ஒரே ஒரு நிமிடம் ஒரு சின்னஞ்சிறு குழந்தைக்காக ஒதுக்கமுடியுமா?
ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்யும் எங்களைப் போன்றவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களே சகோதரர்கள், சகோதரிகள். அவர்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி. அவர்கள் கஷ்டமே எங்கள் கஷ்டம். ஊரில், வீட்டினருக்கு தெரியாத எங்களுடைய கஷ்ட நஷ்டங்கள், இங்கிருப்பவர்களுக்கு தெரியும்.
பக்கத்தில் இருக்கும் ஒரு சகோதரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இதயத்தில் சிறு பிரச்சினை. ஒரு வருடத்தில் அந்த பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினாலும், அவ்வப்போது அக்குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பல்வேறு பரிசோதனைக்கு ஆளாக்குகிறார்கள்.
வயதானவர்களுக்கே அடிக்கடி மருத்துவமனை, பரிசோதனை என்றால் வேதனையாக இருக்கும். இதுவோ சின்னஞ்சிறு குழந்தை. வெளியில் சிரித்துக் கொண்டு பேசினாலும், அந்தக் குழந்தையின் பெற்றோர் மனதுக்குள் படும் வேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மருத்துவ ரீதியாகவோ பண ரீதியாகவோ இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. உணர்வு ரீதியாக ஆதரவு தர மட்டும் எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம்.
ஒரு முறை எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்தபோதும் சரி, அதற்குப் பிறகும் எப்போது கோயிலுக்குப் போனாலும், கடவுளிடம் எதுவும் கேட்காமல், சும்மா அவரை வேடிக்கை பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். இப்போது இந்த சின்னஞ்சிறு குழந்தையின் நலனுக்காக அவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.
அதே நோக்கத்துடன் உங்களுக்கும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். ஒரே ஒரு நிமிடம் உங்களால் ஒதுக்க முடிந்தால், இந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
எல்லோரும் (அட்லீஸ்ட் எனக்குத் தெரிஞ்சவங்க!) இன்புற்று இருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே!
மிக்க நன்றி.
