கிபி2030 - சென்னை கத்திப்பாரா மேம்பாலம்
கத்திப்பாரா மேம்பாலப் பணிகள் விரைவில் முடிவடையும். அமைச்சர் தகவல்.
இது செய்தி. இந்த செய்தியை, பல்வேறு தொலைக்காட்சிகளில் எப்படி சொல்லப்பட்டது என்று இப்போது பார்ப்போம். தொலைக்காட்சிகளின் பெயருக்குக் கீழே அவர்களது அரசியல் நிலையும் கூறப்பட்டுள்ளது.
சூரியன் டிவி:
அரசியல் நிலை: ஆட்சி செய்யும் கட்சியினுடையது
செய்தி: கத்திப்பாரா மேம்பாலப் பணிகள் இப்போது முழுவீச்சில் நடைப்பெற்றுக் கொண்டு வருகின்றது. இது நமது அரசின் நூற்றாண்டு கால கனவாகும். மக்களுக்காக இந்த அரசு பல நல்ல தொலைநோக்குத் திட்டங்களை வாரி வழங்கி வருகிறதென்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.
நிலா டிவி:
அரசியல் நிலை: எதிர்க்கட்சியினுடையது
செய்தி: நான் விசாரித்தவரையில் கமிஷன் கிடைக்காததால்தான், இந்த மைனாரிட்டி அரசு, இந்த மேம்பால பணிகளை துரிதமாக முடிக்காமல் இருக்கிறது. இந்த மைனாரிட்டி அரசு அடுத்த வருடத்தில் கவிழ்ந்துவிடும். அதற்குப் பிறகு என் தலைமையில் அரசு அமைத்து, மக்களுக்கு இந்த மேம்பாலப் பணியினை துரிதப்படுத்துவதுடன், பல நல்ல திட்டங்களையும் செயல் படுத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.
வானம் டிவி:
அரசியல் நிலை: ஆட்சி செய்யும் கூட்டணியில் உள்ள கட்சியினுடையது.
செய்தி: மேம்பால பணிகள் சரிவர நடக்கவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு சரியானதல்ல. பற்பல நடைமுறைச் சிக்கல்களினால்தான் இப்படி தாமதம் ஆகிறதென்றது சென்னை நகர மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.
மேகம் டிவி:
அரசியல் நிலை: எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சியினுடையது.
செய்தி: எங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ஒரு வருடத்தில் 25 பாலங்கள் கட்டினோம். ஆனால் இந்த மைனாரிட்டி அரசு, ஒரே பாலத்தை 25 ஆண்டுகளாகக் கட்டி வருகின்றனர். இதிலிருந்தே, இந்த அரசின் செயல்திறனை மக்கள் புரிந்துக் கொள்ளலாம்.
விண்மீன் டிவி:
அரசியல் நிலை: ஆட்சி செய்யும் கூட்டணியில் உள்ள - ஆனால் கூட்டணி மாறும் மூடில் உள்ள கட்சியினுடையது
செய்தி: மக்கள் எதிர்ப்பார்த்தபடி இந்த மேம்பாலப் பணிகள் துரிதமாக நடக்கவில்லை என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். என்ன இவர்கள் ஆட்சி கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி குற்றம் சொல்கிறார்களே என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நாங்கள் அமைத்துக் கொண்ட கூட்டணி தேர்தலுக்கு மட்டுமே. அதற்குப் பிறகு நாங்கள் ஆட்சியில் தெரியும் குற்றம், குறைகளை சுட்டிக் காட்டுவோம் என்று மக்களுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளோம்.
ஏவுகணை டிவி:
அரசியல் நிலை: எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள - ஆனால் கூட்டணி மாறும் மூடில் உள்ள கட்சியினுடையது
செய்தி: நாங்கள் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்தாலும், நம் அரசு செய்யும் நல்ல செயல்களை பாராட்டாமல் என்றுமே இருந்ததில்லை. அதனால்தான், இந்த அரசுக்கெதிராக எதிர்க்கட்சி கூட்டணி கூட்டிய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
பால்வெளி டிவி:
அரசியல் நிலை: நடுநிலை கட்சியினுடையது.
செய்தி: இந்த வாரம் "நீங்களா, நாங்களா" நிகழ்ச்சியின் தலைப்பு "கத்திப்பாரா மேம்பாலப் பணிகள் முடியுமா, முடியாதா?". இந்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பங்கேற்கிறார். 25 ஆண்டு கால மேம்பால பணிகளைப் பற்றி நேயர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார்.
உலகம் டிவி:
அரசியல் நிலை: அரசியலை வெறுப்பவர்களுடையது
செய்தி: (பழம்பெரும் நடிகர் கவுண்டமணி பாணியில் படிக்கவும்).
ஏண்டாப்பா, இது உங்களுக்கே நியாயமா இருக்கா?.. ஒரே வசனத்தை எப்படிடா 25 வருஷமா சொல்லிட்டிருக்கீங்க?.. ஆனா ஒண்ணு.. 5 வருஷத்திற்கு ஒரு தடவை, இவன் சொல்றத அவன் சொல்றான்... அவன் சொல்றத இவன் சொல்றான்.... மக்களே... நம்பாதீங்க... இந்த பாலத்தெ எங்கப்பா காலத்திலே கட்ட ஆரம்பிச்சாங்க...என் காலத்திலே கட்டறாங்க... என் பையன் காலத்திலேயும் கட்டுவாங்க... நாராயணா... இந்த அரசியல்வாதிங்க தொல்லை தாங்க
முடியலேடா...
8 comments:
நல்ல ஒரு பதிவு. கவுண்டமணி பாணி சூப்பர்.
ரசித்ததற்கு நன்றி சேது.
அட! அதுக்குள்ளே முடிச்சுருவாங்களா?:-))))
அப்ப நானும் டிக்கெட் புக் பண்ணிக்கறேன்.
திறப்புவிழா பார்க்கணும்.
அப்படித்தான் மக்கள் நம்பறாங்க துளசி மேடம்... நம்பிக்கைதானே வாழ்க்கை.....:-)
நான் ஒரு தொலைக்காட்சி வைத்திருந்தால்...
"சரியான தொழிற்நுட்பத்தை பயண்படுத்தாமல் செய்யப்படும் இந்த மேம்பால வேலை...."
இது தான் எனக்கு தெரிந்த உண்மை.
அது சரிதாங்க வடுவூர் குமார்...
இந்த பதிவு நகைச்சுவைக்காக ஒரே விஷயத்தை நம் (கட்சிகளின்) தொலைக்காட்சிகள் எப்படி தத்தம் நிலைக்கேற்ப சொல்கிறார்கள் என்பதற்காக மட்டும்தான்...
ஜோதி தியேட்டருக்கு ஆபத்து?
http://madippakkam.blogspot.com/2008/04/blog-post_10.html
ஜோதி தியேட்டருக்கு ஆபத்து?
http://madippakkam.blogspot.com/2008/04/blog-post_10.html
Post a Comment