Tuesday, March 31, 2009

தொலைபேசி லொள்ளுகள்!!!


வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் / உறவினர்களிடம் தொலைபேசுதலில் உள்ள பிரச்சினைகள் என்னன்னு இங்கே பாப்போம்.

*****

போட்டுக் கொடுத்தல்:

ஒரு உதாரணத்திற்கு, xம் yம் நம் உறவினர்கள். x கிட்டே சில தடவை பேசின நான், y கிட்டே பேசலைன்னு வைங்க - என்ன ஆகும், yயை பார்க்கும்போது x போட்டு வைப்பார். "என்ன, உங்க நெருங்கிய உறவினர்னு சொல்றீங்க. அவன் உங்ககிட்டே பேசவேயில்லையா? என்கிட்டேயே நிறைய தடவை பேசிட்டானே?". ஏதோ நம்மாலானதுன்னு பத்த வெச்சிட்டு போயிடுவாங்க.

பொகஞ்சிக்கிட்டே இருக்கற yயிடம் அடுத்த தடவை பேசும்போது - "நீங்கல்லாம் பெரிய
மனுசங்க. நம்மகூடல்லாம் பேச நேரமிருக்குமா?"ன்னுதான் பேச்சே ஆரம்பிக்கும்.

நமக்கும் காடுவெட்டி மாதிரி வாயிலே கெட்ட கெட்ட வார்த்தைகளா வரும். ஆனா, வெளிப்படையா பேசமுடியாது. ஹிஹின்னு வழிஞ்சிக்கிட்டு பேச்சை மாத்தி வேறே ஏதாவது பேச ஆரம்பிக்கணும்.

பயங்கர பிஸி:

நேரில் பார்த்தால் கண்டபடி பாசம் காட்டும் பயபுள்ளைங்க, கண்ணிலிருந்து மறைந்துவிட்டால், நம்மை அப்படி மறந்துடுவாங்க. மின்னஞ்சல் அனுப்பினால், அதற்கும் பதில் வராது. கேட்டால், "மாப்ளே - ஆபீஸ்லே பயங்கர பிஸிடா"ன்னுவாங்க.

மாசத்துக்கு ஒரு மின்னஞ்சல்கூட அனுப்பமுடியாமே அவ்ளோ பிஸியா இருக்கீங்களாடேன்னு கேக்க முடியாது. அப்போ நான் மட்டும்தான் இங்கே சும்மா உக்காந்திருக்கேனான்னும் கோபம் வரும்.

அப்புறம் உண்மை(!) தெரிஞ்சதும் மனம் தெளிவடைஞ்சிடும்(!).

நோ மேட்டர்:

இன்னும் சில பேர் இருக்காங்க. பேசி கொஞ்ச நாள் ஆனா போறும் - வீட்லே கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவாங்க. "பையன் தொலைபேசி ரொம்ப நாளாச்சு. உங்ககிட்டே பேசும்போது எனக்கும் அடிக்கடி பண்ணச் சொல்லுங்க".

சரின்னு தொலைபேசினா - ஒரு நிமிடம்கூட இருக்காது - அதிலேயே பல தடவை - ம். அப்புறம், அப்புறம் என்ன விஷயம் - இப்படிதான் பேச்சு இருக்கும். மேட்டர் என்னன்னா, பேசறதுக்கு விஷயமே இருக்காது. அப்புறம் என்னதுக்கு வெங்காயம் என்னை தொலைபேசச் சொன்னே? இப்படி கேக்கமுடியுமா? கண்டிப்பா முடியாது.

மொக்கை படமாத்தான் இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சாலும், நாமும் விடாமே டாக்டர் விஜய் படங்களையெல்லாம் திரையரங்கத்துக்குப் போய் பாக்கறதில்லையா, அதே போல இந்த மாதிரி ஆட்களுக்கும் அடிக்கடி தொலைபேசி மொக்கையை பொறுத்துக்கணும். அவ்ளோதான் விஷயம்.

ரிச்சி ஸ்ட்ரீட்:

சில பேருக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டோ அல்லது ஏதாவது எலக்ட்ரானிக்ஸ் கடைக்கோ போனாதான் எங்க நினைவே வரும். உடனே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவாங்க - "அர்ஜண்ட் மேட்டர். உடனே தொலைபேசு".

நாமளும், பாசக்கார பய, நம்மள தொலைபேசச் சொல்றானேன்னு பேசினா - "எப்ப ஊருக்கு வர்றே. வரும்போது ஒரு எம்.பி3 ப்ளேயர், ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும். இங்கே வந்ததும் காசு கொடுத்துடறேன். நீ கவலைப்படாதே" - அப்படி இப்படின்னு ஒரு பட்டியல் வெச்சிக்கிட்டு பேசுவாங்க.

தேர்தல் முடியற வரைக்கும்தான் நம்மகிட்டே தொங்குவாரு, அதுக்கப்புறம் இடம் மாறிடுவாருன்னு மருத்துவரைப் பத்தி தெரிஞ்சாலும் பொறுமையா அவரோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற அம்மா மாதிரி நாமும் சிரிச்சிக்கிட்டே பதில்
சொல்லணும் - "சரி வாங்கிட்டு வர்றேன்".

*****

இன்னும் இதே மாதிரி நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், நம்ம பாலிஸி

இன்னிக்கு _____

நாளைக்கு பால்

நாளன்னிக்கு தயிர்

அதுக்கடுத்த நாள் மோர்

அதுக்கடுத்த நாள் புளித்த மோருங்கறதாலே

அப்படியே துடைச்சிக்கிட்டு போக வேண்டியதாயிருக்கு.

*****


Read more...

Monday, March 30, 2009

கடையோட மாப்பிள்ளை!!! - மேடை நாடகம் மாதிரி - பகுதி 1


ரொம்ப நாளா ஒரு நாடகம் (மாதிரி!) எழுதணும்னு ஒரு ஆசை.


இதுலே என்ன பிரச்சினைன்னா, எஸ்.வி.சேகர், கிரேசி மோகன், காத்தாடி, சோ, ஆர்.எஸ்.மனோகர் - அப்படின்னு எல்லாருடைய நாடகங்களையும் பார்த்திருந்தாலும் - வீட்லேயும் சரி,
நண்பர்கள்கிட்டேயும் சரி - சாதாரணமா பேசும்போதிலிருந்து இந்த நாடகம் (மாதிரி) பதிவு போடுற வரைக்கும் - அந்த முதல் ரெண்டு பேருடைய பாதிப்பு ரொம்பவே ஜாஸ்தியாயிருக்கு.
இருந்தாலும் பரவாயில்லேன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்.

இது முதல் பகுதி. வாரத்துக்கு ஒரு பகுதின்னு எழுதி மூணு பகுதியில் முடிச்சிடலாம்னு நினைக்கறேன். எப்படி இருக்குன்னு படிச்சி சொல்லுங்க.

*****

(காட்சி 1 துவக்கம்)

காலை மணி ஏழு. ஒரு வீட்டின் வரவேற்பறை. "கோசலையின் குமரா ஸ்ரீராமா..." என்று அழகிய தமிழில் சுப்ரபாதம் கேட்கின்றது.

மாது - 30 வயது வாலிபன் - பி.காம் படித்தவன் - பெரிய்ய்ய வேலையில் இருக்கிறான் என்று சொல்லத்தான் அவன் அப்பா விருப்பப்படுகிறார். ஆனால் தற்போதைக்கு
வேலையில்லாமல்தான் இருக்கிறான். அம்மாவுக்கோ மாதுவுக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்று ஆசை.

*****

அப்பா: "ஆண்டவா.. எல்லாரையும் நல்லபடியா காப்பாத்துப்பா."

(சோபாவில் சாய்ந்து படுத்து குமுதம் படித்துக்கொண்டிருக்கும் மாதுவை பார்க்கிறார்).

அப்பா: "ஏண்டா, இவ்ளோ பெரிய பையனா வளர்ந்திருக்கே. காலங்கார்த்தாலே வெட்டியா உக்காந்து குமுதம் படிச்சிண்டிருக்கியே?"

மாது: "அப்பா. இப்பல்லாம் குமுதம் மாதிரி பத்திரிக்கைகளை பெரியவங்க மட்டும்தான் பாக்கவோ படிக்கவோ முடியும். ஆமா. இந்த வாரம் நடுப்பக்கத்தை கிழிச்சது நீதானா? ஒழுங்கா
சொல்லிடு. இல்லேன்னா அம்மாகிட்டே போட்டு கொடுத்துடுவேன்."

அப்பா: "கர்மம் கர்மம். நான் ஏண்டா அதையெல்லாம் கிழிக்கிறேன்?"

மாது: "இல்லே சித்த முன்னாடி டாய்லெட்லேந்து ரகசியமா குமுதத்தை கொண்டு வந்து இங்கே வெச்சியே. நீதான் இதை கிழிச்சிருப்பியோன்னு நினைச்சேன்".

அப்பா: "வேறே வேலையே இல்லே பாரு எனக்கு. ஆமா. வேலைக்குப் போறாமாதிரி ஏதாவது ப்ளான் இருக்கா இல்லையா?"

மாது: "கொஞ்ச நாழி இரு. எல்.ஐ.சி ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி கேட்டு சொல்றேன். அவங்கதான் குழந்தைலேந்து தாத்தா ஆகற வரைக்கும் எல்லாருக்கும் ஒரு ப்ளான்
வெச்சிருப்பாங்க".

அப்பா: "அதை சொல்லலேடா. உனக்கு வேலைக்கு போறாமாதிரி ஐடியா இருக்கா இல்லையான்னு கேட்டேன்".

மாது: " நான் என்னிலேந்தோ ரெடியாதான் இருக்கேன். வேலைதான் யாரும் தரமாட்டேங்கறா. இப்பதான் எங்கே பாத்தாலும், ரிசஷன், ரிசஷன்றாங்களே. நம்ம வீட்டுக்கு பால் ஊத்தற
கோபாலை நேத்து பாத்தேன். நாலு மாடு வெச்சிருந்தான். அதிலே ரெண்டு மாட்டை வேலையை விட்டு துரத்திட்டானாம். என்னடான்னா, ரிசஷன்றான். அடடா. நல்லவேளை
ஞாபகப்படுத்தினேப்பா. இல்லேன்னா நான் மறந்தே போயிருப்பேன்".

அப்பா: "என்னடா. ஏதாவது இன்டர்வியூ வந்திருக்கா. எங்கேயாவது வேலைக்கு கூப்பிட்டாங்களா? எதை மறந்தே?"

மாது: "கார்த்தாலேந்து நான் காபிகூட குடிக்கலை. இப்பதான் ஞாபகமே வருது. அம்மா.. அம்மா.. காபி ரெடியாம்மா?.."

அப்பா: ம். இதை மட்டும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ. எப்போ நீ வேலைக்கு போய், எப்போ உனக்கு கல்யாணம் பண்ணி என் பேரன் பேத்திகளை பாக்கப்போறேனோ, எனக்கு
தெரியல.

அம்மா: (காபியோடு என்ட்ரி) "சும்மா காலங்கார்த்தாலே பையனை கரிச்சு கொட்டாதீங்கோ. இந்தாடா காபி. இவன் ஜாதகத்தை பாத்த ஜோசியர் அன்னிக்கே சொல்லிட்டாரு. இவனுக்கு
வேலை கிடைக்காதுன்னு."

அப்பா: "இவனுக்கு வேலை கிடைக்காதுன்னு சொல்றதுக்கு ஜோசியர் எதுக்கு? அவருக்கு காபி, டிபன் வேறே கொடுத்துக்கிட்டு. அதை என்கிட்டே கேட்டா நானே சொல்லியிருக்க
மாட்டேனா?”

அம்மா: "அட, அதில்லேன்னா. இவன் ஜாதகப் பிரகாரம், இவனுக்கு கல்யாணமானாதான் வேலையே கிடைக்குமாம்".

அப்பா: "இவ ஒருத்தி எவனோ சொன்னான்னு. வேலை இல்லாதவனுக்கு பொண்ணு குடுக்க ஜனங்க என்ன அவ்ளோ முட்டாள்களா?"

மாது: "அப்பா, அனாவசியமா அரசாங்க ஊழியர்களோட மாமனார்களை இப்படி திட்டாதீங்க. அவங்களே பாவம் இப்பதான் ரெண்டு மூணு வருஷமா நிம்மதியா இருக்காங்க."

அப்பா: "எனக்கு என்னமோ நம்பிக்கையில்லே. இவனுக்கு வேலையும் கிடைக்கப்போறதில்லே. கல்யாணமும் ஆகப்போறதில்லே. ஏண்டா. இவ்ளோ வயசாறதே. யாரையாவது காதலிச்சு
வீட்டை விட்டாவது ஓடக்கூடாதா?"

மாது: "ஒரு பையனை பாத்து அப்பா பேசற பேச்சா இது? உனக்கு கொஞ்சமாச்சும் ஏதாச்சும் இருக்கா? அம்மாவை விட்டுட்டு நான் எப்படி வீட்டைவிட்டு...?"

அம்மா: "ஏன்னா, என்ன கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமே இப்படி கேட்டுட்டேள்?. குழந்தை பாருங்கோ எவ்ளோ வருத்தப்படறான்னு".

மாது: "ஆமா. என்னை யாரோ ஒருத்தியை இழுத்துட்டு ஓடிப்போகச் சொல்றேளே. அவளுக்கு சமைக்கத் தெரியலேன்னா நான் புவ்வாவுக்கு என்ன பண்ணுவேன்?. வேணும்னா,
அம்மாவையும் எங்களோட அனுப்பு. அம்மா, நீ நல்லா ஓடிவியோன்னோ?"

அப்பா: "பாத்தியாடி பாத்தியா.. குழந்தை குழந்தைன்னியே. அவன் பேசற பேச்சைப் பாரு".

அம்மா: "என்னடா கண்ணா, அப்பாவை விட்டுட்டு நான் எப்படிடா உங்களோட ஓடி வர்றது? நீயே யோசிச்சி பாரு இது சரிவருமான்னு?"

மாது: "ம். அப்படியா. அதுவும் சரிதான். நம்மளையெல்லாம் துரத்திட்டு இவர் மட்டும் ஜாலியா இங்கே எப்படி இருக்கலாம். ம்? அது சரிப்படாது. வேணா இப்படி செய்வோமா? நாம
மூணு பேரு வீட்டை விட்டு ஓடறதுக்கு பதிலா, அப்பாவை துரத்திடுவோம். அவராவது கொஞ்ச நாளைக்கு உன் தொல்லையில்லாமே நிம்மதியா இருக்கட்டும்".

அப்பா:"அடேய் அடேய்.. உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னதுக்கு, என்னை ஏண்டா வீட்டை விட்டு துரத்தறே?"

மாது: "அப்போ இனிமே குமுதம் நடுப்பக்கத்தை கிழிக்க மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்குடு. முதல்லே நான் பாத்துட்டு, எனக்குத் தேவையானதை கிழிச்சதுக்கப்புறம், நீ
எதையாவது கிழிச்சிக்கோ”.

அம்மா: “சும்மா ரெண்டு பேரும் சண்டை போட்டுண்டே இருக்காதீங்கோ. இன்னிக்கு சாயங்காலம் ஜோசியர் மறுபடி வர்றேன்னிருக்கார். ஒரு அருமையான ஜாதகம் வந்திருக்காம்.
பொண்ணோட அப்பா ஒரு கடை வெச்சிருக்காராம். கடையோட மாப்பிள்ளையா இருக்கறதுக்கு ஒரு ஆள் தேடறாங்களாம். பாத்து முடிச்சிடலாம்னு சொல்லியிருக்கார். எனக்கென்னவோ
இது செட்டாயிடும்னு தோண்றது. பாப்போம்”.

(காட்சி 1 முடிவு)

*****

Read more...

Thursday, March 26, 2009

ஆரம்ப முடிவு.. கவுஜ கவுஜ!!!



என்னதான் கவுஜ எழுதற திறமையை உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தாலும், ஆயிரக்கணக்கான(!!!) ரசிகர்கள் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியால், தம் கட்டி இழுத்து
அதை வெளியே கொண்டு வந்துடறாங்க.

நேத்திக்கு ராத்திரி வலது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, இடது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிச்சதுலே உதயமானதுதான் இந்த கவுஜ.

சரவணபவன் இட்லிய தின்றாமாதிரி கடகடன்னு படிச்சிடாமே, ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து அனுபவிச்சி படிங்க.

இப்பவே ஒரு ரகசியத்த சொல்லிப்புடறேன்.. கவுஜயோட கடைசி பத்திலேதான் மேட்டரே அடங்கியிருக்கு. அதுக்காக நேரா அங்கே போயிடாதீங்க மக்கா.. முதல்லேந்தே படிங்க...
எஞ்சாய்.....

*****



ஆரம்பம் சீக்கிரமே
ஆரம்பித்துவிட்டால்
முடிவும் சீக்கிரம்
முடிந்துவிடுமா?


*****

ஆரம்பத்தின் முடிவில்
அதை
ஆரம்ப முடிவென்பதா
முடிவின் ஆரம்பமென்பதா?

இல்லை
முடிவின் ஆரம்பத்தில்
அதை
முடிவாரம்பம் என்றுதான் அழைக்க
முடியுமா?

*****

ஆரம்பிப்பதற்குள்
முடிந்துபோவதை
எப்படி ஆடிவு
என்று சொல்லமுடியாதோ - அதே போல்

முடிந்தபிறகு
மீண்டும் ஆரம்பிப்பதற்கு
மும்பம் என்றும்
சொல்லமுடியாது


*****

ஆரம்பிக்கும்போதே
முடிவை
முடிவெடுத்துடற மாதிரி

முடிந்தபிறகு
ஆரம்பத்தில் இதைத்தான்
முடிவெடுத்தோமான்னு
பாக்கணும்.


*****

ஆரம்பிக்காமலேயே
ஆரவாரம் செய்யறவனவிட
முடிச்சிட்டு
முக்காபுலா பாடுறவந்தான்
முழுமனிதன்

*****

முடிவா ஒண்ணு சொல்லி
முடிச்சிக்கறேன்.
ஆரம்பத்திலிருந்து
ஆராவது இந்த கவுஜய
ஆராய்ஞ்சி எனக்கு விளக்குங்க.

*****


Read more...

Wednesday, March 25, 2009

நொறுக்ஸ் - புதன் - 03/25/2009


கணவன் மனைவி சண்டை போடக் காரணங்கள் என்ன? - பல்லாயிரக்கணக்கான தம்பதிகளிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதில் முடிவு என்னன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கீங்களா? -
விவரம் பதிவில்.


*****


இங்கே வந்த புதிதில், சென்னைக்கு ஒரு முக்கியமான தபால் அனுப்பினேன். ஒரு வாரத்தில் ஊருக்குப் போய் சேரவேண்டிய அந்த தபால், ரெண்டு நாள் கழிச்சி எங்க தபால்பெட்டிக்கே
வந்துடுச்சு. அதை எடுத்துக்கொண்டு தபாலாபீஸுக்குப் போய் - “என்னம்மா, இந்தியாக்கு அனுப்பணும்னு ஒரு தபால் கொடுத்தா, அதை ஒழுங்கா அனுப்பமாட்டீங்களா? திரும்ப எங்க
வீட்டுக்கே அனுப்பிச்சிட்டீங்களே?”ன்னு - மெதுவாத்தான் கேட்டேன். அதுக்கே அந்தம்மாவுக்கு கோபம் வந்துடுச்சு.


“நாலெழுத்து படிச்சவந்தானே? முன்னே பின்னே தபால் அனுப்பிச்சிருக்கியா? இதுகூட தெரியாமே எப்படி வளர்ந்தே?” - அப்படி கேட்டாங்களான்னு ஒரு நிமிடம் யாரும்
சந்தோஷப்படாதீங்க. அப்படியெல்லாம் அவங்க கேக்கலை. ஆனா அவங்க முறைச்சது அந்த கேள்விகளைக் கேட்டமாதிரிதான் இருந்தது.


விஷயம் என்னன்னா, இங்கேல்லாம் ‘அனுப்புனர்' (From) முகவரியை உறையின் இடது-மேல் ஓரத்தில்தான் எழுதணுமாம். நான் இந்தியாவில் எழுதுவதுபோல், இடது-கீழ் பக்கத்தில் என்
இங்கத்திய முகவரி எழுதிவிட்டதால், இங்கிருக்கும் தானியங்கி தபால் பிரிக்கும் இயந்திரம், என்னுடைய கோழி கிறுக்கல் கையெழுத்தைக்கூட ஆய்ந்தறிந்து - கடிதத்தை மறுபடி எங்க
வீட்டுக்கே அனுப்பிடுச்சு. (பட விளக்கம் கீழே).


“இந்த ஒரு தடவை பரவாயில்லை. காசு கொடுக்க தேவையில்லை. மறுபடி இப்படி அனுப்பிச்சீங்கன்னா - நடக்கறதே வேறே” -ன்னு எச்சரிச்சி அனுப்பினாங்க அந்த தபாலம்மா.



*****
துடுப்பாட்டம்

இந்தியாவில் இருக்கும்போது, தொலைக்காட்சியில் துடுப்பாட்டத்தை போட்டாங்கன்னா - அது பல வருடங்களுக்கு முன்னாடி நடந்த எந்தவொரு ஆட்டமானாலும் - அது ஏதோ இரண்டு
அணிகளுக்கிடையே நடந்ததாக இருந்தாலும் - ‘லைவ்'வாக நடப்பதுபோல் பரபரப்பாக பார்த்துக்கொண்டிருப்பேன். இங்கே வந்தபிறகு அந்த ஆர்வம் சிறிது குறைந்துபோனது.

உலகக்கோப்பை மற்றும் அதற்குப்பிறகு நடந்த சில முக்கியமான ஆட்டங்களை மட்டும் இணையத்தில் பார்த்தோம். மற்றபடி ஞாபகம் வந்தால், ஸ்கோர் பார்ப்பதோடு சரி.

சில மாதங்களுக்கு முன் - இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நடுவிலும் - கடமை தவறாது நம் அணி அங்கு போய் விளையாடிவிட்டு வந்த பிறகு - கொஞ்ச நஞ்சமிருந்த
ஆர்வமும் போய்விட்டது. இப்போ, இந்த ஐபிஎல் போட்டி தென்னாப்பிரிக்காவுக்கு போறதைக் கேட்டதிலிருந்து சரியான கோபம்தான் வருது.

