தலைவிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் - ஒரு தொண்டனின் குமுறல்
மேடையில் உட்கார்ந்திருக்கும் நம் தலைவரே மற்றும் தலைவரின் மூன்றாவது மனைவியின் ஐந்தாவது புதல்வியே, தமிழகத்தைக் காப்பாற்ற வந்திருக்கும் தங்கத் தாரகையே, அனைவருக்கும் வணக்கம்.
நான் கேட்கிறேன். யார் யாருக்கோ அமைச்சர், எம்.பி பதவியை கொடுக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, நம் இளைய தலைவியை தெரியவில்லையா... பல கவிஞர்கள் இருக்கும் ராஜ்ய சபாவிலே உறுப்பினர் ஆவதற்கு - ஒரு கவிஞராகிய நம் தலைவியும் தகுதி உள்ளவர்தான் என்று புரியவில்லையா...
பல வெளிநாட்டுப் பாடல்களையும், கதைகளையும் மொழி பெயர்த்து விட்டு, சொந்த கற்பனை என்று சொல்லித் திரியும் கவிஞர்களுக்கு மத்தியில், நம் தலைவி பிறந்ததிலிருந்தே கவிதை எழுதுகிறார் என்ற செய்தி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பல பேச்சுப் போட்டிகளிலும் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார்.
உதாரணத்திற்கு, அவரது சில கவிதைகளையும் அவர் பரிசு பெற்ற பேச்சுப் போட்டிகளில் பேசிய சிலவற்றையும் இங்கு நான் வாசிக்கிறேன். முதல் வகுப்பில் அவர் படிக்கும்போது ஒரு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். அவரது பரிசுக்குரிய பேச்சு இதோ:
தமிழில் மட்டுமல்ல...
யாம் அறிந்த மொழிகளில் மட்டுமல்ல...
அகில உலக மொழிகளிலும் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை...
நூடுல்ஸ்
நூடுல்ஸ் பிடிக்காது என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லியிருக்கிறார் என்பதை அகில உலகமே வியந்து பாராட்டியது.
அது மட்டுமல்ல, தலைவி எட்டாம் வகுப்பு படிக்கும்போது, இன்னொரு போட்டியில் 'எருமை மாடு' என்ற தலைப்பில் எழுதிய கவிதை இதோ:
பசுமையான புல்லைத் தின்று
வெண்மையான பாலைக் கொடுக்கும்
கருமையான எருமை
மனிதர்களுக்கு சிறுமை
நான் சவால் விடுகிறேன், எல்லோரும் திட்டும் எருமை மாட்டைப் பற்றி இப்படிப்பட்ட கவிதை எழுத நம் தலைவியை விட்டால் யாரால் முடியும்?
அவரது கவித்திறனுக்கு சிகரமாக அவரின் மகத்தான படைப்பு ' நட்பாச்சி காவியம்'. அந்தக் காவியத்திலிருந்து ஒரு பகுதியை நான் இங்கு படிக்கிறேன்.
ஏன் நண்பா... ஏன்?
சப்பாத்தி சிதைந்திருக்கிறது என்றேன்
அப்பளம் உடைந்திருக்கிறது என்றேன்
சிரித்துக் கொண்டே நீ சொன்னாய்
உள்ளே எல்லாம் சேரப் போகிறது - பிறகு
வெளியே போய் விழப் போகிறது
சிரிக்காமல் நான் சொன்னேன்
எப்படியும் வெளியே போகிறதென்றால் - பிறகு
ஏன் உள்ளே தள்ளுகிறாய் -
சமைத்து விட்டு நேராக
கொட்டிவிடு சீராக
வெந்ததை கொட்டு என்றேன் - நீயோ
வாயில் வந்ததை கொட்டி விட்டாய் -
என் முன்னோர்களையும் திட்டி விட்டாய்
ஏன் நண்பா.. ஏன்?
கத்தி பேசக்கூடத் தெரியாத நான்
கத்தி எடுத்து விட்டேன் - உன்னைக்
குத்தி குதறி விட்டேன்
ஏன் நண்பா... ஏன்?
இப்பொழுது சொல்லுங்கள்... நம் தலைவியின் கவித்தன்மையை...இவருக்கு ராஜ்ய சபா எம்.பி ஆகக்கூடிய முழுத் தகுதியும் இருக்கிறது என்று உலகம் முழுக்க இருக்கின்ற தமிழர்கள் அறிவார்கள்.
இந்த மேடையிலே நான் வேண்டுகோள் வைக்கிறேன். மரியாதையாக நம் இளைய தலைவியை,
இந்த வருடம் எம்.பி யாகவும்,
அடுத்த வருடம் மத்திய இணை அமைச்சராகவும்,
அதற்கடுத்த வருடம் மத்திய காபினட் அமைச்சராகவும் நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம். இரண்டாண்டுக்குள் மத்தியில் தேர்தல் வந்து விட்டால் என்ன செய்வது இந்த திட்டமெல்லாம் என்ன ஆவது?
நாங்கள் சொல்கிறோம். என்ன ஆனாலும் சரி, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, நாங்கள் ஆட்சிக் கூட்டணியில் இருப்போம். எங்கள் தலைவி கண்டிப்பாக மேற்சொன்ன ஏதாவது ஒரு பதவியில் இருப்பார் என்று உறுதியுடன் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
என்னைப் பேச அனுமதித்த நம் கட்சித்தலைவர் வாழ்க!!! வளர்க!!!
நன்றி!!! வணக்கம்!!!
4 comments:
வளரும் பையன் இவன்..
உயர உயரவே வளருபவன்..
திரும்பிப்பார் ச்சின்னப்பையா,
ஆட்டோஓஓஓஓஓஓஒ
ஹாஹா...TBCD மற்றும் துளசி மேடம்... நன்றி...
kathhi pesa kuda theriyadhavan.....
really made me laugh...hahaha...
Post a Comment