக்கிறீங்க"?

அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னால் கோபத்தை.

"டேய்ய்ய்".

"என்னடா? உன்னால் மட்டும் எப்படி இப்படி செய்ய முடியுது"?

"மரியாதையா சொல்லு. எதுக்கு சிரிக்கிறே? தலைய பாத்துதானே"?

"என்னது. தலையா? உன் தலைய யார்றா பாத்தா"?

"அப்புறம் வேற எதுக்கு எல்லாரும் லூசு மாதிரி பாக்கறாங்க? நீ ஏன் சிரிக்கிறே"?

"ரெண்டு காலிலும் வெவ்வேறே ஷூ போட்டிருந்தா முறைச்சி பாக்காமே, என்ன கொஞ்சுவாங்களா"?


**

ஹிஹி. தலைகால் புரியாம நடந்துக்கறான்னு கேள்விப்பட்டிருக்கீங்கல்ல. அதே மாதிரிதான். தலையப் பத்தியே யோசித்துக் கொண்டிருந்ததால், இந்த ஷூவை கவனிக்காமே மாத்திப் போட்டுக்கிட்டேன் போல. போதும் ரொம்ப சிரிக்காதீங்க. ஏன், நீங்க இந்த மாதிரி செய்ததே இல்லையா? போங்க சார், போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.

*****

Read more...

Sunday, June 28, 2009

விருந்தினர்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக

அன்றிலிருந்து 7 நாட்கள் முன்பு:

"ஏங்க, வெளிநாட்டிலேந்து என் கசின் குடும்பத்தோட லீவுலே வந்திருக்கா. நம்ம வீட்டுக்கும் அவங்களை சாப்பிட கூப்பிட்டிருக்கேன். அவங்க பெரிய்ய பணக்காரங்க. நம்மைப் பத்தி மட்டமா நினைச்சிக்கக் கூடாது. அதனால் என்ன பண்றோம்னா, நம்ம வீட்லே சில மாற்றங்களை பண்றோம். அவங்களை இம்ப்ரஸ் பண்றோம்".

"நாம நாமா இருக்கறவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லே. எதுக்கு இந்த வெட்டி பந்தால்லாம்?"

"அதெல்லாம் கிடையாது. நான் எல்லாத்தையும் ப்ளான் பண்றேன். நீங்க வெறும் பணம் கொடுத்தா போதும். அவ வந்து போறவரைக்கும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்க பாப்போம்."

அன்றிலிருந்து 6 நாட்கள் முன்பு:

"ஹால் நடுவிலே இருக்கிற இந்த டிவியை உள்ளே எங்கேயாவது மாத்திடலாம்."

"ஏம்மா? டிவிக்கு என்ன ஆச்சு?"

"நாம எப்பவுமே டிவியே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம்னு அவங்க தப்பா நம்மைப் பத்தி நினைச்சிடக் கூடாதில்லையா. அதனால்தான். டிவிக்குப் பதிலா அந்த இடத்தில் ஒரு மீன் தொட்டி வெச்சி, நிறைய மீன்களை வாங்கி விடலாம். எப்படி ஐடியா?"

"ஏம்மா. அது நிஜம்தானே. நீதான் நாள் முழுக்க உக்காந்து சீரியல் பாக்கிறியே. அது தவிர, இது என்ன அக்வேரியமா, மீன் தொட்டிய நடுவிலே வெச்சி, எல்லாரும் சுத்தி உக்காந்து வேடிக்கை பாக்க?"

"அது சரி. எப்படா என்னை திட்டலாம்னு இருங்க. மீன் தொட்டி வாங்க இன்னிக்கு போறோம்."

அன்றிலிருந்து 5 நாட்கள் முன்பு:

"இந்த சோஃபா அங்கங்கே கிழிஞ்சி அசிங்கமா இருக்கு. இன்னிக்கே போய் புதுசா ஒரு சோஃபா வாங்கறோம். கூடவே இந்த டைனிங் டேபிளும். அவங்க வந்தா, நாம எல்லாரும் ஒரே சமயத்திலே உக்காந்து சாப்பிட வேணாமா?"

"ஏம்மா.. சோஃபாக்கு ஒரு உறை மட்டும் வாங்கிப் போட்டோம்னா போதும். அவங்க ஒரே ஒரு வேளை சாப்பிட வர்றாங்க. ரெண்டு மூணு மணி நேரங்கள் மட்டுமே இங்கே இருக்கப் போறாங்க. அதுக்கு எதுக்கு புது டைனிங் டேபிள்? எவ்ளோ செலவாகும்னு யோசிச்சி பாத்தியா?"

"செலவானா பரவாயில்லை. நாளைக்கு அவ நம்ம வீட்டைப் பத்தி மத்தவங்ககிட்டே நல்லபடியா சொல்ல வேணாமா? எனக்கு அதுதான் முக்கியம்."

அன்றிலிருந்து 4 நாட்கள் முன்பு:

"அவ புருஷன் சைவமாம்."

"ஏம்மா, இருக்கிற பிரச்சினை போதாதுன்னு ஜாதி, மத பிரச்சினை வேறே கொண்டு வரப்போறியா? எனக்கென்னவோ பயமாயிருக்கு."

"ஐயோ.. அதில்லே... அவர் அசைவம் சாப்பிட மாட்டாராம். அதனால், நான் வெஜ்-பிரியாணியில் ஆரம்பிச்சி, நிறைய ஐட்டங்கள் பண்ணனும். "

"இதோ பாரும்மா. வெளிநாட்டுலேந்து வர்றவங்க நிறையல்லாம் சாப்பிட மாட்டாங்க. டயட், டயட்ன்னு இருப்பாங்க. நீ பாட்டுக்கு எக்கச்சக்கமா சமைச்சி எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணாதே. "

"சும்மா உளறாதீங்க. நம்ம வீட்டுக்கு வந்தவங்களுக்கு வயிறார சாப்பாடு போடவேணாமா. அதனால் விதவிதமா பண்ணித்தான் ஆகணும். நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க. நான் சாப்பாட்டு மெனுவை யோசிக்கணும்."

அன்றிலிருந்து 3 நாட்கள் முன்பு:

"ஏங்க.. என்கிட்டே இருக்குற புடவையெல்லாமே ரொம்ப பழசாயிடுச்சு. இந்த சமயத்துலே இவங்க வேறே வர்றாங்க. அதனால் சாயங்காலம் கடைக்குப் போய் எனக்கு புதுசா ரெண்டு மூணு புடவை வாங்கறோம். நீங்களும் ஜல்லடை மாதிரி பனியன் போட்டுட்டு அவங்க முன்னாடி உக்காராதீங்க. புதுசா பனியன் சட்டை வாங்கிக்குங்க."

அன்றிலிருந்து 2 நாட்கள் முன்பு:

"இதோ பாருங்க. அவங்க எதிரே உம்மணாமூஞ்சி மாதிரி உக்காந்திருக்காதீங்க. ஏதாவது ஜோக்கு புத்தகங்களை வாங்கி படிச்சி, நாலைஞ்சி நல்ல ஜோக்குகளை தெரிஞ்சி வெச்சிக்கிட்டு, அப்பப்ப எடுத்து விடுங்க."

அன்று:

"ஹலோ... ஹேய் எப்படிம்மா இருக்கே.. சரி சரி.... எப்போ வர்றீங்க... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம். என்ன? அப்படியா? ஓ... சரி சரி... நோ ப்ராப்ளம்... ஆனா, அடுத்த தடவை ஊருக்கு வரும்போது முதல்லே எங்க வீட்டுக்குத்தான் வரணும்".

அன்றிலிருந்து 10 நாட்கள் கழித்து:

சொல்லச் சொல்ல கேட்காமே, ஏகப்பட்ட செலவுகள் பண்ணி, சமையலும் பண்ணி - கடைசியில் அன்னிக்கு அவ சொந்தக்காரங்க வீட்டுக்கு வரவேயில்லை.

