வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன் மற்றும் ஒரு நல்ல மனிதரைப் பற்றி..
சமீபத்திய சென்னை விஜயத்தில் மூன்று நண்பர்களுடன் செய்த பணவிவகாரத்தில் மூன்று விதமான அனுபவங்கள் கிடைத்தன. பதிவு போட வேறு விஷயம் இல்லாததால் அந்த அனுபவங்கள் இங்கே.
*****
நண்பர் 1 :
அவருக்கு நான் சிறிது பணம் கொடுத்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கி - அதைப் பற்றி மறந்தும் போனேன். ஆனால் நண்பரோ, இந்த முறை சென்றிருந்தபோது - கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மன்னிச்சிக்கோ - என்றவாறு அந்த தொகையை திருப்பிக் கொடுக்க வந்திருந்தார். நானோ - " நீ மறக்காமே திருப்பிக் கொடுக்க நினைச்சதே பெரிய விஷயம். எனக்கு இந்த பணம் வேண்டாம். உன் பையன் பேர்லே வங்கியில் போட்டு வெச்சிக்கோ. பிறகு பயன்படும்" என்றேன்.
அவரோட நிலைமை கொஞ்சம் சுமார்தான் என்பதால் நான் அந்த பணத்தை வாங்க மறுக்க, அவர் வற்புறுத்த, மறுக்க, வற்புறுத்த.. இப்படியே ஒரு பத்து நிமிடம் போயிடுச்சு.
எவ்ளோ வருடம் ஆனாலும், வாங்கின பணத்தை திருப்பித் தரணும்ன்ற உன்னோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அந்த பணம் எனக்கு வேண்டாம். நீயே வெச்சிக்கோன்னு அடிச்சி சொல்லி, அந்த தொகையை அவரோட பாக்கெட்டுலேயே போட்டுட்டு திரும்பி வந்துவிட்டேன்.
நீதி: (தலைப்பில் முதல் பகுதி : கொடுத்தா வாங்க மாட்டேன்!).
*****
நண்பர் 2 :
"உன்கிட்டே கொஞ்சம் தனியா பேசணும். ஒரு அஞ்சு நிமிஷம் போதும். ஓகேவா?" என்று ஆரம்பிக்கும்போதே பணம் கேக்கப்போறார்னு தெரிஞ்சி போச்சு. சரி என்னதான் ஆகுதுன்னு பாத்துடுவோம்னு போனேன். இதுக்காகவே வெளியூரிலிருந்து வந்திருந்த அவர் - "என் பையனோட பள்ளிக் கட்டணம் இப்ப ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. நீ ஏதாவது உதவி செய்ய முடியுமா"ன்னு கேட்டாரு.
நண்பர்- 1 மாதிரியே இவரும் சுமாரான நிலையில் இருப்பதால் நானும் - "சரி. எவ்ளோ வேணும்னு சொல்லு. பள்ளியின் பேரில் காசோலை கொடுத்துடறேன். அதை அப்படியே நீ அங்கே கொடுத்துக்கோ" - என்று சொல்ல - அதன் பிறகு நண்பர் விட்ட கதையைக் கேட்டு கோபம்தான் வந்தது.
அ). பள்ளியில் காசோலை வாங்க மாட்டாங்க.
ஆ). எனக்கு வேறு சிலருக்கும் காசு கொடுக்கணும்.
இ). நீ உதவி செய்யறேன்னு சொன்னதால்தான் நான் இவ்ளோ தூரம் வந்தேன்.
ஈ) நீ அமெரிக்காவுலே வேலை பாக்குறே. பணம் கொடுத்தா என்னவாம்?
கோயில் கட்ட காசு வேணும்னு கேட்டாலே நயா பைசா கொடுக்காதவன் நான் - ஏதோ பையன் படிப்புக்கு கேட்டதால் கொடுக்கறேன்னு சொன்னேன் - பள்ளியின் பேர்லே காசோலை வேணும்னா வாங்கிக்கோ - இல்லேன்னா ஒரு பைசா கிடையாதுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.
நண்பருக்கு சரியான கோபம். ஆனா, அதெல்லாம் பாத்தா வேலைக்காகுமா? அமெரிக்காவுலே காசு சும்மாவா வருது.. அதை சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்படறோம்னு இங்கே வந்து பாத்தாதான் தெரியும்னெல்லாம் சொல்லணும்னு ஆசை. ஆனா ஒண்ணும் சொல்லலை.
நீதி: (தலைப்பில் இரண்டாம் பகுதி : கேட்டா கொடுக்க மாட்டேன்!).
*****
நண்பர் 3 :
என் வீட்டுக் கடன் விஷயமா ஒருவர் ஒரு வாரம் முழுவதும் அலையா அலைஞ்சார். நிறைய தடவை தொலைபேசி, வேகாத வெயிலில் நுங்கம்பாக்கம், அடையாறு, நங்கநல்லூர், தாம்பரம் அப்படின்னு தொடர்ச்சியா அலைஞ்சி - நான் ஊருக்குத் திரும்பி போவதற்குள் முடிக்க வேண்டுமே என்ற பரபரப்போடு அந்த வேலையை வெற்றிகரமாக செய்தும் கொடுத்தார்.
அவரோட பொழப்பே அதுதான்னு தெரிஞ்சாலும், எனக்காக கஷ்டப்பட்டவருக்கு ஏதாவது செய்யலாம்னு நினைச்சி ஒரு சிறிய தொகைக்கு ஒரு பரிசுக் காசோலை வாங்கி கொடுக்க முற்பட்டேன்.
நண்பருக்கு சரியான கோபம் வந்துடுச்சு. " நான் செஞ்சது என் வேலைதான். அதுக்கு எனக்கு சம்பளம் கொடுக்கறாங்க. மேற்கொண்டு நான் யாரிடமும் பணம் லஞ்சமாக வாங்க மாட்டேன். அது மிகப்பெரிய தப்பு. இப்படி வாங்குற காசு எனக்கு ஒட்டாது" - அப்படி இப்படின்னு பொரிஞ்சி தள்ளிட்டாரு.
ஒரு அஞ்சு நிமிடம் சொல்லலாம் கடைசியில் வாங்கிடுவாருன்னு நானும் போராடி பாக்குறேன்.. ம்ஹூம். மனுசன் அசரவேயில்லை. இந்த காலத்திலும் இப்படி ஒரு ஆளான்னு என்னால் நம்பவே முடியவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவருக்கு வெறும் நன்றியை தெரிவித்து அனுப்பி வைத்தேன். வாழ்க நண்பர் - 3.
நீதி : (தலைப்பில் மூன்றாம் பகுதி : ஒரு நல்ல மனிதரைப் பற்றி!)
*****