ங்கொய்யாலே.. இந்த ஆட்டத்தை பத்து கோடி பேர் பாத்தாங்கன்னு செய்தி வந்தா டென்சனாயிடுவேன். என்னை விட்டுட்டு எண்ணினா - ஒன்பது கோடியே தொண்ணூற்றி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது பேர்தான் வரணும். சொல்லிப்புட்டேன்.

*****

மின்தூக்கி கலாட்டாக்கள்

ஒரு தடவை, மின்தூக்கிக்குள் தங்கமணியும் நானும் வழக்கம்போல் பேசிக்கொண்டிருந்தோம். (அட, சண்டை இல்லேப்பா. சாதாரணமாத்தான்!!). ஒரு நிமிடம் கழித்து, யாரோ ஒருத்தர்
கதவைத் திறக்க - பார்த்தால், நாங்கள் ஏறிய தளத்திலேயே நின்றிருக்கிறோம். பேச்சு சுவாரசியத்தில் போக வேண்டிய தள பட்டனை ரெண்டு பேரும் அழுத்தவேயில்லை. வந்தவரோ ஒரு மாதிரி எங்களை பார்த்துக்கொண்டே பட்டனை அழுத்தினார். நாங்க ஏன் அவரைப் பாக்குறோம் - இறங்கி ஓஓடிட்டோம்.

இன்னொரு தடவை, கைப்பேசியில் பேசிக்கொண்டே - மின் தூக்கியில் கீழே போய்க்கொண்டிருந்தேன். கீழ்த்தளத்தில் கதவு திறந்தது. உள்ளே வருவதற்கு ரெண்டு பேர் நின்றிருந்தனர். நானும் அவர்களிடம் - மின்தூக்கி கீழே போகுது. உள்ளே வாங்க - அப்படின்னேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே உள்ளே வந்து - இதுதான் கீழே. இதுக்கு கீழே யாராலும் போக முடியாதுன்னுட்டாங்க. நான் வழக்கம்போல ஹிஹின்னு வழிஞ்சிக்கிட்டு ஜூட்.

*****

மேலே சொன்ன கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ:

இரண்டு (அல்லது அதற்கு முற்பட்ட) வருடங்களில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் குறித்து பேச ஆரம்பித்து சண்டையில் முடிதல் - 33%

ஐந்து (அல்லது அதற்கு பிறகு) வருடங்களில் நடக்கப்போகும் ஏதாவது ஒரு சம்பவம் பற்றி பேச ஆரம்பித்து சண்டையில் முடிதல் - 33%

நம் குடும்பத்துக்கு சம்மந்தமேயில்லாத விஷயங்கள் பற்றி பேசியதில் சண்டை - 33%

அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேசியதில் சண்டை - 1%

இந்த ரிசல்ட் சரிதானான்னு அனுபவஸ்தர்கள் சொல்லுங்க.

*****

முக்கியமான பின்குறிப்பு : (பதிவில் முதலில் சொன்ன) பல்லாயிரக்கணக்கான = நான் + தங்ஸ்.

*****

Read more...

Tuesday, March 24, 2009

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்!!!

எவ்ளோ நாள்தான் இந்த மாதிரி ச்சின்னச்சின்ன பதிவுகளா எழுதிட்டிருக்கறது. அதனால், நானும் ஒரு பெரிய்ய்ய நாவல் - சுமார் ஐநூறு பக்கம் வர்றா மாதிரி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அந்த நாவல் எழுதறதுக்கு முன்னாடி - ஒரு வரிக் கதை ஒண்ணை கொஞ்சம் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா எழுதலாமேன்னு முடிவு செய்து, அதை இங்கே எழுதியிருக்கேன்.

நீங்க இந்த கதையை பாத்து ஓகே பண்ணிட்டீங்கன்னா, இதே மாதிரி - அட, இதே மாதிரி என்ன, இதே கதையை - ஐநூறு பக்கத்துக்கு இழுத்த்த்த்த்த்து எழுதலாம்னு இருக்கேன்.

கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

*****

ஒரு ஊர்லே ஒரு பாட்டி இருந்தாங்க.

அவங்களுக்கு நாலு பசங்க, மூணு பொண்ணுங்க. எல்லாப் பொண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க அந்த பாட்டி.

அந்த நாலு பசங்களும் வேலை வெட்டி இல்லாமே சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தாங்க. சரி வெட்டியாதானே இருக்கோம்னு என்ன பண்ணாங்க - திடீர்னு எல்லோரும் ரௌடி ஆயிட்டாங்க. அந்த ஏரியா முழுக்க அவங்க ராஜ்ஜியம்தான். ஆளுக்கொரு கத்தி வெச்சிக்கிட்டு, கத்தி கத்தி பேசிக்கிட்டு ஜாலியா இருந்தாங்க.

வெய்யில் ஜாஸ்தியாயிருக்கேன்னு ஒரு நாளு எதேச்சையா டாக்டர் விஜய் படம் ஓடுற ஒரு தியேட்டர்லே நுழைஞ்சாங்க. அவரோட ஆட்டம், பாட்டம், நடிப்பு, சண்டை எல்லாத்தையும் பாத்துட்டு அன்னிலேந்து அவரோட அதி தீவிர ரசிகர்களாயிட்டாங்க. ஏதோ ஒரு சரத்குமார் படத்துலே ஒரு பாட்டிக்கு வடிவேலு போட்ட '10' மாதிரி இவங்களும் - 'உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு' அப்படின்னு பச்சை குத்திக்கிட்டாங்க.

தலைவரோட எல்லா விழாக்களிலேயும் கலந்துக்குவாங்க. பேனரெல்லாம் கட்டுவாங்க. பாலாபிஷேகம், தயிராபிஷேகம், பீராபிஷேகம் எல்லாமே பண்ணுவாங்க. கடைசியா அவங்க தலைவரோட ஏதோ ஒரு விழாவுலே கலந்துக்கிட்டு கலாட்டா செய்திட்டிருக்கும்போது - இவங்களோட தொல்லை பொறுக்காமே அந்த அபிமான தலைவரே - 'பேசிக்கிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' - அப்படின்னு கத்திட்டாரு.

அன்னிக்கு மனசு ஒடைஞ்சவங்கதான், அந்த சம்பவத்துக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. பாவம் அந்த பாட்டிதான் தனியொரு ஆளா நாள் முழுக்க உழைச்சி சம்பாதிச்சி எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு வழி செய்துட்டிருந்தாங்க.

பேதை (7 வயது) , பெதும்பை (11 வயது) , மங்கை (13 வயது) , மடந்தை (19 வயது) , அரிவை (25 வயது) , தெரிவை (31 வயது) , பேரிளம்பெண் (40 வயது) - ஆகிய பெண்களின் ஏழு நிலைகளையும் தாண்டி வந்துவிட்ட அந்த பாட்டி அவங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்து - உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - இந்த மூணையும் கொஞ்ச நேரம் ஊறவைத்து வடிகட்டி - அதை பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு
சேர்த்து கரகரவென்று நீர் விடாமல் அரைத்துக் கொண்டு - அந்த விழுதை எடுத்து கருவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி கலந்து - அரைக்காத பருப்புக்களையும் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டு - பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி எண்ணையில் பொரித்தெடுத்து - அருமையான வெங்காய வடை செய்து - அதை மக்களுக்கு விற்று சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்து மரத்து மேலே ஒரு காக்கா பசியுடன் உட்கார்ந்திருந்தது.

1330 குறள்களை எழுதிய திருவள்ளுவர் - 490வது குறளாக - 'காலமறிதல்' அதிகாரத்திலே சொல்லியிருக்கிறது என்னன்னா - கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. அதாவது காலங்கருதி ஒரு கொக்கு தன் இரைக்காக அசையாமல் வாடி இருப்பதைப் போல் கலங்காமல் இருந்து - தக்க சமயம் வாய்த்தவுடன் பாய்ந்து தன் இரையை கொத்திக்கொள்வது போல் சட்டென்று செய்துவிடவேண்டும்.

இதே அறிவுரையின்படி, அந்த காக்காவும் மரத்தின் மேல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து - ஒரு பெரிய வடைக்காக காத்திருந்தது. அப்படி கிடைத்தவுடன், பறந்து வந்து டக்கென்று அந்த வடையை அபகரித்து திரும்ப மரத்தின் மேல் போய் உட்கார்ந்தது.

நரி இடப்பக்கம் போனா என்ன, வலப்பக்கம் போனா என்ன - மேலே விழுந்து புடுங்காமே இருந்தா சரின்ற பழமொழியில் வர்ற அந்த நரி ஒண்ணு அந்தப்பக்கமா வந்துச்சு.

அவ்வை ஷண்முகி படத்துலே - காதலி காதலி பாட்டு பாடும்போது கமல் வேணும்னே பக்கவாட்டு போஸ்லே - தன் ஓட்டைப் பல்லு காட்டி சிரிப்பாரு. அதே மாதிரி நரியை பாத்த காக்காவும் சைட்லே திரும்பி போஸ் குடுத்துச்சு.

கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வர்றவங்க எல்லாம் - ஏதோ கச்சேரி செய்யப்போறவங்க போல - ஒரு பாட்டு பாடுங்கன்னு பொண்ணைக் கேக்கறது மாதிரி - நரியும் காக்காவைப் பாத்து - உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே - பாடு காக்கா, பாடுன்னு கேட்டதால், காக்காவும் பாட தயாரானது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....ஏஏஏ.. ஏஏஏ... மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே... .... ...

சுத்தி இருந்த காக்காங்கல்லாம் இப்படி அடி எடுத்துக் கொடுக்க, நம்ம காக்காவும் 'ராக்கம்மா கையத் தட்டு' அப்படின்னு பாட ஆரம்பிச்சது பாருங்க...

ஒரு பெரிய மண்டபத்துலே ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட பேர் உட்கார்ந்து கைதட்டி பஜனை செய்துகொண்டிருக்கும்போது, நடுவில் வர்ற அவரோட வாயிலிருந்து டக்குன்னு சிவலிங்கம் விழுவதைப்போல், இந்த காக்கா பாட ஆரம்பிச்சவுடனே, அதன் வாயிலிருந்து அந்த வடை கீழே விழுந்தது.

தேர்தலில் எதிர்பாராத விதமா வெற்றி அடைஞ்சிட்டா, அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கமே தலைகாட்டாத அரசியல்வாதிங்க மாதிரி - அந்த நரியும் வடை கிடைச்சது வரை லாபம் - இனிமே அடுத்து பசிக்கும்வரை இந்த பக்கம் வரவேகூடாதுன்னு முடிவு செய்து ஓஓஓடிப்போச்சுது.

அவ்ளோதான் கதை.

*****
கதையைப் பற்றி 'புகழ்ந்து' மறுமொழி எழுதறதுக்கு முன்னாடி ஒரு தடவை லேபிளை பாத்துக்கிடுங்கப்பூ!!!


Read more...

Monday, March 23, 2009

செய்யறதுக்கு வேலை இல்லேன்னா வரக்கூடிய பிரச்சினைகள்...

காலங்கார்த்தாலே அலுவலகம் வந்து - தமிழ்மணம், தமிலிஷ் மற்றும் நமக்குத் தெரிந்த கடைகளுக்கெல்லாம் சென்று விசாரித்துவிட்டு, பிறகு வேலை ஏதாவது இருந்தா ஒண்ணும் பிரச்சினையேயில்லை. அதை செய்து நாளை ஓட்டிவிடலாம்.

இந்த வேலை, வேலைன்னு ஏதோ சொல்றாங்களே, அது மட்டும் இல்லேன்னா, எவ்ளோ பிரச்சினை தெரியுமா? அதைத்தான் இந்த பதிவுலே பாக்கப் போறோம்.
*****


அக்கம் பக்கத்துலே இருக்கறவங்ககிட்டே அதிகபட்சமா ஒரு ஐந்து நிமிடம்தான் பேசமுடியுது. ஏன்னா, அவங்களுக்கு ஏதோ ஒரு வேலை இருந்துகிட்டே இருக்கு. அதுக்கு மேலே பேசிக்கிட்டிருந்தோம்னா, என் மேனேஜர் கிட்டே போட்டுக் கொடுத்துடுவாங்க. அப்புறம் அது பெரிய பிரச்சினை ஆயிடும். அதனால், வேறே ஏதாவதுதான் செய்யணும்.


சரி, இந்தியாவிலே இப்போ மாலை நேரம்தானேன்னு, நண்பர்கள் / சொந்தக்காரங்க யார் வீட்டுக்கு தொலைபேசி மொக்கை போடலாம்னாலும் - சரியா 'கஸ்தூரி' (அல்லது குங்குமம் - இல்லே வேறே ஏதோ ஒண்ணு) பாக்கற நேரத்துக்குத்தான் பேசணுமான்னு திட்டு விழும். காசு செலவு பண்ணி திட்டு வாங்கணுமான்னு யோசிப்பேன். அதனால், இதுவும் முடியாது.


உக்காந்து வேலை செய்யறதுக்கு, அலுவலகத்துலே சக்கரம் வைச்ச நாற்காலி ஒண்ணு குடுத்திருக்காங்க. அதிலே சுத்தி சுத்தி வந்தேங்க அப்படின்னு பாடிக்கிட்டே வேகமா (ஒரே இடத்துலே) சுத்திக்கிட்டு இருக்கலாம்னு பாத்தா - ஒரு பத்து நிமிடத்திலே தலை சுத்துது. இதிலே இன்னொரு பிரச்சினை - கீழே விழுந்து மண்டையில் அடிபடும் அபாயமும் இருக்கு.


எங்க அலுவலகம் ஒரு நாலு மாடி கட்டிடம். வெவ்வேறே இடங்களில் ஏறி-இறங்க மாடிப்படிகள் கட்டி வெச்சிருக்காங்க. கொஞ்ச நேரம் நடக்கலாம்னு ஒரு மாடியிலே ஏறி, கட்டிடத்தின் இன்னொரு பக்கம் போய், மற்றொரு மாடியில் இறங்கி... மறுபடி இந்த பக்கம் ஏறி...இறங்கி...ஏறி... இப்படி செய்துக்கிட்டிருந்தா ஒரு அரை மணி நேரத்துலே காலெல்லாம் பயங்கரமா வலிக்குது... அதனால், இதுவும் நோ.


சரி.. எங்கேயும் போகவேண்டாம். அலுவலகத்தின் சாப்பாட்டுக் கூடத்தில் நிறைய மக்கள் இருப்பாங்க. அங்கே சும்மா போய் கொஞ்ச நேரம் நின்னு வேடிக்கை பாக்கலாம் அப்படின்னா, மக்களை(?!) பாக்க ஆரம்பிச்ச நிமிடத்தில் மனசுலே கவிதை அருவி மாதிரி கொட்டுது (குணா எஃபெக்டில் படிக்கவும்!). ஆனா, அதையெல்லாம் வார்த்தையா வடிக்கிறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சேன்னா, இருக்கிற சில நண்பர்களும் காணாமே போய்விடுவாங்கன்ற அபாயம் இருப்பதால் அதையும் தவிர்க்க வேண்டியிருக்கிறது.


நம்ம ச்சின்ன அறையில்தானே இருக்கோம்னு கொஞ்சம் கத்திப் பாடக்கூட முடியாது. அப்பப்போ நம்மிடத்துக்கு வர்ற மேனேஜர் - என்ன இப்படி கண்றாவியா பாடறே? வீட்டுக்குப் போய் ஒழுங்கா பாட்டு கத்துக்கிட்டு அப்புறம் வேலைக்கு வா - அப்படின்னு 'ஒரேடியா' அனுப்பிட்டா - அப்புறம் எல்லாமே பிரச்சினைதான்.


சரி இப்போ வேலையில்லாமே சும்மாதானே இருக்கோம்னு வீட்டுக்கு தொலைபேசி தங்கமணியிடம் பேசலாம்னு பாத்தா - "நீங்க வெட்டியா இருக்கீங்கன்னா, நானும் வெட்டியா இருக்கேன்னு அர்த்தமா? தொலைபேசியை வைங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு"ன்னு 'டொக்'. அதனால், இதையும் பண்ணமுடியாது.


இப்படி எதையுமே செய்யக்கூடாதுன்னு ஒரு மனுசனோட கைகளைக் கட்டிப்போட்டா, நான் என்னதான் செய்யறது?

யாராச்சும் ஒரு நல்ல ஆலோசனையை வழங்குங்க.



Read more...

Wednesday, March 18, 2009

வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்புவது எப்படி?

இது ஒரு கொசுவத்தி பதிவு.


*****


காலையிலிருந்து மாங்கு மாங்குன்னு (!!) வேலை செய்திட்டிருந்தாலும், அப்போல்லாம் எங்ககிட்டே பேசவே மாட்டாரு எங்க மேனேஜரு. எந்த சந்தேகமும் கேக்க மாட்டாரு. ஆனா, சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பறேன்னு சொல்லப் போனாதான் - அந்த வேலையை முடிச்சிட்டியா, இது எப்போ முடியும்? - அப்படி இப்படின்னு இன்னொரு பத்து நிமிடம் இழுத்துடுவாரு. கிளம்பற நேரத்துலே சரியான கடுப்பா இருக்கும்.




எந்த பிரச்சினையுமில்லாமே, நினைச்ச நேரத்துலே எப்படி வீட்டுக்குக் கிளம்பிப் போறது - அப்படின்ற தலைப்புலே நிறைய ஆராய்ச்சிகள் செய்து, சிலவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்து அதில் வெற்றியும் அடைஞ்சிருக்கோம். அந்த மாபெரும் ஆராய்ச்சிகளைப் பற்றிதான் இங்கே சொல்லப் போறேன்.


*****


சொல்லாமலேயே எஸ்கேப்:


இதிலே நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்டுக்குப் போனபிறகோ, அடுத்த நாளோ கூப்பிட்டு - என்னப்பா, சொல்லாமேயே போயிட்டே - எனக்கு ஒரு வேலை செய்யணுமேன்னுவாரு. ரொம்பவே அவசரமான வேலையாயிருந்தா, மறுபடி அலுவலகத்துக்குக் கிளம்பி வர வேண்டியிருக்கும். இல்லேன்னா, அடுத்த நாள் கொஞ்சம் சீக்கிரமா வந்து வேலையை முடின்னு சொல்வாரு.


ஒருவர் சொல்ல, மற்றவர்கள் எஸ்கேப்:


எங்கள் குழுவில் இருந்த ஐந்து பேரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம். அதாவது, வீட்டுக்குக் கிளம்பும் நேரமாக பார்த்து யாராவது ஒருவர், மேனேஜரிடம் போய் வேலை சம்மந்தமாக பேசிக்கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒருவர் அவரை பிஸியாக வைத்திருக்க, மற்றவர்கள் தூரத்திலிருந்து கை காட்டிவிட்டு எஸ்கேப்.



ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவராக முறை வைத்துக்கொண்டு - மற்றவர்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் தப்ப வைக்க வேண்டும். இந்த திட்டமும் கொஞ்ச நாளைக்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.


ஆனாலும் இந்த திட்டத்தில், அவரோட கவனம் நம்மேல் திரும்ப நிறைய வாய்ப்பிருப்பதால், அதை எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து, ஒரு சிறு முன்னேற்றம் செய்தோம்.


ஒருவர் சொல்ல, ஒருவர் தொலைபேச, மற்றவர்கள் எஸ்கேப்:


மேலே சொன்ன மாதிரியே ஒருவர் மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்க, அதே சமயத்தில் இன்னொருவர் மேனேஜருக்கு தொலைபேசி - "சார், அந்த ___ டீடெய்ல் கொஞ்சம் சொல்லுங்க. அந்த பேப்பர் உங்ககிட்டே இருக்கா பாருங்க" - அப்படின்னு அவரை பிஸியா வைத்திருக்க, மற்றவர்கள் வழக்கம்போல் தூரத்திலிருந்து கைகாட்டிவிட்டு எஸ்.


மேனேஜரை மாட்டிவிட்டு எஸ்கேப்:


தினமும் மாலையில் அனுப்பக்கூடிய ஸ்டேட்டஸ் மின்னஞ்சலில், ஏதாவது பொடி அல்லது வெடி வைத்து, மேனேஜருக்கும் - கூடவே அவரோட மேனேஜருக்கும் அனுப்பி வைத்தால் தீர்ந்தது பிரச்சினை. மின்னஞ்சல் அனுப்பிய பத்தாவது நிமிடம், நம்மாளை அவரோட மேனேஜர் கூப்பிடுவார். இவர் கிளம்பி அவரிடத்துக்குப் போனார்னா, நாங்கல்லாம் கிளம்பி அவங்கவங்க இடத்துக்குப் போய்விடலாம்.


ஆனா, இது தினமும் நடக்க வாய்ப்பில்லை. பத்து நாளைக்கு ஒருமுறைதான். இதில் அபாயமும் உண்டு. அடுத்த நாள் காலையில் வந்தவுடன், நமக்கு சூடு விழும் வாய்ப்பும் அதிகம்.


*****


இப்படியாக பல வழிகளை கையாண்டு, ஒரு வழியா அலுவலகத்திலிருந்து தப்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. அடுத்து என்ன?


*****


ராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீங்க. யுத்தத்துக்காக ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட ஆட்கள் நின்றிருப்பாங்க. 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்' அப்படின்னு ஒருத்தர் கத்தியவுடன், எல்லோரும் ஓஓன்னு சத்தம் போட்டுக்கிட்டே ஓடி வந்து சண்டை போட ஆரம்பிப்பாங்க.


அதே மாதிரி காட்சியை நினைச்சிக்கங்க. ஒரு பக்கத்துலே நானு. இன்னொரு பக்கத்துலே யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லே. அலுவலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள் கால் வைச்சவுடனே, 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்'னு சொல்லிட்டு தகராறை ஆரம்பிச்சிடுவாங்க.


"ஏண்டா கொய்யா.. இதுக்காகவா அந்த நல்ல மனுசனை ஏமாத்தி, போக்குவரத்துலே ஏகப்பட்ட பேருக்கு 'கட்' கொடுத்து, வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தே? இதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா அலுவலகத்திலேயே இருந்திருக்கலாமே?"ன்னு கண்ணாடி முன்னாடி நின்னு என்னையே கேட்டுக்குவேன்.


வேறே என்ன பண்றது?


*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP