Sunday, December 30, 2007

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...!!!

வெளியே சடசடவென்று மழை பெய்து கொண்டிருக்கிறது.
மனைவி, குழந்தையை கூட்டிக்கொண்டு தன் தாயார் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பல நாட்களாய் மனதில் பூட்டி வைத்திருந்த ஆசை இன்று திடீரென்று மீண்டும் தலை காட்டியது.
அடுத்த அறையில்தான் அவள் படுத்திருப்பாள். எப்படியாவது இன்று...
மனைவி இருந்தவரை அவளை நெருங்கக் கூட விடமாட்டாள்.
க்றீச் என சத்தம் போட்ட கதவை மெதுவாக திறந்துகொண்டு அவளை நெருங்கினேன்.
தூங்கிக்கொண்டிருப்பவளை சடாரென்று தூக்கி ஜன்னல் வழியே வெளியே போட்டேன்.
இந்த பூனையை, வீட்டை விட்டு துரத்த வேண்டுமென்ற என் ஆசை, பல நாட்களுக்குப் பின் இன்றுதான் நிறைவேறியது.
மறுபடி அவள் வீட்டிற்குள் வந்துவிடாதபடி, கதவை தாழ் போட்டுக்கொண்டு வத்து படுத்தேன்.

நான் என்ன லூசா???

குளிக்கும்போது திரைக்குப் பின்னாலிருந்து எவனாவது கத்தியுடன் குத்த வருவானென்று அடிக்கடி திரையை விலக்கி பார்க்கிறேன். ஆனால், அங்கு ஒருவனுமில்லை.

திரையரங்கில், என் முறை வரும்போது, டிக்கெட் தீர்ந்துவிடப் போகிறது என்று எண்ணுகிறேன். ஆனால் எனக்குத்தான் கடைசி டிக்கெட் கொடுக்கிறான்.

காரில் ஏறும்போது பின்னாலிருந்து எவனாவது நைலான் கயிறுடன் கழுத்தை நெரிக்கப் போகிறான் என்று பின்னால் திரும்பி பார்க்கிறேன். ஆனால் அங்கு யாருமில்லை.

ஒரு தடவையாவது ராங் நம்பர் போட்டு கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என் தொலைபேசி எப்போதும் சரியாகவே தொடர்பு ஏற்படுத்தி விடுகிறது.

எப்போதாவது வீட்டில் இரவில் தனியாக இருக்க நேர்ந்தால், மின்சாரம் போய்விடும் என்று பயப்படுவேன். ஆனால் ஒரு முறை கூட அப்படி நடந்ததேயில்லை.

ஒரு நாளாவது அழுகையில்லாத ஒரு தொடர் பார்க்கவேண்டும் என்று தொலைக்காட்சி முன் அமர்கிறேன். அது மட்டும் முடியவேயில்லை.

பேருந்தில் நடத்துனர் எப்போதும் சில்லறை கேட்கிறாறே என்று ஒரு நாள் 5 ரூபாய்க்கு - 20 நாலணா கொடுத்தேன். அப்போதும் என்னை திட்டுகிறார்.

பத்து நாட்கள் கழித்து என் இன்பாக்ஸ் நிறைந்திருக்கும் என்று கணிணி முன் அமர்கிறேன். எண்ணி ஒரு மெயில் கூட வரவில்லை.

ஆணி பிடுங்கச் சொன்னார்கள் என்று ஒரு பெரிய சுத்தியலுடன் அலுவலகம் சென்றேன். கொலை முயற்சி என்று வேலையை விட்டு தூக்கி விட்டார்கள்.

என்ன செய்வது என்றே புரியவில்லை...யாராவது உதவி செய்ய முடியுமா?

Monday, December 24, 2007

வணக்கம்...வணக்கம்...வணக்கம்...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே!!!!!
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!!

இது நிஜமாகவே என் சொந்த அம்மாவை பற்றித்தான்!!!

பல நாட்களாகவே தமிழ்மணத்தில் மேய்பவன்...தனக்கு சொந்தமாக ஒரு சின்ன ப்லாக் வைத்துக்கொள்ள நினைத்ததன் விளைவு...

தலைப்பில் சொல்லியபடி நக்கல், நையாண்டி, சிரிப்பு, எகத்தாளம் இவற்றோடு சிந்திக்க வைப்பதற்கு முயற்சி செய்யப்படும்...

தான் நடித்த ஒரே திரைப்படம் இன்னும் திரையிடப் படாத நிலையிலேயே, வருங்கால முதலமைச்சர் என்று போட்டுக்கொள்வதைப்போல, இன்னும் ஒரே ஒரு பதிவு கூட போடாமல், வருங்கால 'இந்த வருடத்தின் சிறந்த பதிவர்' என்ற பட்டத்தைப் பெறப் போகும் இந்த ச்சின்னப் பையனின் வணக்கங்கள் - உங்கள் எல்லோருக்கும்.........:-)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP