Wednesday, March 12, 2008

கிபி 2030 - பொதுத்தேர்தல் முடிவுகள் - திமுக மற்றும் பாமக பிடிவாதம்.

வணக்கம். செய்திகள் வாசிப்பது தமிழ்க்குடிமகள்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.

தமிழகத்தின் திமுக, பாமக கட்சிகள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் சென்ற பாஜக ஆட்சியில் பங்குபெற்று, பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பு அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. மேலும், இந்த கட்சிகள் இதே போல் கடந்த 35 வருடங்களாக தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் உள்ளன என்பதும் - பொதுத்தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கூட்டணி மாறிவருகின்றன என்பது கூடுதல் செய்தி.

முதற்கட்டமாக, 185 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளுக்கு சரிசமமாக பதவிகள் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியத்துறைகளான ரயில்வே, கப்பல் மற்றும் போக்குவரத்து, மருத்துவம் மற்றும் நீர்வளத்துறை - ஆகிய நான்கு துறைகளுக்கும் அமைச்சரை நியமிப்பது குறித்து குழப்பம் நிலவிவருவதாக நம் சிறப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ், திமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் நீர்வளத்துறை அமைச்சர் பதவி தங்களுக்கு வேண்டாம் என்று மறுத்து வருவதாகவும், அதே சமயம் ரயில்வே, கப்பல் மற்றும் போக்குவரத்து, மருத்துவம் ஆகிய மூன்று துறைகளும் தங்களுக்கே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருவதாகவும் தெரிவித்தார். அதனால், பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதாவது, யாருமே அமைச்சராக முன்வராத காரணத்தால், நீர்வளத்துறையையே கலைத்து விட அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இனிமேல், இந்த துறை மாநிலங்கள் வசமே இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், காங்கிரஸ், திமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளையும் திருப்திப்படுத்தும் வகையில், ரயில்வே, கப்பல் மற்றும் போக்குவரத்து, மருத்துவம் ஆகிய மூன்று துறைகளையும் மூன்றாக பிரித்து, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ரயில்வே துறை இப்படி பிரிக்கப்படுகிறது. மக்கள் ரயில்வே, சரக்கு ரயில்வே மற்றும் மின் தொடர் ரயில்வே.

கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இப்படி பிரிக்கப்படுகிறது. மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா.

மருத்துவத்துறை இப்படி பிரிக்கப்படுகிறது. மனித மருத்துவம், கால்நடை மற்றும் ஆராய்ச்சி.

இந்த தீர்மானங்களுக்கு அமைச்சரவையின் முழு ஆதரவு கிடைத்ததாகவும், மேற்கூறிய மூன்று கட்சிகளும் திருப்தி தெரிவித்ததாகவும் கடைசியாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யவே, சில துறைகளை விரும்பி கேட்டு வாங்கியதாக, திமுக மற்றும் பாமக கட்சிகள் தெரிவித்தன.

இத்துடன் செய்திகள் முடிவடைந்தன. மீண்டும் செய்திகள் நாளை காலை இதே நேரத்தில். நன்றி. வணக்கம்.

6 comments:

Anonymous,  March 13, 2008 at 3:38 AM  

A hilarious report indeed. A small corection.Even now the Animal Hudbandry Department is not with the Health Ministry. Hence the question of bifurcating the Helath Ministry may not arise !

சின்னப் பையன் March 13, 2008 at 9:04 AM  

Thanks Anony for the info.
But you got the point.. right?.. To get an additional ministerial position - anything can be done... :-)

பினாத்தல் சுரேஷ் March 15, 2008 at 10:37 AM  

சின்னப்பையன்,

ஒரு ஆலோசனை. நகைச்சுவை எழுத முடிவெடுத்துவிட்டால் எல்லா இடங்களிலும் அடித்து ஆட வேண்டும். உதாரணமாக, கப்பல் போக்குவரத்தை மூன்றாக நீங்கள் பிரித்திருப்பது, feasible ஆக இருப்பதால், மிகைப்படுத்தல் குறைவு என்பதால், நகைச்சுவை குறைவு.

அதையே,

கப்பலின் முதல் அடுக்குத்துறை அமைச்சராக திரு xxxx அன்புமணி ராமதாஸும், வலப்பக்கக்கப்பல் துறை அமைச்சராக திரு மு க ஸ் வ ம வைப்புநிதியும், இடப்பக்கக் கப்பல்துறை அமைச்சராக திரு ஈ வே கே சா மு கோ தொல்காப்பியனும் நியமிக்கப் படுகிறார்கள் -- என்று யோசிச்சுப்பாருங்க?

நீ என்ன பெரிய எழுத்தாளரா அட்வைஸ் எல்லாம் கொடுக்கறேன்னு கேக்க மாட்டீங்கன்னு நம்பறேன் :-)

மங்களூர் சிவா March 15, 2008 at 3:58 PM  

:))))))))))))

நல்லா எழுதறீங்க

வாழ்த்துக்கள்.

சின்னப் பையன் March 15, 2008 at 5:47 PM  

cheena (சீனா) -> நன்றி.

பினாத்தல் சுரேஷ்: ஹாஹா.. இது ரொம்ப நல்லாயிருக்கே... அடுக்குக்கு தகுந்தாற்போல் அமைச்சரா.. நம்மாளுங்க எதுவேணா செய்வாங்க...

என்ன இப்படி சொல்லிபுட்டீக?.. நல்லாத்தானே சொல்லியிருக்கீக... இதுக்கு ஏன் கோச்சிக்கணும்?... நன்றி...:-)

மங்களூர் சிவா -> வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP