Sunday, January 6, 2008

கிபி2030 - சென்னை-செங்கல்பட்டு இடையே நதி நீர் பங்கீடு

சென்னை மாவட்டத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் இடையே சென்ற வருடத்திலிருந்து அடிக்கடி சிறுசிறு மோதல், தகராறு ஏற்படுவது தெரிந்ததே. பாலாறு நதி நீரை பகிர்ந்துகொள்வதில் இந்த இரு மாவட்டமும் இப்படி சண்டை போடுவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது.

சென்ற மாதம், சென்னை-செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், செங்கல்பட்டு மாவட்டத்தினர் ஒரு சிறு தடுப்பணை கட்டி, நீரை தேக்கி வைக்க முற்பட்டனர். அப்போது தென் சென்னை மக்கள், அவர்கள் எம்.எல்.ஏவுடன் சென்று அங்கு அடிதடியில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு எம்.எல்.ஏ அப்போது - என்ன தடை வந்தாலும், இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், 2025ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சென்னைக்கு வருடா வருடம் செங்கல்பட்டு தண்ணீர் விடுவதாகவும், அதற்கு மேலும் தண்ணீர் கேட்டு தகராறு செய்வது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

தென் சென்னை எம்.எல்.ஏ கூறும்போது - இந்த தடுப்பணையை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், விரைவில் தடை வாங்க முயற்சி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களாக இரு மாவட்டத்திற்குமிடையே போக்குவரத்து தடை பட்டிருக்கிறது. அவ்வப்போது நடைபெற்ற கல்வீச்சில் மூவர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் இந்த அராஜக செயலை சென்னை நடிகர் சங்க தலைவர் கண்டித்துள்ளார். நேற்று நிருபர்களிடையே பேசுகையில் - அடுத்த வாரம் செங்கல்பட்டு மாவட்டத்தின் தடுப்பணையை எதிர்த்து நடிக, நடிகையர் ஊர்வலம் போக இருப்பதாக அறிவித்தார். இந்த ஊர்வலம் சென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு எல்லைவரை செல்லும் என்று கூறினார்.

அவரின் இந்த அறிவிப்பிற்கு முன்னாள் நடிகர் சங்க தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, ஊர்வலம் போவது, பிரச்சினையை இன்னும் வளர்த்துவிடும் என்று கூறினார். அதனால், அவர் ஊர்வலம் போவதற்கு பதிலாக, அதே தினத்தில், சென்னை கத்திப்பாரா அருகில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

இது பற்றி மக்களிடையே பல்வேறு கருத்து நிலவுகிறது. முன்னாள் நடிகர் சங்க தலைவர் செங்கல்பட்டில் பல கல்லூரிகள் நடத்தி வருவதாகவும், அதனாலேயே இந்த பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்தாமல், மக்களை திசை திருப்புகிறார் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

இந்த தண்ணீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த செய்திக் குறிப்பில் - முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும், விரைவில் ஒரு நதி நீர் பகிர்வு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இரு மாவட்டங்களும், அந்த ஆணையத்தின் தீர்ப்பை மதிப்போம் என்றும் அறிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

1 comments:

cheena (சீனா) January 8, 2008 at 12:05 PM  

2030ல் இது நிச்சயம் நடக்கும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP