உப்புமாவும் மாமியாரும்
சென்ற வாரம் ஒரு பிறந்த நாள் விழாவிற்குப் போயிருந்தோம். வழக்கம்போல், சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சிறுசிறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரியவர்கள் விளையாட்டில் - தங்களுக்கும் தங்கள் துணைவருக்கும் 'பிடிக்காத' படம், நடிகர், நடிகை, வண்ணம், உணவு ஆகியவற்றை எழுதவேண்டும். எந்த ஜோடி அதிகம் பொருத்தமான பதில்களை எழுதியதோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். நிற்க (ஏற்கனவே நின்றிருந்தால் உட்கார்க).
போட்டி முடிவடைந்த பிறகு ஒரு சுவையான தகவல் கிடைத்தது. வந்திருந்த 15 ஜோடிகளில், 10 பேர் தென்னிந்தியர்கள். அந்த 10 ஜோடிகளில், 8 ஜோடிகள் - தங்களுக்கும்/துணைவருக்கும் பிடிக்காத உணவு - உப்புமா என்று எழுதியிருந்தனர்.
இதிலிருந்து அடுத்த போட்டி துவங்கியது. உப்புமா ஏன் பிடிக்காது என்று எல்லோரும் அவரவர் காரணத்தை சொல்ல வேண்டும். யாருடைய காரணம் வித்தியாசமாக இருக்கிறது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்து, இன்னும் சிறிது நேரத்தை கொலை செய்தோம்.
எல்லாம் முடிந்து நான் பேசும்போது கூறியது - மேற்கண்ட 'பிடிக்காத' போட்டியில், மேலும் ஒரு கேள்வி சேர்த்திருக்க வேண்டும் - அது 'உறவு'. அப்படி இருந்திருந்தால், பெண்கள் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஊகிக்க முடியுமா - என்று கேட்டதற்கு, எல்லோரும் ஒரே குரலில் கத்தியது - 'மாமியார்'.
எல்லா மாமியாரும் தொலைக்காட்சித் தொடர்களில் வருகின்றமாதிரி கொடூரமாக இல்லாவிட்டாலும், பல பெண்களின் விருப்பமான 'பிடிக்காத' உறவு என்று வருகிறபோது எல்லோரும் 'மாமியார்' என்றே குறிப்பிடுகின்றனர்.
உப்புமா ஏன் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தாலும், எல்லா (அன்று அங்கிருந்த) பெண்களுக்கு 'மாமியார்' ஏன் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியாததற்குக் காரணம் நான் ஆண் என்பதால்தானே?
3 comments:
மாமியாரும் ஒரு காலத்தில் மருமகள் அதே போல தன் அம்மாவும் இன்னொரு பெண்ணுக்கு மாமியாரே என்பதை பெண்கள் உணர்ந்து கொண்டால் மாமியார் பதவி வில்லங்கமாகாது.
வாங்க கண்மணி -> ரொம்ப சரியா சொன்னீங்க... நன்றி...
இன்னிக்குத்தான் மொதல் தோசை மாமியார் தோசை என்ற பெயர்க் காரணத்தைக் கோபாலுக்குச் சொல்லிக்கிட்டு இருந்தேன்:-))))
நல்ல மாமியார்களும் உலகில் உண்டு.
Post a Comment