தொதொ பார்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய செயல்கள் 10!!!
தொதொன்னா என்னன்னு குழம்பிடாதீங்க. தொதொ = தொலைக்காட்சித் தொடர். இப்போ தலைப்பை இன்னொரு தடவை படித்துவிட்டு பதிவுக்கு போயிடுங்க...
1. வீட்டிலுள்ள தொலைபேசியை, கைபேசியை அணைத்து விடவேண்டும். தொலைபேசியை அணைக்க முடியாத பட்சத்தில், மிமிக்ரி செய்யத் தெரிந்தால் நலம். அப்போதுதான் - நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் - என்று சொல்லி தேவையில்லாத அழைப்புகளை உடனே வெட்டிவிட முடியும்.
2. சமையலறையில் பாதியில் விட்ட வேலைகளை விரைவில் முடித்துவிடவும். துவக்காத வேலைகளை தொதொக்குப் பிறகு துவக்கவும். இதில் குக்கர்தான் முக்கியம். அதன் ஒலி தொதொவின் ஒலியை கேட்கவிடாமல் செய்துவிடும்.
3. தொலைக்காட்சியின் ரிமோட்டை பார்வையிலேயே வைத்துக்கொள்ளவும். ரிமோட் தேடுவதற்கு ஒரு கருவியே இருக்கிறது - முடிந்தால் அதையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். இதனால் நேரவிரயத்தை தவிர்க்கமுடியும்.
4. கைப்பை, பர்ஸ், சில்லறை ஆகிய எல்லாவற்றையும் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளவும். வீட்டிலுள்ளவர்களோ அல்லது கோவில் போன்ற விழாக்களுக்கு கலெக்ஷன் செய்ய வருபவர்களுக்கோ கொடுக்கத் தேவைப்படும். இதனால், தொதொ அதிக நேரம் தவறவிடாமல் பார்க்கலாம்.
5. குடிக்க தண்ணீர், பேனா -> இவற்றையும் அருகிலேயே வைத்துக்கொள்ளவும். தொதொ பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் கொரியர் ஆள் வருவார். கடிதம் நமக்கு இல்லையென்றாலும், குமார் வீடு இதுவா /மாடிக்கு எப்படி போவது என்று கேட்பார் அல்லது குடிக்க தண்ணீர் கேட்பார்.
6. மின்சார அட்டை, கேபிள் அட்டை, பால் அட்டை, காஸ் (gas) அட்டை போன்ற எல்லாவற்றையும் உடனே எடுக்கக்கூடிய இடத்தில் வைக்கவும். இந்த ஆட்கள் வந்தால், அவர்களை உடனடியாக பேசி அனுப்ப வசதியாக இருக்கும்.
7. வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கான மருந்து/தண்ணீரை எடுத்து வைத்துவிடவும். படிக்கும் வயதினர் இருந்தால், அவர்கள் தங்கள் வீட்டுப்பாடத்தை செய்துவிட்டார்களா என்று பார்த்துக்கொள்ளவும். சரியாக தொதொ பார்க்கும்போது அவர்களுக்கு நினைவு வந்துவிட்டு, உங்களை உதவிக்குக் கூப்பிட்டால் தொதொ புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
8. தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இவையில்லாமல் தொதொ பார்ப்பது அபாயகரமானது.
9. இயற்கையின் அழைப்புகள் - அவை அழைக்காவிட்டாலும் நீங்கள் அழையா விருந்தாளியாக 'போய்' முடித்துவிடவும். பிறகு, தண்ணீர் குடிப்பதை குறைத்துக்கொள்ளவும். தொதொக்கு நடுவில் மீண்டும் அழைப்பு வந்துவிட்டால் கஷ்டம்.
10. தொதொ ஆரம்பிக்குமுன்பே, அன்றைய செய்தித்தாள், அந்த வாரத்திய விகடன், குமுதம் இவற்றை தேடி பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். என்னேரமும் பக்கத்து ஃப்ளாட்டிலிருந்தோ, வீட்டிலிருந்தோ யாராவது வந்து ஓசியில் படிக்க கேட்கலாம்.
------------------
இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்தபிறகும் ஆற்காட்டார் தயவில் தொதொ பார்க்கமுடியாமல் போய்விட்டால், கவலையேபடாமல் காத்திருந்து அடுத்த நாள் பாருங்கள். கதை என் வலைப்பூ கௌண்டர் (counter) போல் நகராமல் அங்கேயே இருக்கும்.
Read more...

