Monday, February 11, 2008

சாக்லெட் வாங்கலியோ சாக்லெட்







சென்ற வாரம் ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டிலிருந்து தங்கமணியின் போன்.

ரங்கமணி... நம்ம பாப்பாவிற்கு அவள் பள்ளியில் ஒரு டப்பா நிறைய சாக்லெட்கள் கொடுத்திருக்காங்க...
அப்படியா... எதுக்கு.. என்ன விஷயம்..
தெரியல..
டீச்சர் ஒண்ணும் சொல்லலியா?
ஒரு கடிதம் கொடுத்திருக்காங்க... நீங்களே வந்து படிச்சு பாருங்க....
ஓகே.. என் பொண்ணாச்சே.. எதிலாவது பரிசு வாங்கியிருப்பா.. நான் வந்து பாக்குறேன்.

உடனே எல்லா நண்பர்களுக்கும் தொலைபேசி சொல்லியாகிவிட்டது. பாப்பாவிற்கு நிறைய சாக்லெட்கள் கொடுத்திருக்காங்க... எல்லோரும் வந்திடுங்கப்பா... வந்து எடுத்துக்கங்க...

சரி.. சாயங்காலமாச்சு... வீட்டுக்குப் போய் பார்த்தால் மொத்தம் 50 சாக்லெட்டுகள். ஒவ்வொன்றும் ஒரு டாலர். நாம் அவற்றை விற்று 50 டாலர்கள் பள்ளிக்குத் தர வேண்டும். இது ஒரு Fund Raiser.

அடப்பாவிகளா... எங்கே போய் விற்பது என்று யோசிக்கும்போது - சரி. நம் நண்பர்கள்தான் வருகிறார்களே - அவர்கள் அனைவரும் ஒன்று/இரண்டு வாங்கினாலே, ஐம்பது சாக்லெட்டுகள் விற்று விடலாம் என்று நினைத்தோம். மறுபடி எல்லோருக்கும் தொலைபேசி - வரும்போது ஒரு/இரண்டு டாலர்களோடு வரவும் என்று சொல்லியாயிற்று.

உடனே வருகிறோம் என்று சொன்னவர்கள்தான் - அடுத்த ஒரு வாரத்திற்கு ஒருவரையும் காணவில்லை. என்னடா வரவில்லையாயென்றால் கீழ்க்கண்ட காரணங்களில் ஏதாவதொன்றை சொல்கின்றனர்.

1. கடைகளுக்குப் போகவேண்டியிருந்தது.
2. தங்கமணிக்கு/பாப்பாக்கு ஜலதோஷம்
3. அவர்கள் வீட்டிற்கு வேறு நண்பர்கள் வந்திருந்தனர்
4. இந்தியாவிற்கு நிறைய தொலைபேச வேண்டியிருந்தது.

சரிதான். இவர்களை நம்பி பிரயோசனமில்லை - நம் அலுவலகத்திலேயே கடை போடவேண்டியதுதான் என்று முடிவு செய்தோம். அலுவகத்திலும் இதே போல் பலரும் கடை போட்டிருப்பார்கள். அவர்களுடன் நம் கடையும் இருக்கட்டும். நாளைக்கே நல்ல நாள் கடை போட என்று பத்து சாக்லெட்கள் எடுத்து வைத்தாகிவிட்டது.

காலையில் சென்றவுடன் நமது தளத்தின் சமையலறையில் சாக்லெடுகளுடன் ஒரு கல்லாப் பெட்டியும் வைத்தாகிவிட்டது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து விற்பனையை பார்த்துச் செல்லலாம் என்று முடிவானது. வேலை பளுவால் மதியம்தான் அந்தப் பக்கம் செல்ல முடிந்தது. பார்த்தால், மூன்று சாக்லெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது. சரிதான், ஒரு நாளைக்கு பத்து கூட நம்மால் விற்க முடியாது போல என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

மாலையில் சென்று கடையை மூடப் போனபோது, ஒன்று கூட மிச்சமில்லை. ஆகா...இன்று பத்து ரூபாய் விற்றாகிவிட்டது என்று கல்லாப் பெட்டியை வீட்டிற்கு எடுத்துப் போனேன். வீட்டில் தங்கமணி கல்லாப் பெட்டியை உடைத்துப் பார்த்தார்.

ரங்கமணி, உங்களைப் போலவே உங்கள் அலுவலகத்தில் யாராவது இருக்கிறார்களா?
என்னது? அப்படின்னா...
பத்து சாக்லெட்கள் வித்தீங்க... ஆனா கல்லாப் பெட்டியில் எட்டு ரூபாய்தான் இருக்கு.

அடப்பாவிகளா, யாரோ ரெண்டு பேர் பணத்தைப் போடாமலே சாக்லெட் எடுத்துட்டாங்க... நாளைக்கும் கடை போட்டால் இப்படியே ஓசியில் எடுத்துப் போயிடுவாங்க என்று பயமாக இருந்தது... இருந்தாலும் வேறு வழியில்லை... வர்ற வரைக்கும் லாபம்... கடைசியில் நம் கையிலிருந்து மிச்சத்தைப் போட்டு பள்ளியில் கொடுத்து விடவேண்டியதுதான் என்று பேசிக்கொண்டோம்.

அதன்படியே, இப்போது விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.... சாக்லெட்கள் வேண்டுமென்பவர்கள், தொகையை மணியார்டர் செலுத்தவும். சாக்லெட்கள் உடனே மின்னஞ்சல் (e-mail) செய்யப்படும்.

சாக்லெட் வாங்கலியோ சாக்லெட்...

4 comments:

Anonymous,  February 12, 2008 at 1:17 AM  

As you have said you will send the chocolates by email, I have also sent the cash (1 dollar) by email.

/:)

Idhu eppidi irukku?

துளசி கோபால் February 12, 2008 at 10:42 PM  

எங்ககிட்டே இருந்து anzac பிஸ்கோத்து வாங்கிக்கிட்டு அந்தச் சாக்லேட்டை அனுப்ப முடியுமா?

பக்கத்தூட்டுப் பசங்க மூணுபேருக்கு ரெண்டு பெட்டி வந்துருக்கு வித்துக் காசு பண்ணிக்கிட்டு வாங்கன்னு.

சின்னப் பையன் February 13, 2008 at 6:59 AM  

வாங்க சுதா, துளசி மேடம்:
என்ன, உங்க ரெண்டு பேர் ஊரிலேயும் நல்ல மழையா???
(அப்பாடா, பேச்சை மாத்தியாச்சு... இனிமே காசு குடுக்கறேன்னு சொல்றவங்ககிட்டேதான் பேசணும்)..:-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP