Thursday, December 24, 2020

மேடை நாடகங்கள்

மேடை நாடகங்கள்

சாவிசி’யில் மௌலி & காத்தாடியின் பேட்டிகளைப் பார்த்தபிறகு, நானும் அந்தக் காலத்தில் நாடகங்களில் நடித்த....... பதறாதீங்க... நாடகங்களைப் பார்த்த நினைவுகள் வந்ததால்.. இந்த பதிவு. 

திருவல்லிக்கேணியில், (அப்பாடா, ஊர் பேர் வந்துடுச்சு!!) பார்த்தசாரதிஸ்வாமிசபா (ஒரே சொல் - நன்றி அலெக்ஸ்!) எங்க வீட்டிலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் இருந்தது. நான் (அப்போதும்) சின்ன வயசாக இருந்தப்போ, அது அரங்கமா இருந்தது. நாடகங்கள் தொடர்ச்சியாக நடக்கும். எங்க + அக்கம்பக்க பள்ளிகளின் ஆண்டு விழாக்களும் அங்கேதான் நடக்கும். பிறகு அந்த அரங்கத்தை இடித்து அபார்ட்மெண்ட்களாக கட்டிட்டாங்க. இப்போ அந்தந்த வீடுகளில், தொலைக்காட்சியில் மட்டும்தான் நாடகங்கள் வருது. ஆனா, அவற்றை பார்க்க வெளியாட்களுக்கு அனுமதியில்லை. சரி விடுங்க. 

ஏதோ ஒரு விசு படத்தில் ஒரு வசனம் வரும். ‘ஊரில் இருக்கும் 2 நாடக க்ளப்களில் நான் உறுப்பினர். மாதம் 4 நாடகங்களுக்கு டிக்கெட் வரும். ஆனா இவ எந்த நாடகங்களுக்கும் போக மாட்டேங்கறா’. தீபாவளி சீட்டு மாதிரி அப்போ இருந்த நாடக க்ளப்களில் எங்க மாமாவும் ஒரு மெம்பர். இல்லையில்லை. அவரே ஒரு பார்ட்னர் மாதிரி. 2-3 பேர் நண்பர்கள் சேர்ந்து ஒரு க்ளப் வைத்திருந்தனர். இந்த சபாவில் நடக்கும் நாடகங்களுக்கு மொத்தமாக டிக்கெட் வாங்கி, உறுப்பினர்களுக்கு கொடுக்கும் வேலை. 

வாராவாரம் நடக்கும் நாடகங்களுக்காக இவர் அந்த அரங்கத்தில் இருக்க, நாங்க சிறுவர்கள் அங்கேயே விளையாட்டிருப்போம். நாடகம் துவங்கும்போது, வாசலில் நின்று, சீட்டு கிழித்து அனைவரையும் உள்ளே அனுப்பும் வேலை இவருக்கு. என்னை ஒரு நாற்காலியில் அமர்த்தி, ‘நான் வந்து கூட்டிட்டுப் போறவரை எங்கேயும் ஓடிடாதே. இருட்டில் தேடமுடியாது’ன்னுட்டு போயிடுவார். நாமும் எதுவும் புரியாவிட்டாலும், நாடகங்களைப் பார்த்திருந்தது வழக்கமா இருந்தது. ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.சேகர், காத்தாடி... என இவர்களின் நாடகங்களெல்லாம் அங்கு பார்த்த நினைவு இருக்கு. 

அப்படி துவங்கிய நாடகங்களைப் பார்க்கும் படலம், பிறகு, நினைவு தெரிந்தபிறகு (அப்படின்னா?) கலைவாணர் அரங்கம், ராணி சீதை ஹால், வாணி மகால் இவற்றிலெல்லாம் தொடர்ந்தது. மேற்கூறியவர்களுடன் பிறகு ரசித்துப் பார்த்தது - கிரேசியின் நாடகங்கள்.

பல முறை பார்த்த நாடகம்னா நினைவுக்கு வருவது - எஸ்.வி.சேகரின் ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட். பேய் பிடித்த அவர், ஒரு கதவில் வெளியேறி, சில நொடிகளில் இன்னொரு கதவு வழியா வரும்போது, வேறு உடைகளை அணிந்து வருவதைப் பார்த்தெல்லாம் அந்த காலத்தில் கை தட்டியது, விசில் அடித்தது (சரி.. வெறும் காத்துதான்) இப்போ நினைத்தாலும்... ஒண்ணும் ஆகவில்லை... சும்மா சொன்னேன். 

LIVE நாடகங்கள் என்பதால், அதில் தெரியும் பிழைகள், அவற்றை சமாளிக்க அவர்கள் சொல்லும் வசனங்கள்னு அவையும் ரசிக்கும்படியா இருக்கும். 

ஒரு முறை ஒரு கேரக்டர் தன் சட்டைப்பையிலிருந்து எதையோ எடுக்கும்போது, சில காகிதங்கள் கீழே விழுந்துடும். அவர் அதை எடுக்காமல் திரும்பிவிட, சேகர் அவரைக் கூப்பிட்டு - ‘இந்த குப்பையை யார் அள்ளுவா? நானா? இப்படி குப்பை போட்டா, சபாகாரர் கொடுக்க வேண்டிய பணத்தை குறைச்சிடுவார். ஒழுங்கா எடுத்துப் போங்க’ன்னு அவரைத் திட்டுவார். 

இன்னொரு நாடகத்தில், ஒருவர் மைக்கிற்கு சிறிது தூரத்தில் நின்று பேச, மேடையிலேயே ‘உங்களுக்கு இங்கே நின்று பேசணும்னு மார்க் போட்டிருக்கில்ல. பின்னே ஏன் அங்கே நின்று பேசுறீங்க?’ன்னு ஒரு வசனம். 

இதெல்லாம் அந்தந்த நேரத்தில் சேர்க்கப்பட்ட வசனங்கள்னு புரியும். இதே போல பல சொல்லலாம். ஆனா மறந்துடுச்சு. ஆகவே சொல்ல முடியாது. 

1995-96 நினைக்கிறேன். இதுவே சோ இறுதியாக நடிக்கும் மேடை நாடகம்னு விளம்பரம் வந்திருந்தது. கலைவாணர் அரங்கில் தொடர்ச்சியாக ஒரு வாரம் அவருடைய நாடகங்கள். ஒரு 2 நாள் மட்டும் போய் பார்த்தோம். 

1999ல் சென்னையை விட்டபிறகு, தில்லியில் தமிழ்ச்சங்கத்திற்கு அருகிலேயே பல காலம் வசித்தாலும், பல நாடகங்கள் அங்கு நடந்திருந்தாலும், ஒருமுறைகூட போகவில்லை. (வாராவாரம் சனிக்கிழமை திரைப்படத்திற்கு மட்டும் சென்றுவிடுவோம்!!).

அந்த பழைய நாடகங்கள் பெரும்பாலும், யூட்யூப்பிலும், mp3யாக இப்போதும் கிடைக்குது. ஆனா, நேரில் பார்க்கும் அந்த அனுபவம் இதில் இல்லாததால், இவற்றைப் பார்க்கும் / கேட்கும் ஆர்வமே வரவில்லை. 

பல்லாண்டுகள் இத்தகைய நாடகங்களை பார்த்த பாதிப்பில் எழுதியதே இந்த ‘நாடகம் மாதிரி’ மினி தொடர். படிச்சிட்டு திட்டக்கூடாது. நோ பேட் வேர்ட்ஸ்.

http://boochandi.blogspot.com/2009/03/1.html


***


0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP