சென்னைப் பாலங்கள் - அமைச்சர் பரபரப்பு பேட்டி
சென்னை நகரில் இந்த ஆண்டு 10 புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் பணிகளை மேற்பார்வையிட வந்திருந்த அமைச்சர், இன்னும் இரண்டு ஆண்டுக்குள் மேம்பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுவிடும் என்று அறிவித்தார்.
நிருபர்: சைதாப்பேட்டை அருகில் அண்ணா சாலையில் இரண்டே நாளில் புதிய பாலம் (subway) கட்டியிருக்கிறீர்களே, அது எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?
அமைச்சர்: அது பாலம் இல்லை... நேற்று பெய்த மழையில் உண்டான பெரிய பள்ளம். அதை விரைவில் மூட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.
நிருபர்: இப்போதெல்லாம், சாலைகள் போட்ட ஆறு மாதங்களிலேயே தரம் கெட்டு, உபயோகமில்லாததாகி விடுகிறதே? அதைப் பற்றி...
அமைச்சர்: மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அளித்த கழக ஆட்சியில் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்போகிறோம். அதாவது, ஒரு சாலை/பாலம் கட்டப்பட்டால், முதல் ஆறு மாத காலத்திற்கு அதன் மேல் போக்குவரத்து தடை செய்யப்படும். அப்படி செய்துவிட்டால், இதுபோன்ற புகார்கள் வர வாய்ப்பே இல்லை.
நிருபர்: சென்னை தாம்பரத்தில் ஒரு புதிய பாலம் திட்டமிடப்பட்டு, பிறகு கைவிடப் பட்டுவிட்டதே?...
அமைச்சர்: அந்த புதிய பாலத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதில், கருத்து வேறுபாடு நிலவுவதால், இப்போதைக்கு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நிருபர்: கருத்து வேறுபாடு யார் யாருக்கு என்று தெரிந்து கொள்ள முடியுமா?
அமைச்சர்: நம் மாண்புமிகு முதலமைச்சரின் மகன், மகள், பேரன், பேத்தி மற்றும் அவர் உறவினர்களுக்கிடையே நடைபெறும் கருத்து வேறுபாடுதான் காரணம்.
நிருபர்: இந்த ஆண்டு 10 புதிய பாலங்கள் கட்டுவோம் என்று தெரிவித்துவிட்டு, 9 பாலங்களின் இடத்தைக் கூறி விட்டீர்கள். அந்த 10வது பாலம் எங்கே கட்டப்படும் என்று சொல்லவில்லையே?
அமைச்சர்: விஜயகாந்த் இன்னும் அவரது புதிய கல்யாண மண்டபம் எங்கே கட்டுவார் என்றே தெரியவில்லையே. அவர் எங்கு கட்டுகிறாறோ, அந்த கல்யாண மண்டபத்தை ஒட்டி ஒரு பெரிய மேம்பாலம் அமைப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு அவசரமாக ஒரு கூட்டத்திற்கு போகவிருப்பதால், இந்த பேட்டியை இத்துடன் முடித்துக்கொள்வோம். நன்றி.
1 comments:
நல்லாவே சிரிச்சேன் :)
Post a Comment