இவளோட வெட்டி பந்தாவாலே இப்ப பத்து நாளா நான் பழைய்ய்ய்ய்ய சாதத்தை சாப்பிடுட்டு இருக்கேன். தினமும் ஆபீஸுக்கும் ஒரே புளியோதரையே எடுத்துட்டுப் போறதாலே, இப்ப எல்லாரும் என்னை - புளியோதரை சுரேஷ்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

அதனால் மக்களா - யார் வீட்டுக்காவது சாப்பிட வர்றேன்னு சொன்னீங்கன்னா, தலையே போனாலும் பரவாயில்லை, போய் மரியாதையா சாப்பிட்டு வந்துடுங்க. இல்லேன்னா, அந்த வீட்டுலே எப்படி கஷ்டப்படுவாங்கன்னு என்னைப் பாத்து தெரிஞ்சிக்கோங்க...

ஐயயோ.. இவ வர்ற சத்தம் கேக்குது. அதுக்குள்ளே இந்த டைரியை மறைச்சி வெச்....

*****

உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதிய சிறுகதை. போட்டியின் விவரங்கள் இங்கே இருக்கு.

Read more...

Tuesday, January 27, 2009

ஒரு சதுரங்கப் போட்டியில் கடைசி நிமிடங்கள்...

தேசிய சதுரங்கப் போட்டியில் இன்று இறுதிப் போட்டி. ஆட்டம் ஆரம்பிச்சி இருபது நிமிஷம் ஆயாச்சு.

அங்கே கண்ணாடி போட்டுட்டு ஆடறாளே, அவதான் என் பொண்ணு. அவளுக்கு இப்போ பதினைந்து வயசுதான் ஆகுது. அஞ்சு வயசுலே சதுரங்க விளையாட்டை கத்துக்க ஆரம்பிச்சவ, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு ஏகப்பட்ட பரிசுகளை வாங்கியிருக்கா. அவ்ளோ பரிசுகளை அடுக்கி வைக்கவே எங்க வீட்லே இடமில்லை. எப்பவும் அவளுக்கு இந்த விளையாட்டை பற்றி சிந்தனைதான். அதனால் சரியா படிக்க மாட்டான்னு நினைச்சிக்காதீங்க. படிப்புலேயும் கெட்டிதான் அவ. எப்படியும் பத்தாவது ரேங்கிற்குள் வந்துடுவா. இந்த வெற்றி எல்லாத்துக்கும் அவளோட விடாமுயற்சிதான் காரணம்.

சரி. இந்த மேட்சுக்கு வருவோம்.

இந்த போட்டியின் தகுதிச்சுற்றுகள் எல்லாவற்றிலும் மிகச்சுலபமாக ஜெயித்துவிட்ட என் மகள், இறுதிப்போட்டியிலும் அப்படியே ஜெயித்து விடுவாள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு மிக அதிகமாகவே இருக்குது. கூடியிருக்கும் மக்கள் கூட்டம் மிக உன்னிப்பாக இந்த போட்டியை பாத்துக்கிட்டிருக்காங்க. எப்போதும் போலில்லாமல் இந்த தடவை தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், இந்த போட்டியை இந்தியா முழுக்க லட்சக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


கடந்த சில நிமிடங்களாக எதிராளியை 'செக்-மேட்' செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். எதிராளி எப்படியோ தப்பித்து விடுகிறார். சற்றும் மனம் தளராமல் இதோ... இதோ... மறுபடியும் 'செக்' வைக்கிறாள். இப்போ பாப்போம். ஆஹா.. ஆஹா... இது 'செக்-மேட்'டேதான். முடிந்தது. ஆட்டம் முடிந்து விட்டது. எதிராளி தோல்வியை ஒப்புக்கொண்டு என் மகளிடம் கை கொடுக்கிறார்.

என் மகள் ஜெயித்தே விட்டாள்.

நாங்கள் இருக்கையை விட்டு எழுந்து உற்சாகத்தில் கத்திக் கொண்டிருக்கிறோம். எனக்கு கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.பக்கத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் எனக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்கின்றனர். "டேய், ட்ரீட் எங்கேடா? என கேட்கின்றனர். அனைவரையும் பொறுமை காக்கச் சொல்லிவிட்டு நான் என் மகளிடம் ஓடிப்போக முயற்சி செய்கிறேன்.

பின்னாலிருந்து என் மனைவி, "ஏங்க பர்சை எடுத்து, காசு குடுங்க. இவங்க ட்ரீட் கேக்கறாங்க" என்கிறார். நானோ படபடப்பில் இருந்தேன் - "இப்போ என்னம்மா அவசரம், முதல்லே நம் பொண்ணைப் பாப்போம் வா" என்று அவளையும் இழுத்துப்போக முயற்சிக்கிறேன்.

என் அவசரத்தைப் புரிந்துகொள்ளாத அவளோ - "ஏங்க, பாக்கட்லேந்து பர்சை எடுத்து காசை கொடுங்க" - "ஏங்க, பாக்கட்லேந்து பர்சை எடுத்து காசை கொடுங்க" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். "காசை கொடுக்கலேன்னா இவ விடமாட்டா" என்று சொல்லிக் கொண்டே நானும் எடுத்துக் கொடுக்கிறேன்.

அப்போதுதான் கவனித்தேன் - "யார் இந்த பொண்ணு? இவ எப்படி திடீர்னு என் முன்னாடி வந்தா? ஏன் இவளும் என்கிட்டே காசு கேக்கறா?"

"சதுரங்கம் வாங்க வந்த கடையிலே, காசை எடுத்துக் கொடுத்துட்டு சட்டுபுட்டுன்னு வீட்டுக்குக் கிளம்பற வழியை பாக்காமே -- 'பே'ன்னு கடைக்காரி மூஞ்சியை பாத்துக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? -- பின்னாடி வரிசையில் நிக்கறவங்கல்லாம் கத்தறாங்க பாருங்க" - இது மறுபடியும் என் மனைவிதான்.

The End.

*****


பிகு - 1: வழக்கம்போல கனவு / பகல் கனவு மாதிரி கதையை முடிச்சதுக்கு மன்னிச்சிடுங்க.

பிகு - 2: இந்த வாரம்தான் கடைக்குப் போய் சதுரங்கம் வாங்கிட்டு வந்தோம். அதை சஹானாவுக்கு சொல்லிக் கொடுத்து பெரிய சாம்பியனாக்கணும்னு பேசிக்கொண்டோம். அதைத்தான் கதையா போட்டிருக்கேன்... ஹிஹி...

பிகு - 3: லேபிள்லே 'சொந்த கதை'ன்னு போட்டா கண்டுபிடிச்சிடுவீங்கன்னுதான், 'சிறுகதை'ன்னு போட்டிருக்கேன்!!!

Read more...

Sunday, January 4, 2009

திருமண நாள் இனிப்பு...!!!

முன்னுரை:

இந்த கற்பனைக் கதையில் இரண்டு கதாபாத்திரங்கள். கணவன் மற்றும் மனைவி. எந்த வீட்லேயும் கணவன் பேச்சை யாருமே கேக்கறதில்லைன்றதாலே, இங்கேயும் கதை முழுவதும் மனைவி மட்டுமே பேசப்போறாங்க. நடு நடுவே புள்ளி வெச்ச இடத்திலெல்லாம் கணவன் ஏதோ ஒண்ணு சொல்றமாதிரி கற்பனை பண்ணிக்குங்க.


முக்கியமான டிஸ்கி:

இது என் சொந்தக்கதை இல்லை.

-----

காலை 10 மணி:
(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான் பேசறேன்

....

நீங்க எப்பவுமே பிஸிதான். ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க.

...

நம்ம திருமண நாள் வருது. ஞாபகம் இருக்கா?

...

என்னது அடுத்த வாரமா? பக்கத்துலே இருந்திருந்தீங்கன்னா நடக்கறதே வேறே... என் தலயெழுத்து.. நல்லா கேளுங்க. நாளைக்குத்தான் நம்ம திருமண நாள்.

...

சரி சரி... மன்னிச்சிட்டேன். என்ன ஸ்வீட் பண்ணட்டும்னு சொல்லுங்க.....அப்புறம் அது செய்யலியா இது செய்யலியான்னு கேக்கக்கூடாது.

...

சரி இன்னும் கொஞ்ச நேரத்துலே ஒரு ஸ்வீட் செய்துட்டு உங்களை கூப்பிடறேன். பை....

மதியம் 1 மணி:
(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான் பேசறேன்.

...

நம்ம வீட்லே இருக்கே ஒரு சின்ன சுத்தியல், அது உடைஞ்சி போச்சு.

...

நான் என்ன பண்ணேன். நம்ம கல்யாண நாளுக்குத்தான் ஸ்வீட் செய்யலாமேன்னு மைசூர் பாக் செஞ்சேன். அது என்னடான்னா, கெட்ட்ட்டியா ஆயிடுச்சு. கத்தியாலே அதை துண்டு துண்டா வெட்டவே முடியல. அதனால், சுத்தியாலே ரெண்டு தட்டு தட்டினேன். அது பொடிப்பொடியா ஆயிடுச்சு. பலமா அடிச்சதுலே சுத்தியும் பிச்சிக்கிட்டு வந்துடுச்சு.

...

சரி சரி கத்தாதீங்க.

...

எனக்கு ஒண்ணும் ஆகலே. சரி விடுங்க. வேறே ஏதாவது ட்ரை பண்ணிட்டு மறுபடி கூப்பிடறேன்.

...

மதியம் 3 மணி:

(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான்.

...

ஒண்ணும் ஆகலே. தொணதொணங்காமே நான் சொல்றத கேளுங்க.

...

நம்ம வீட்லே ஒரு வாணலி இருக்குதில்லே. அத இனிமே பயன்படுத்த முடியாது.

...

யாரும் தூக்கிட்டெல்லாம் போகலே. நாந்தான் கோதுமை அல்வா பண்ணலாம்னு பாத்தேன். எல்லாம் உங்க திருமண நாளுக்குத்தான். அது வாணலியிலே ஒட்டிக்கிட்டே வரவே மாட்டேங்குது. நானும் என்னென்னவோ பண்ணி பாத்துட்டேன். ம்ஹூம். அல்வா வரவேயில்லே. அதனால், அல்வாவோட வாணலியை குப்பைத்தொட்டியில் போட்டுட்டேன்.

...

ரொம்ப சாரிங்க.

...

சரி. இன்னும் ஒரே ஒரு சான்ஸ்தான். ஈஸியா ஒண்ணு பண்ணப்போறேன். நீங்களே அசந்து போயிடுவீங்க பாருங்க. நான் மறுபடி கூப்பிடறேன்.

...

மாலை 5 மணி:
(ட்ரிங் ட்ரிங்) ஹலோ கேக்குதா.

...

நான் தோத்துட்டேன். எனக்கு ஒண்ணுமே செய்ய வரலை. அழுகை அழுகையா வருது.

...

ஒண்ணுமில்லே. ரொம்ப சிம்பிளா இருக்குமேன்னு குலோப் ஜாமூன் பண்ணேன். அதுவும் சரியாத்தான் வந்துக்கிட்டிருந்தது. ஆனா பாருங்க.

...

சொல்றத கேளுங்க. அது உருண்டையாவே இல்லே. பொடிப்பொடியா ஆயிடுச்சு. உங்களுக்கு பொடி குலோப் ஜாமூன் பிடிக்குமா?

...

சரி அது இருக்கட்டும். வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா கொடுத்துடலாம். நம்ம கல்யாண நாளுக்குத்தான் என்ன பண்றதுன்னே தெரியல. நீங்க எதுக்கும் வீட்டுக்கு வரும்போது சக்கரை வாங்கிட்டு வாங்க. எல்லா சக்கரையும் இன்னிக்கு ஒரே நாள்லே தீந்துடுச்சு.

...

அடுத்த நாள் காலை 7 மணி:

என்னங்க எழுந்திருங்க. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.

...

எங்கே வாய திறங்க பாப்போம். இந்த இனிப்பு சாப்பிடுங்க.

...

சக்கரை.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP