Friday, November 28, 2008

நொறுக்ஸ் - வெள்ளி - 11/27/08


கார்லே போகும்போது என்னல்லாம் செய்யலாம் அப்படின்னு கொஞ்ச நாள் முன்னாலே பார்த்தோம். மக்களும் நிறைய ஐடியா சொன்னாங்க. ஆனா எதுவுமே செய்யாமே வெறும் சிந்தனை மட்டும் செஞ்சிண்டே போனா என்ன ஆகும்னு பாத்ததிலே, தனியா சிரிச்சிண்டு போனதுதான் மிச்சம். சரி, அப்படி என்னதான் சிரிக்கமாதிரி சிந்தனை பண்ணேன்னு கேக்கறீங்களா? கீழே படிங்க..

என் தம்பி ஆதர்ஷோட (தெரியாதவங்களுக்கு: குட்டி வெண்பூ) ஸ்கூலுக்கு போகணும். அந்த நடிகையை பாக்கறதுக்கு இல்லே.. ஸ்கூல் எப்படி நடத்தறாங்கன்னு பாக்கறதுக்காகத்தான்.

ஏதாவது பெரிய நடிகர் படம் வெளியாகுற அன்னிக்கு அடிச்சிபிடிச்சு கூட்டத்தில் போய் முதல் ஆளா டிக்கெட் வாங்க முயற்சி பண்ணனும். அப்படி போய், கவுண்டர் திறந்துவுடனே அவர்கிட்டே நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கான்னோ அடையாறுக்கு எந்த பஸ்லே போகணும் அப்படின்னு கேக்கணும்.

சென்னையில் ஏதாவது ஒரு ட்ராபிக் போலீஸ்காரரிடம் போய் - "சார், நீங்க செய்ற சேவை மிக மகத்தானது. உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கணும்" அப்படின்னு சொல்லிட்டு நண்பன் "சே, சீஸ்ஸ்ஸ்ஸ்" அப்படின்னு சொல்லும்போது, திடீர்னு ஒரு 50 ரூபாய் எடுத்து அந்த போலீஸ்கிட்டே "சார், இத பிடிங்க" அப்படின்னு குடுக்கணும்.

என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்.

------------

எங்கேயோ கேட்ட ஜோக் ஒன்று:

மாட்டுச் சந்தையில் ஒருவர் மாடு வாங்க வருகிறார்.

ஏங்க, இந்த மாடு எவ்வளவு?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அது 5000ரூ.

அப்ப பழுப்பு?

அதுவும் 5000ரு தான்.

இந்த மாடுங்க எவ்ளோ பால் கறக்கும்?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அது நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.

அப்ப பழுப்பு?

அதுவும் நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.

இந்த மாடுங்களுக்கு எவ்ளோ வயசாச்சு?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அதுக்கு ஆச்சு அஞ்சு வயசு.

அப்ப பழுப்புக்கு?

அதுக்கும் அஞ்சு வயசுதான் ஆகுது.

(இதே மாதிரி பல கேள்விகள் கேட்டபிறகு)

என்னங்க, எது கேட்டாலும் முதல்லே வெள்ளையா பழுப்பான்றீங்க... ஆனா பதில் ரெண்டுதுக்கும் ஒண்ணுதானே சொல்றீங்க?

ஏன்னா, வெள்ளை மாடுங்க என்னுது.

அப்ப பழுப்பு மாடுங்க?

அதுவும் என்னுதுதான்.

(கேள்வி கேட்டவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).

--------------

நாளைக்கு வட அமெரிக்கா பதிவர் சந்திப்பு நியூ ஜெர்ஸியில் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. அறிவிப்புக்கு இங்கே செல்லவும். இந்த பக்கம் இருக்கும் பதிவர்கள், அனானிகள் கண்டிப்பாக வரவும்.

------------

சென்ற வாரம் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த இன்னொரு தமிழ் தெரியாத தமிழ் சிறுமியிடம் தங்ஸ் "கத்தக்கூடாதும்மா. பாப்பா தாச்சி" என்றார். அந்த சிறுமி "what is தாச்சி?" என கேட்க, தங்ஸோ "பாப்பா தாச்சி means பாப்பா sleeping" என்றார். அப்போது நான் "அப்போ புள்ள தாச்சின்னா?" என்று கேட்டேன். அது புரியாமல் அந்த சிறுமி ஓடிவிட, தங்ஸின் பார்வையை பார்க்க முடியாத நானும் வேறுபக்கம் ஓடினேன்.


----------


Read more...

Thursday, November 27, 2008

கேப்டன் மென்பொருள் நிபுணரானால்!!!

கேப்டன் மேனேஜரா இருந்து செய்த ஒரு மென்பொருள்லே ஒரு பெரிய பிரச்சினை. போட்டுத் தாக்கறதுக்கு கம்பெனி முதலாளி கூப்பிட்டனுப்புகிறார்.

இனி கேப்டன் - முதலாளி பேச்சு.

ஏன் இந்த மென்பொருள்லே இவ்ளோ தவறுகள் வந்துச்சு?

செய்தவனை (developer)ஐ கேளுங்க.

இவ்ளோ தவறுகள் வரும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?

தெரியும்.

ஏன் அப்பவே எங்களுக்கு சொல்லலே?

முதல்லே எனக்கு பதவி உயர்வு கொடுங்க. அப்போதான் சொல்வேன்.
இப்பவே சொன்னா, அதை என்னோட மேனேஜர் தன்னோட ஐடியான்னு
சொல்லிடுவாரு.

ஆனாலும், சில அருமையான தவறுகளை கண்டுபிடிச்சிருக்கீங்க. எப்படி?

testerஐ கேளுங்க.

க்ளையண்ட் சொல்றதெல்லாம் உங்களுக்கு புரியுதா இல்லையா?

requirement வாங்குனவன கேளுங்க.

எதைக் கேட்டாலும் வேறே யாரையோ கேளுன்றீங்களே, உங்க டீம்லே இப்போ எவ்ளோ பேரு இருக்காங்க. அவங்க யார்யாரு?

இப்போதைக்கு என் டீம்லே ரெண்டு பேர்தான். அவங்க என் மனைவி, மச்சான் தான். எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்க.

எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்கன்னா, உங்களுக்கு இந்த மென்பொருளைப் பத்தி என்னதான் தெரியும்?

முன்னாடியே சொன்னா மாதிரி எனக்கு பதவி கொடுங்க. அதுக்கப்புறம்தான் நான் எதுவும் வெளிப்படையா சொல்வேன்.

பதவி உயர்வு, பதவி உயர்வுன்றீங்களே, அப்படி பதவி உயர்வு கொடுத்தா வேறே என்னதான் செய்வீங்க?

இந்த ப்ராஜெக்ட்லேந்து வரக்கூடிய ரிப்போர்ட்ஸ், மெயில்ஸ் எல்லாத்தையும் உங்க வீட்டுக்கே வந்து கொடுப்பேன். நீங்க அலுவலகத்துக்கே
வரவேண்டாம்.

சுத்தம். அப்பகூட மென்பொருள் தவறுகளை குறைப்பேன்னு சொல்ல மாட்டீங்க. இனிமே உங்க கிட்டே பேசி பிரயோஜமில்லை. நீங்க பேசாமெ
ராஜீனாமா செய்துட்டு போயிடுங்க.

தமிழ்லே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - ராஜீனாமா.

பேசாதீங்க. ராஜீனாமான்றது தமிழ் வார்த்தையா இல்லையான்னே உங்களுக்கு தெரியல. இந்தாங்க கடிதம். உங்களை வேலையை விட்டு தூக்கிட்டோம். போயிட்டு வாங்க. அக்குங்....( நாக்கை மடக்கி கண்ணடிக்கிறார்)... ச்சீ.. உங்ககூட சேந்து எனக்கும் இந்த பழக்கம் வந்துடுச்சு...

Read more...

Wednesday, November 26, 2008

டேய்!! தண்டவாளத்தை நடந்து கடக்காதீங்கடா!!!

பலமான எச்சரிக்கை:

நக்கலும், நையாண்டியும் எப்போதும் இருக்கும் பூச்சாண்டியில் முதல்முறையாக ஒரு சோகப்பதிவு. பல நாட்களாக போடலாமா, வேண்டாமா என்றெண்ணி மனதில் உள்ள சோகத்தை கொட்டிவிட முடிவு செய்து போடப்படும் பதிவு. இன்னிக்கு சந்தோஷமா இருக்கறவங்களும், இருக்கப் போறவங்களும் மற்றும் இளகிய மனசுக்காரங்களும் தயவு செய்து படிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

---------

டேய். இங்கே வாடா. நீயும் வாடி. கையை பிடிங்க. தண்டவாளத்தைத் தாண்டி அந்தப்பக்கம் வீட்டுக்குப் போகணும்.

அப்பா... அப்பா... இந்தப் பக்கம் பாருங்கப்பா.. ரெயில் வந்துடுச்சுப்பா...

தடக்.. தடக்... தடக்... தடக்..

-------------

செய்தி: 2007ல் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை - தமிழ் நாட்டில் 1979 - சென்னையில் 870.

-------------

சென்னையில் எங்கள் அடுக்கு மாடி வீட்டில் பின்பக்கம், சஹானாவுக்கு இரண்டு குட்டி நண்பர்கள் இருந்தார்கள். இரண்டு வயது வித்தியாசத்தில் அழகான அண்ணன் தங்கை. பள்ளி முடிந்தபிறகு எங்கள் வீட்டுக்கு வந்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். சஹானாவின் பொம்மைகளை வீடு பூராவும் பரத்தி, தினமும் நாங்கள் பலமுறை சுத்தம் செய்யவேண்டியிருக்கும்.

--------------

தினமும் இணையத்தில் தினமலர், தினகரன் படிக்கும்போது பார்க்கும் செய்தி - தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இன்னார்
மரணம்ன்றது. சென்னை புறநகரில் அடிக்கடி நடக்கும் விபத்து இது. யார் இறந்தார்கள், எந்த ஊர் என்று மட்டும் பார்த்துவிட்டு அடுத்த
செய்திக்கு போய்விடும் அளவுக்கு பழகிப்போய்விட்ட ஒரு செய்தி. இது எனக்கு மட்டுமல்ல, அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கும், புறநகர்
ரெயில் பயன்படுத்துவோருக்கும் அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

-----------

சென்ற வருடத்தில் ஒரு நாள் வழக்கம்போல் அலுவலகத்திலிருந்து அம்மாவுக்கு தொலைபேசியிருந்தேன். தொலைபேசி எடுத்தவுடன், அம்மா -
ஓ வென்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.

"என்னம்மா ஆச்சு, உடம்பு சரியில்லையா?. சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியல".

" நம்ம __குட்டி... நம்ம _குட்டி.... நேத்து ரெயில்லே அடிபட்டு.... ராத்திரியே..... ".... இன்னிக்கு தினகரன்லே வந்துருக்கு பாரு" -

அழுதுகொண்டே தொலைபேசியை வைத்துவிட்டார்கள்.

----------

அலுவலகத்தில் நுழைந்த அரை மணியில் இந்த செய்தி. உடனே லீவ் போட்டுவந்து, சஹானாவின் பழைய ஆல்பத்தைத் தேடி எடுத்து
__குட்டியைப் பார்த்து அழுது மயக்கம் போடாத குறைதான். என் தந்தை மறைந்தபோதுகூட நாங்கள் அவ்வளவு அழுததில்லை.

அந்த விபத்து நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அந்த ஆல்பத்தைப் புரட்டும்போதும், __குட்டியை பார்க்கும்போதும்
அழாமல் இருக்கமுடியவில்லை. அப்படியே அடுத்த இரண்டு நாளுக்கு மூட் அவுட்டாவதையும் தடுக்க முடியவில்லை.

--------

டேய்.. ஒரு அஞ்சு நிமிஷத்தில் ஒண்ணும் குடிமுழுகிப் போகாதுடா... தண்டவாளத்தை நடந்து கடக்காமே, படியிலோ சுரங்கப்பாதையிலோ
போய் பழகுங்கடா...

Read more...

Tuesday, November 25, 2008

கெட்டி மேளம்... கெட்டி மேளம்!!!

சிறிய வயதில் உறவினர்களின் திருமணத்திற்குப் போவது படுகுஷியாக இருக்கும். பள்ளிக்கு மட்டம் போட்டுவிடலாம், படிக்கவும் வேண்டாம்.
அதுமட்டுமல்லாமல் திருமண மண்டபத்தில் நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க. நம்ம இஷ்டத்துக்கு சாப்பிட்டு நம்ம இஷ்டத்துக்கு
சுத்திக்கிட்டே இருக்கலாம்.


என்னோட இதே வேவ்லெங்தில் (வார்த்தை நன்றி: பரிசல்) இன்னொரு உறண்பனும் இருந்தான். (உறண்பன் = உறவினன் + நண்பன்). அவனும்
அதே திருமணத்திற்கு வந்துவிட்டால், அப்புறம் எங்களை யாரும் பிடிக்கவேமுடியாது. அப்படி என்னதான் செய்வீங்கன்றீங்களா, அதைத்தான்
இங்கே சொல்லியிருக்கேன். பொறுமையா படிங்க.


ஞானும் அவனும் நடுவில் இன்னொருவரும்:


திருமணத்தை பார்வையிட வந்தவர் யாராவது ஒருவர் தனியாக உட்கார்ந்திருந்தால், நாங்கள் இருவரும் ஒவ்வொருவராக போய் அவரின்
இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்து விடுவோம். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, ஒருவரையொருவர் திடீரென்று பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு -
'டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' என்று ஒருவன் ஆரம்பிக்க, இன்னொருவனும் 'ஹேய்' என்று பேச ஆரம்பிப்பான்.


நடுவில் உட்கார்ந்திருக்கும் அந்த நபர் எங்கள் தொல்லை பொறுக்க முடியாமல் எழுந்து போகும் வரை - நாங்கள் பார்த்த சினிமா,
தொலைக்காட்சி விளம்பரம் என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எதையாவது பேசிக்கொண்டிருப்போம்.


மனிதர் பயங்கர பொறுமைசாலியாக இருந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் எழுந்துபோகாமல் இருந்துவிட்டால், நண்பன் பயங்கர டென்சனாகிவிடுவான். அவன் திறமையை நிரூபிக்கும் சவாலில் அவன் தோற்றுப்போனதுபோல் ஆவேசப்பட்டு - நான் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு - ஆங்கிலம், இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் பேச/உளற ஆரம்பித்து விடுவான். எங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பவர், அதற்கு மேல் அந்த அறுவையை தாங்கமுடியாமல் கண்டிப்பாக எழுந்து போய்விடுவார்.


தொலைபேசுதல்:


தொலைபேசுதல் அப்படின்னா - ஃபோன்லே பேசுதல் இல்லீங்க. தொலைவிலிருந்து பேசுதல். ஒரு படத்தில் மணிவண்ணன் பேருந்து
நிலையத்தில் நின்றுகொண்டு அங்கிருக்கும் ஒரு பேருந்தில் ஒவ்வொருவராக முன்னால் இருக்கும் நபரை கூப்பிடச்சொல்வாரே, அப்படி
கூப்பிட்டு பேசுவது.


மண்டபத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் ஒரே வரிசையில் வெவ்வேறு மூலையில் உட்கார்ந்திருப்போம். நான் எழுந்து அதே
வரிசையில் நடுவில் உள்ள இன்னொருவரை கூப்பிட்டு - "ப்ளீஸ், அவரை கூப்பிடுங்களேன்" - அப்படின்னு பக்கத்தில் இருப்பவரை காட்டி, அப்படியே கூப்பிட்டு கூப்பிட்டு வரிசையின் கடைசியில் உள்ள நண்பன் பார்த்தவுடனே, வழக்கம்போல் "டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' - என்று ஆரம்பிப்பேன்.


மற்ற விஷயங்கள் எல்லாம் மேலே சொல்லியிருக்கிறா மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கே ' நடுவில்' இருக்கும் ஆட்கள் அதிகம். அதனால், எல்லோரும் எழுந்து போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாங்களே விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்து போய்விடுவோம்.


படுபிஸியாக காட்டிக்கொள்ளுதல்:


அந்த திருமணமே எங்க உழைப்பில்தான் நடக்கிற மாதிரி பயங்கர பிஸியாக நடந்து கொண்டிருப்போம். கல்யாண மேடை, பார்வையாளர்
உட்கார்ந்திருக்கும் இடம், சமையலறை ஆகிய எல்லா இடங்களிலும் இப்படியே நாங்கள் நடையா ஓடிக்கொண்டிருப்பதால், பார்ப்பவர்கள்
அனைவரும் நாங்கள் ஏதோ திருமண வேலையாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணுவர்.


அப்படியும் சில பேர் எங்களை நம்பாமல் ஏதாவது வேலை செய்ய கூப்பிடும்போது, நண்பன் படுசீரியஸாக - அந்த மாமா வெற்றிலை வாங்கி
வரச்சொன்னார், இந்த மாமி சுண்ணாம்பு வாங்கி வரச்சொன்னார் - ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க. கொடுத்துட்டு வந்துடறேன் - அப்படி ஏதாவது சொல்லிவிட்டு எஸ்ஸாயிடுவான்.


சிறிது நேரம் இப்படி 'திருமண வேலைகளை' செய்தபிறகு - முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு - மண்டபத்தில் ஏதாவது ஒரு மூலையில் படுத்திருந்தாலும் - பார்ப்பவர்கள் - "நல்ல வேலை போலிருக்கு. பாவம் சின்னபுள்ள டயர்டாகி படுத்துவிட்டான்" என்று கூறுமளவிற்கு எங்கள் நடிப்பு அப்போதே ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக இருந்தது.


பதிவு ஓவர். இனி பின்குறிப்பு மட்டும்தான் பாக்கி.


அதெல்லாம் அந்த காலம். கல்யாணம் ஆனப்பிறகு - இந்தியாவில் நான் கலந்துகொண்ட திருமணங்களில் அங்கே இங்கே சுற்றாமல் மனைவி
பின்னாடியே வாலை (பதிவர் வாலை இல்லீங்க, என் வாலை) சுற்றி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்ததுதான் அதிகம்.

Read more...

Monday, November 24, 2008

ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்!!!


1. என் இருக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் ஜன்னலிலிருந்து காத்தே வரமாட்டேங்குது. அதனால் என்னால் சென்ற ஆறு மாதங்களாக சரியாக வேலை செய்ய முடியவில்லை.


2. இந்த அலுவலகத்தில் முதல் மாடியில் வேலை செய்பவர்களுக்கு வாரந்தோறும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். மேல் மாடியில் இருப்பவர்களுக்கு 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும்.


3. நான் வேலை செய்யற இந்த ப்ராஜெக்ட் தோல்வி அடைஞ்சதாலே, இந்த கம்பெனிய ஊத்தி மூடிடுவாங்களான்னு யோசிச்சி யோசிச்சே, ராத்திரியெல்லாம் தூக்கம் வர்றதில்லே.


4. எங்க ப்ராஜெக்ட்லே கடந்த ரெண்டு மாசத்துலே 300 தவறுகள்தான் செய்திருக்கிறோம். அதே அந்த ப்ராஜெக்ட்லே 54,234 தவறுகள் செய்திருக்காங்க.

5. ஒரு வாரம் நல்ல மழை பெஞ்சா போதும். இந்த ப்ராஜெக்டை உடனே முடித்து விடலாம். (மனதில்: ஒரு வாரம் மழை பெஞ்சா ஊரே குளமாயிடும். மக்களை வீட்டுக்கு அனுப்பாமே, ஆபீஸ்லேயே பூட்டி வெச்சி வேலை வாங்கிடுவேன்!!!).

6. கோடையில்தான் எல்லாரும் லீவ் போட்டுண்டு ஊருக்குப் போயிடுவாங்க. அதனால் வேலை பாதிக்கும். ஆனால், இந்த தடவை குளிர் காலத்துலேயே நல்ல வெயில் அடிச்சதால், லீவ் போட்டுட்டாங்க. ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது.

7. இந்த ப்ராஜெக்ட் எவ்ளோதான் சொதப்பலா போனாலும் எனக்கு பிரச்சினையில்லை. நானா ராஜீனாமா பண்ண மாட்டேன். எங்க தலைவர் என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்வேன்.

8. மென்பொருளில் வரும் தவறுகள் குறித்து க்ளையெண்டே ஒண்ணும் சொல்றதில்லை. சிலர் வேண்டுமென்றே அவர்களை தூண்டி விடுகின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

9. நான் வேலையே செய்யாமே எப்பவும் மேனேஜர்கூடவே இருக்கறேன்றதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு. சனி, ஞாயிறுகளில் நான் எப்பவும் எங்க வீட்லேதான் இருப்பேன். அவர்கூட இருக்க மாட்டேன்.

10. இந்த கம்பெனியில் மாசத்துக்கு ஐநூறுக்கு குறைவா தவறுகள் செய்றவங்களுக்கு தினமும் மூணு கப் காப்பி வழங்கப்படும். அதுக்கு மேலே ஒவ்வொரு நூறு தவறுகளுக்கும் ஒரு காபி குறைக்கப்படும். ஆயிரம் தவறுகள் செய்றவங்க, அவங்க வீட்லேந்து காபி கொண்டுவந்து இங்கே இருக்கறவங்களுக்கு கொடுக்கணும்.

11. அடுத்த ஜூன் 30க்கு மேல் நம்ம மென்பொருள்லே எந்த பிரச்சினையும் வராது.

12. எங்க டீம்லே இருக்கற ஒருத்தர் இப்போதான் இன்னொரு கம்பெனிக்கு போயிட்டு வந்தார். அங்கெல்லாம் நம்மை விட மோசமா மென்பொருள் பண்றாங்களாம். நாம எவ்வளவோ பரவாயில்லை.

Read more...

Thursday, November 13, 2008

வட அமெரிக்க பதிவர்கள் தேசிய மாநாடு 2008!!!

வட அமெரிக்கப் பதிவர்கள் சார்பில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாள்: நவம்பர் 29, 2008 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

இடம்: நியூ ஜெர்ஸி. (இப்போதைக்கு மாநாட்டுத் திடல் இருக்கும் இடம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது - அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்).

தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா

முன்னிலை: திரு. இலவசக்கொத்தனார்

வரவேற்புரை: திரு. கே.ஆர்.எஸ்

மக்கள் தொடர்பு: திரு. இளா

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்னும் சிலரை சாட்டிங்கில் அழைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.

சிரஞ்சீவிகாரு கூட்டத்தில் போட்டதைப்போல் முட்டை வீசத் தயாராக இருப்பவர்கள், தயவுசெய்து அந்த முட்டைகளை முன்கூட்டியே எங்களுக்கு அனுப்பிவிட்டால் உபயோகமாக இருக்கும். (அழுகாத) தக்காளி கிடைத்தாலும் நலம்.

மேலும், மாநாட்டை வாழ்த்தி குறைந்த பட்சம் ஒரு லட்சம் தந்திகளாவது எதிர்பார்க்கிறோம்.

அனைவரும் வருக!!! ஆதரவு தருக!!!

Read more...

நொறுக்ஸ் - வியாழன் - 11/13/2008

ரெண்டு வடை வாங்க 50 ரூபாய் கொடுக்கலாம் அல்லது 100 ரூபாய் கொடுக்கலாம். ஆனா யாராவது 1300 ரூபாய் கொடுப்பாளோ???? கொடுத்துட்டாளே.... விவரம் பதிவின் கடைசி செய்தியாக...

-------------

நாம சுவாசிக்கறது பிராண வாயு. மரங்கள் சுவாசிக்கறது கரி அமில வாயு. நமக்கும் மரங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்னு எனக்கு சின்ன வயசுலே தெரிஞ்சதுலே இந்த பாயிண்ட்தான் முக்கியமானது.


இந்த ஊர்லே வந்து தெரிஞ்சிக்கிட்ட இன்னொரு வித்தியாசம் - குளிர் காலம் வரவர நாம உடுத்தற துணியோட தடிமன் (or தடிப்பு) அதிகமாயிட்டே போகுது; ஆனா, மரத்தோட ஆடையான இலை குறைஞ்சிக்கிட்டே போய் மொட்டையாயிடுது. (சரி சரி, கை
தட்டாதீங்கப்பா!!!).


இவைகளைத் தவிர இன்னும் பல வித்தியாசங்கள் இருந்தாலும், நம்மை 'யாராவது' - மசமசன்னு மரம் மாதிரி நிக்காதீங்க - அப்படின்னு 'பாசமா' சொல்லும்போது கோபம் வராமே, சந்தோஷமா இருக்கே - ஏன்னு யாராவது சொல்றீங்களா????

-------------------

ஓட்டுனர் உரிமம் வாங்கிய அனுபவம்:


சென்னை ஆலந்தூரில்:

ஒரே காரில் ஒரு பத்து பதினைந்து பேர் ஓட்டிக் காண்பிக்கணும். ஒருவர் வண்டியை ஓட்ட, மற்றவர்கள் தங்கள் பைக்கிலோ, வேறொரு காரிலோ பின்னாலேயே தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு சின்ன ஊர்வலம் மாதிரி எல்லோரும் போய்க்கொண்டிருந்தோம். வண்டி ஓட்டுவதற்கு என் முறை வந்தபோது - பக்கத்தில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளர் - வண்டியை ஸ்டார்ட் பண்ணி போங்க - என்றார்.

நானும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முற்பட்டபோது - வண்டியிலிருந்து ஒரு மாதிரி புர்புர்ரென்று சத்தம் வந்தது. அமைதியாக அவர் சொன்னார் - வண்டி ஸ்டார்ட் ஆகித்தான் இருக்கு. "இதை ஏன்யா முன்னாடியே சொல்லலே" - அப்படின்னு நான் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறீங்க... கரெக்ட்.. நானும் அப்படியேதான் நினைச்சேன். ஆனா சொல்லலே... :-)


அவரோ ரோட்டையே பாக்கலே. தன் கையில் இருந்த நோட்டில் ஏதோ எழுதிக்கிட்டே இருந்தார். நான் கியர் மாத்தி 1,2,3,4 போனவுடன், வண்டியை ஓரம் கட்டுங்க என்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்.


அமெரிக்காவில்:

ஒரு பத்து நிமிடம் சந்து பொந்தாக சுற்றிவிட்டு திரும்ப புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். இப்போது கண்காணிப்பாளர், வண்டியை பின்பக்கமாக ஓட்டி நிறுத்துங்க (back parking) என்றார். நானும் ஸ்டைலாக பின்பக்கம் போய் வண்டியை நிறுத்தினேன்.


சரியாக இரண்டு கோடுகளுக்கு நடுவில் நிறுத்தவேண்டும். நானும் வண்டியை நிறுத்தியபிறகு கோட்டை பார்த்தேன். இரண்டு பக்கமும் இரு கோடுகளும் சிறிது தூரம் தள்ளி இருந்தது. சரி, ஒரு பெரிய லாரி நிறுத்தவேண்டிய இடத்துலே நாம வண்டியை நிறுத்தியிருக்கோம்.
அதனால்தான், இரண்டு பக்கமும் கோடு தள்ளியிருக்கு அப்படின்னு நினைச்சிக்கிட்டு ஒரு மிதப்போட அந்த கண்காணிப்பாளரைப் பார்த்தேன்.


"ம்ஹும். நீங்க ஃபெயில். பத்து நாள் கழிச்சி மறுபடி வாங்க" - அப்படின்னுட்டார். என்னடான்னு பாத்தா, கீழே இருக்கற படத்தை பாருங்க. அதே மாதிரி நான் சரியா கோட்டு மேலேயே வண்டியை நிறுத்திட்டேன். அவ்வளவுதான்.




--------------

ஒரு முறை அலுவலக விஷயமாக என்னையும் சேர்த்து நண்பர்கள் மூன்று பேர் சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்தோம். ரயில் புறப்பட்டு செக்கிங், இரவு சாப்பாடு எல்லாம் ஆனது. படுக்கப்போகும்போது வண்டி ஏதோவொரு நிறுத்தத்தில் நின்றபோது, நண்பன் பசிக்கிறதென்று போய் எல்லோருக்கும் வடை வாங்கி வந்தான்.

சிறிது நேரம் கழித்து டிடிஆர் இரண்டாவது தடவை செக்கிங் செய்வதற்கு வந்துவிட்டார். இந்த மாதிரி இரண்டு தடவை செக்கிங் செய்வது அன்று மட்டுமா அல்லது தினமுமா என்று தெரியவில்லை.


வடை வாங்கிய நண்பன் பரபரவென்று தன் பர்ஸை நோண்டிக்கொண்டிருந்தான் - "மாப்ளே, டிக்கெட் தொலைஞ்சு போச்சுடா!!!". அதன்பிறகு டிடிஆரிடம் கெஞ்சி கூத்தாடி, பேரம் பேசி ஒரு வழியாக பிரச்சினையை தீர்த்தோம்.


மறு நாள் காலை நண்பன் சொன்னான். " நான் ரெண்டு பத்து ரூபாய் நோட்தான் வைத்திருந்தேன். அவை இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அப்படின்னா, நான் நம்ம டிக்கெட்டை கொடுத்துத்தான் வடை வாங்கியிருக்கேன் போல!!!".

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP