Sunday, February 24, 2008

சென்னையில் வடிவேலு

மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வந்து இறங்குகிறார் வடிவேலு. வெளியே வந்தவுடன் ஒரு ஆட்டோவை நோக்கி போகிறார்.

ஏம்பா, ஆட்டோ மைலாப்பூர் வருமா?
அதை ஆட்டோக்கிட்டேயே கேளுங்க..

(ஆகா.. காலையிலேயேவா..) அட.. ஆட்டோன்னா ஆட்டோ இல்லேப்பா.. உங்கிட்டேதான் கேக்குறேன்.
வாங்க.. போலாம்.. பஸ்லேயா / நடந்தேவா?

அட என்னப்பா இது... நீ ஆட்டோவிலே மைலாப்பூர் போவியா?
நான் ஆட்டோவிலே மைலாப்பூர் போவேன் இல்லெ எங்கே வேணா போவேன், உனக்கென்ன?


ஐயய்யோ, என்கூட ஆட்டோவிலே மைலாப்பூர் வருவியா?
ஏன், உனக்கு தனியா போக பயமா இருக்கா?

இது ஆவுறதில்லே. நான் வேறே ஆட்டோ பாத்துக்குறேன்.
சார்.. சார்... மன்னிச்சிடுங்க.. வாங்க மைலாப்பூர் போகலாம்.
அப்படி வா வழிக்கு.. வா போலாம்.

(எழும்பூரிலிருந்து புறப்பட்டு தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி தாண்டி போய்க்கொண்டிருக்கின்றனர்).

ஏன்பா சென்னையிலே எங்கே பாத்தாலும் மக்கள் கும்பல் கும்பலா இருக்காங்க?
தனியா வெளியே போனா தொலெஞ்சி போயிடுவாங்கல்லே...

அட அப்படியா, நாந்தான் அப்போ ரொம்ப தைரியசாலியா? தனியா போயிட்டுருக்கேனே?
நீ எங்கே தனியா போறே. நானுந்தான் கூட வரேனே?
(அடடா.. இவன் ரொம்ப நக்கலா பேசறானே?... வீடு போய் சேர்ற வரைக்கும் இவன்கிட்டே வாய் கொடுத்து மாட்டிக்ககூடாது..).

(ஒரு வழியாக ஊர் சுற்றிவிட்டு மைலாப்பூர் வந்தடைகின்றனர்).

ஏம்பா, இவ்ளோ தூரமா இருக்கு மைலாப்பூர்?ஆமா, சென்னை எவ்ளோ பெரிசு தெரியுமா? நான் உன்னே குறுக்கு வழியிலே கூட்டி வந்துருக்கேன்னா பாத்துக்கோ...
அப்படியா.. அப்படியா.. ரொம்ப நன்றிப்பா..

அதெல்லாம் சரி, மைலாப்பூர் வந்துடுச்சு.. மைலாப்பூர்லே எங்கே போகணும்னு சொல்லு.

இந்தா சீட்டு. இந்த தெருவுக்குதான் போகணும்.

(5 நிமிடங்களுக்குப் பிறகு)

இங்கே பாருங்க... இந்த தெருவுதான்... என்னய்யா. இது ரொம்ப பணக்காரவுங்க இருக்கற தெருவாச்சே... என்ன நம்பரு வேணும் உனக்கு..

எஸ்.பி (S.P) வீடு எங்கேயிருக்குன்னு தெரியுமா?

என்னது, (பயத்துடன்) எஸ்.பி ஐயா வீடுங்களா.. அங்கேயா போறீங்க? உங்களுக்கு அவரை தெரியுமா?

தெரியுமாவா? சரியா போச்சு... நானும் எஸ்.பியும் சின்ன வயசில அரை ட்ராயர் போட்ட காலத்திலிருந்து நண்பர்கள், தெரியுமா?

அப்படியா?

ஆமா. அவன் இப்போ பெரிய ஆளாயிட்டாலும், என்னை இன்னும் மறக்காம நினைவு வச்சிருக்கான், தெரியுமா?

அய்யய்யோ, அப்படியா?.. சார்.. சார்... நான் தெரியாம உங்களை ரொம்ப கலாச்சிட்டேன்... ஊர் ரொம்ப சுத்தி கூட்டிவந்துட்டேன்.. இதெல்லாம் போய் நீங்க ஐயாகிட்டே சொல்லிடாதீங்க... என் பொழப்பே நாறிப்போயிடும்.

சேசே... நீ என்ன ரொம்ப வருத்தப்படறே.. நான் இதெல்லாம் சொல்லமாட்டேன். ஓகேவா? நீ மட்டும் அவர் வீட்டுக்கிட்டே போய் என்னெ ஒழுங்கா விட்டுடு.

எஸ்.பி வீட்டுக்கிட்டே நான் வரலை. தெரு முனையிலேயே உங்கள இறக்கி விட்டுடுறேன். நீங்க நடந்து போய்க்கோங்க...
சரி சரி.. நான் இங்கேயே இறங்கிக்கறேன். ஆட்டோக்கு எவ்ளோப்பா ஆச்சு...?

உங்களுக்கு புண்ணியமாப் போகும். நீங்க ஒண்ணுமே கொடுக்க வேண்டாம். ஆளெ விட்டாப் போதும் சாமி.. நான் போயிட்டு வரேன்.

(ஆட்டோக்காரர் வேகமாக போய்விடுகிறார்).

அட என்னடா இது இவன் இப்படி ஓடறானே? என் நண்பன் சரவண பெருமாள் (எஸ்.பி) இந்த தெருவுலே ஒரு பங்களாலே watchmanஆ வேலை பாக்குறான். எனக்கும் பக்கத்து பங்களாவுலே watchman வேலை வாங்கி தரேன்னு வாடான்னான். அதெ சொல்றதுக்குள்ளே பயபுள்ள ஏதோன்னு நெனெச்சி இப்படி பயந்து ஓடிட்டானே?

சரி எப்படியோ, ஆட்டோலே செலவில்லாமே மைலாப்பூர் வந்து சேந்தாச்சு... இப்படியே பேசிப் பேசியே இங்கே காலத்தை ஓட்டிடவேண்டியதுதான்.. மதுரைக்காரன்னா சும்மாவா!!!

(வெற்றி நடை போட்டு போகிறார்).

4 comments:

துளசி கோபால் February 24, 2008 at 10:22 PM  

:-)))))))))))))))))

சூப்பர் மாதிரி இல்லைய்யா....சூப்பரேதான்:-)

நித்யன் February 25, 2008 at 11:00 AM  

நல்லாவே காமெடி பண்றீங்க...

சின்னப் பையன் February 25, 2008 at 12:20 PM  

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க - தமிழ் பிரியன், துளசி மற்றும் நித்யகுமாரன்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP