Monday, October 20, 2008

கடைசிப் பெயர் அல்லது Last Name!!!

அர்னால்ட் ஸ்வாஜ்ஜெனிகருக்கு பெரிசாயிருக்கும்...
மடோன்னாவுக்கு இருக்காது...

இப்படி இன்னும் சில நபர்களைக் குறித்து சொல்லப்படும் இந்த ஜோக்குக்கு விடை என்ன என்பது உங்களுக்குத் தெரிந்தேயிருக்கும். அதுதான் இந்த பதிவின் தலைப்பில் இருக்கும் - கடைசிப் பெயர் அல்லது sur name அல்லது Last name.

கடைசிப் பெயர் - நம்ம ஊர்லே இதைக் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா, இங்கே எங்கே போனாலும் முதல்லே உங்க பேர் என்னன்னு கேக்காமே, உங்க கடைசிப் பேர் என்னன்னுதான் கேக்கறாங்க. அதுக்கு என்ன இப்போன்னு நீங்க கேக்கலாம். இருங்க. சொல்றேன்.

என் பெற்றோர் எனக்குப் பேர் வைக்கும்போது - ரொம்ப பெரிசா வெச்சது மட்டுமில்லாமே, அதை வார்த்தை வார்த்தையா பிரிச்சி வேறே வெச்சிட்டாங்க. முதல் பேர்லே ரெண்டு பகுதியும், கடைசிப் பேர்லே ரெண்டு பகுதியும், ஆக மொத்தம் நாலு வார்த்தைகள். அதாவது,
6+9+10+8=33 ஆங்கில எழுத்துக்களைக் கொண்டது என் முழுப்பேரு.

என்னோட முதல் பேரோட முதல் பகுதி (சத்யா) உங்க சில பேருக்கு தெரிந்திருக்கும். கடைசிப் பேர்லே முதல் பகுதி ஒரு ஊரில் உள்ள இடத்தின் பேரு (கடைசி பேர்ன்றதாலே அதை இந்த பதிவின் கடைசியிலே சொல்றேன்!!!). இரண்டாம் பகுதி எங்கப்பா பேரு.

நிற்க. (ஏற்கனவே நின்றிருந்தால் உட்கார்க). இப்போ இந்த கடைசிப் பேராலே என்னென்ன பிரச்சினை வந்திருக்குன்னு பாக்கலாம்.

ஒரு தடவை, இங்கே ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு போய் வேலையை முடிச்சிட்டு, என் பேர் சொல்லிக் கூப்பிடுவாங்கன்னு உட்காந்திருந்தேன். வழக்கம்போல், கண்ணை ஏதோ ஒரு இடத்திலே குத்தி வெச்சிட்டு, மனசை இந்தியாவிலே எங்கேயோ சுத்தவிட்டிருந்தேன்.
அந்த ஆள் என்னோட கடைசி பேரை (முதல் பகுதியை) சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருந்தார் நானோ - ஆஹா, நாம பொறந்த இடத்தை யாரோ ஒருத்தர் எவ்ளோ அழகா சொல்றாரு பாருப்பா - அப்படின்னு சும்மா உக்காந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சிதான் தெரிஞ்சுது -
அடடா, நம்ம பேரை சொல்றதுக்கு பதிலாதான் ஐயா அப்படி சொல்லிக்கிட்டிருக்காருன்னு. எழுந்து அவர்கிட்டே போனேன். அவரும் 'இது உங்க பேருதானே. ஏன் சும்மா முறைச்சிக்கிட்டு உக்காந்திருந்தீங்க?'ன்னாரு. எனக்கு பயங்கர வெக்கமா போயிடுச்சு. நம்ம கேப்டனுக்கு
தமிழ்லே பிடிக்காத அந்த ஒரு வார்த்தையை சொல்லிட்டு வெளியே வந்துட்டேன்.

அதே மாதிரி இன்னொரு தடவை ஒரு மருத்துவமனைக்குப் போயிருக்கும்போது, அங்கிருந்த நர்ஸம்மா - "உன்னோட கடைசி பேரு (முதல் பகுதி) உச்சரிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதுக்கு பதிலா முதல் பேரை (முதல் பகுதி) - சத்யான்னு - சொல்லி கூப்பிடவா" அப்படின்னாங்க. அடக்கஷ்ட காலமே, அதான்மா என் பேரு - அப்படின்னு நினைச்சிக்கிட்டு, "ஓ, அதுக்கென்ன, தாராளமா கூப்பிடுங்க" - அப்படின்னேன்.

இன்னொரு சந்தர்ப்பத்துலே நடந்தது இது. மேஜைக்கு அந்தப்பக்கத்திலிருந்து கேக்குறாரு ஒருத்தரு. "குடும்பத்துலே நீங்க மூணு பேரு ( நான், மனைவி மற்றும் குழந்தை). ஆனா, மூணு பேரோட கடைசி பேரும் வெவ்வேறா இருக்கே. அது எப்படி. குடும்பப்பேரு ஒண்ணுதானே
இருக்கணும்".

நானும் தொண்டையை கனைச்சிக்கிட்டு - "ஐயா, கடைசிப் பேருன்றது எங்களைப் பொருத்தவரை குடும்பப்பேரு கிடையாதுங்க. அது, அவங்கவங்க அப்பா பேருதான். எனக்கு - எங்கப்பா பேரு. என் மனைவிக்கு - அவங்கப்பா பேரு. என் பொண்ணுக்கு - என்னோட முதல்
பேரு. அதனால்தான், எல்லாமே வெவ்வேறா இருக்கு" - அப்படின்னேன்.

"இல்லையே. இந்தியாலே ஷர்மா, குப்தா அப்படின்னு குடும்பப்பேர் இருக்கே. அது எப்படி?" என்றார்.

சரி. இன்னிக்கு இது ஆவறதில்லே அப்படின்னு நினைச்சிக்கிட்டு - இந்திய பழக்கவழக்கங்கள், வட-தென்னிந்தியர்களின் பெயர்களில் உள்ள வித்தியாசங்கள் அனைத்திலும் ஒரு சிறிய சொற்பொழிவு நிகழ்த்தவேண்டியதாயிற்று.

அதன்பிறகுதான் அவர் சமாதானமாகி எங்களை வெளியே போகவிட்டார்.

----

சரி இவ்ளோ சொல்லிட்டு என்னோட கடைசி பேர்லே முதல் பகுதி என்னன்னு சொல்லாமே இருக்க முடியுமா? அது 'Triplicane'.

ஐந்தாவது படிக்கும்போது, என்னோட பேர் மற்றும் அதே இனிஷியலோட இன்னொருவன் வந்துவிட, என்ன பண்றதுன்னு தெரியாம, இனிஷியல்லே கூட ஒரு எழுத்து சேர்க்கறேன்னு பெற்றோர்கள் சேத்துவிட்டதுதான் இந்த 'Triplicane'.

தற்போது சென்னையில் வருமானவரி அலுவலகத்தில் வேலை செய்யும் அந்த சத்யாவை பார்க்கும்போதெல்லாம் - உன்னாலே என் பேரையே மாத்திக்கிட்டேனே? எனக்கு மட்டும் வருமான வரி போடாமே இருக்கக்கூடாதா? என்று வேண்டுகோள் வைப்பது வழக்கம்.

அவரும் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே - "வேணும்னா ஒரு சாப்பாடு வாங்கித் தர்றேன் - அவ்ளோதான் என்னாலே முடியும்" அப்படின்னு அங்கிருக்கும் கேண்டீனுக்கு கூட்டிப்போய்விடுவார்.



Read more...

Saturday, October 18, 2008

சினிமா சினிமா, கிருஷ்ணா, சினிமா சினிமா

பதிவின் தலைப்பை முகுந்தா முகுந்தா பாணியில் படிக்கவும். மாட்டிவிட்ட பரிசலுக்கு நன்றி...

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நாலைஞ்சு வயசிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பாத்த படங்கள்னு நினைவுக்கு வருவது - சென்னை பைலட் தியேட்டரில் பக்த துருவ மார்க்கண்டேயா (பாட்டியுடன்). சத்யம்-ல் லாரல் ஹார்டி (அப்பாவுடன்). இதைப்பற்றி விரிவான ஒரு கொசுவத்தி பதிவு அடுத்த வாரம் வருது. (வருங்காலப் பதிவுக்கு இப்பவே உரல் கொடுக்கமுடியுமான்னு யாராவது சொல்லுங்கப்பா!!!).

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கஜினி கணக்காக விடாமுயற்சியுடன் முயன்று பார்த்த படம் தசாவதாரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

புதையல். இதுதான் நான் இணையத்தில் கடைசியாகப் பார்த்த தமிழ் படம். பிங்க் சட்டை, பச்சை பேண்ட் என்று கலக்கல் ஸ்டைலில் அரவிந்த்சாமி நடித்த படம். நல்லா வாய் விட்டு சிரிச்சி ( நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா) பார்த்தேன். கணிணியின் பவர்ப்ளக்கை சொருகாமல், பேட்டரியில் பார்த்ததால்தான், படம் இருட்டாக (வெளிச்சம் கம்மியாக) இருந்ததென்று கடைசியில் உணர்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாட்ஷா.

ஒவ்வொரு தடவை பாட்ஷா பாத்தப்புறமும் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தும். என்னன்னா, செம பசியாயிருக்கும். பசியைக்கூட மறந்து அந்த படத்தை பார்ப்பதுதான் காரணம்.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் இணையத்தில் தமிழ்முரசு பார்த்தேன். காதலில் விழுந்தேன் படத்தைப் பற்றிய சர்ச்சை - ஒரு முழுப் பக்கத்தில் படங்களுடன் கூடிய செய்தி. ஒரு வெட்டி (NOT நம்ம வெட்டி) படத்துக்கு இவ்ளோ பிரச்சினையா அப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு கோபம் இருந்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதமோ அல்லது இணையமோ - சினிமா செய்திகளை கடைசியில்தான் படிப்பேன். பேட்டி போக எல்லா இடத்திலும் ஒரே கிசுகிசு மேட்டர்தான். நமக்கு ஒரு நயா பைசா பிரயோசனம் இல்லாத மேட்டரை படிச்சி என்ன ஆகப்போகுது சொல்லுங்க.

7.தமிழ்ச்சினிமா இசை?

இசையைப் பொறுத்தவரை நமக்கு பாட்டு வரிகள் புரியணும், கேட்பதற்கு இனிமையா இருக்கணும், வாத்திய இரைச்சல் குறைவா இருக்கணும் - அவ்ளோதான்.

அது - தேவா (உதா: மனம் விரும்புதே உன்னை, நலம் அறிய ஆவல்) இருந்தாலும் சரி, இளையராசா (ஏகப்பட்ட பாடல்கள்) இருந்தாலும் சரி, ரகுமான் (உதா: என்னவளே அடி என்னவளே) இருந்தாலும் சரி.

இதே ரீதியில் இருக்கும் பாடல்கள் எப்போவும் காரில், வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

கஜினிக்குப் பிறகு முகுந்தா முகுந்தாதான் ஸஹானா விரும்பிக் கேட்கும் பாடல் என்பதால் அந்த பாட்டு அடிக்கடி வீட்டில் ஒலிக்கும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நல்ல படம்னு எங்கேயாவது விமர்சனம் படித்தால், தேடிப்பார்த்துவிடுவேன்.

மலையாளம் - கத பறயும் போள், தன்மத்ரா
இந்தி - சக் தே இந்தியா, லகான், முன்னாபாய் MBBS
ஆங்கிலம் - விரும்பிப்பார்ப்பது நகைச்சுவை/திகில் படங்கள்.

சென்ற வாரம் க்வாரண்டைன் (Quarantine) பார்த்தேன். பயங்கர திகில் படம். பெரிய அரங்கில் மொத்தமே 5 பேர்தான் அமர்ந்திருந்தோம். அடிக்கடி பக்கத்தில், பின்னால் யாரோ வந்து நிற்பதுபோலவே இருந்தது. படம் முடிந்ததும், விட்டாப் போதும்டா சாமி என்று ஓடிவந்துவிட்டேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியா டிக்கட் வாங்கி, நேரடியா உக்காந்து பார்ப்பதைத் தவிர எனக்கு சினிமாவுடன் எந்த தொடர்பும் கிடையாது.

அதனால், கிளைக்கேள்விகள் N/A.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு படத்தின் தயாரிப்பு செலவு 1000 கோடியாகும். (இதில் ஹீரோ மற்றும் டைரக்டர் இவங்களோட சம்பளம் மட்டும் 950 கோடியாகும்).

ஒரு பாட்டுக்கு 30 ஆடைகள் மாற்றி, 40 நாடுகள் செல்வார்கள்.

கொரியாவிலிருந்தோ, நைஜீரியாவிலிருந்தோ ஒரு பாடகரை கொண்டு வந்து தமிழ்ப்படத்தில் பாடவைப்பார்கள்.

கட்டவுட்களுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்.

அரசு மானியம் பெற்று திரையிடப்படும் படங்கள் வெளியாகும் நாளன்று அரசு விடுமுறை அளிக்கப்படும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


பால், பீர் விலை குறைய வாய்ப்புண்டு.

பதிவர் மற்றும் வாசகர் சந்திப்புகளை பரிசல் ஏதாவது ஒரு திரையரங்கத்தில் வைத்துக்கொள்ளலாம்.

உடனடியா எல்லா டாஸ்மாக் கடைகளையும் பக்கத்து திரையரங்கத்திற்கு மாற்றிவிடலாம்.

மதன்ஸ் திரைப்பார்வையில் - ஆங்கிலத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட தமிழ் படங்களுக்கு விமர்சனம் செய்வதைவிட - நேரடியாக அந்த ஆங்கிலப்படத்துக்கே விமர்சனம் செய்யலாம்.

அலுவலகத்தில் எல்லோரும் தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி விவாதிப்பார்கள் (இப்போவும் அப்படித்தான். இன்னும் அதிகமாயிடும்!!!).

-----

இந்த பதிவை படிக்கிறவங்க - இன்னும் இந்த தொடரை எழுதாதவங்க - கண்டிப்பா எழுதணும்னு கேட்டுக்கறேன்.... :-))



Read more...

Friday, October 17, 2008

நெருப்பில்லாமேகூட புகையும்...!!!

ஊரு விட்டு வரும்போது அம்மா - வாரத்துக்கொரு தடவை எண்ணைய் தேச்சி குளின்னு சொன்னா மாதிரியே - வண்டி வாங்கும்போது, மூணு மாசத்துக்கு ஒருதடவை வண்டிக்கு எண்ணைய் மாத்தணும்னு நண்பர்கள் சொன்னாங்க.

அதேமாதிரி கடந்த ரெண்டு வருஷமா எண்ணைய் மாத்தற விஷயம் அமைதியா நடந்துக்கிட்டிருக்கும்போது, போன மாதம் ஒரு சம்பவம் நடந்து போச்சு. அன்னிக்கு நான் எண்ணைய் மாத்தின விஷயம் இந்த ஊரெல்லாம் தெரிஞ்சி - எல்லோரும் ரொம்ப ஆச்சரியமா பாத்தாங்க. இதுக்கெல்லாம் காரணமாயிருந்த (எண்ணைய் மாத்தின) அந்த மெக்கானிக்குக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கேன்.

சரி. விஷயத்துக்கு வர்றேன்.

அன்னிக்கு கார்த்தாலே 10 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். (இங்கே எல்லாத்துக்கும் அப்பாயிண்ட்மெண்ட்தான்). அரை மணி நேரத்துலே எண்ணைய் மாத்தற வேலை முடிஞ்சிடுச்சு. நானும் வண்டியை உருட்டிக்கிட்டு அலுவலகத்திற்கு வந்துட்டேன் (சுமார் 2 மைல்கள்).

தினமும் அலுவலகத்தில் நுழையும்போது அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் பல சூப்பர் கார்களைப் பார்த்து என் காதில் புகை வருவது வழக்கம். ஆனால், அன்னிக்குன்னு பார்த்து என் காதில் மட்டுமல்லாது, என் காரிலிருந்தும் புகை வரத்துவங்கியது. சரி, கொஞ்ச நேரத்தில்
சரியாகிவிடும்னு பார்த்தால், அந்த புகை நிற்கவேயில்லை.

என்னடான்னு முன்னாடி பேனட்டைத் திறந்து பார்த்தால் - பொது இடத்திலே அடிக்கமுடியாதுன்றதாலே, ஏகப்பட்ட பேர் என் காருக்குள்ளே உக்காந்து தம் அடிக்கறாப்லே - வண்டிக்குள்ளே பயங்கர புகை. இன்னும் சிறிது உற்றுப் பார்த்தால் - எண்ணைய் போடும் குழாயின் மூடியே காணோம். அதன் வழியாக எண்ணைய் வழிந்து - வண்டிக்குள்ளே விழுந்து ஒரே புகைமூட்டம். அந்த மூடி உள்ளேயே எங்கேயாவது விழுந்திருக்கிறதா என்று பாப்போம்னு பாத்தால், எங்கேயுமே காணோம். மெக்கானிக் அந்த குழாயை மூடாமலேயே விட்டிருக்கிறார்.

அவருக்கு தொலைபேசி விஷயம் சொன்னால் - அவரோ மிகவும் கூலாக - மறுபடி வண்டி கொண்டுவாங்க, சரி செய்துடலாம்னு சொல்லிட்டாரு. இப்படி புகை வருதே - ஏதும் பிரச்சினை வராதான்னால், அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. புகை அடங்கினப்புறம் வாங்க - அப்படின்னு கட் பண்ணிட்டாரு. சரின்னு சிறிது நேரம் கழிச்சி, மறுபடி வண்டி எடுத்துக்கிட்டு மெதுவா உருட்டிக்கிட்டு போனேன். அப்பவும் புகை அடங்கவேயில்லை.

ஏதோ ஒரு சினிமாவில் ஒரு பாட்டு சீன் வரும் - ஹீரோவும் ஹீரோயினும் ஒரு காரில் (ஸ்லோ மோஷனில்) பாட்டு பாடிக்கிட்டே போவாங்க. சுத்தி நிறைய பேர் வெள்ளை உடையில் டான்ஸ் ஆடுவாங்க - அந்த இடத்திலே பயங்கர புகை போட்டு வெச்சிருப்பாங்க. கிட்டத்தட்ட அதே காட்சி மாதிரிதான் நானும் கார் ஓட்டிக்கிட்டு போனேன். தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். ஒரே ஒரு ஹீரோயின் மட்டும்தான் பாக்கி.

அப்படி புகையோடவே அந்த கடைக்கு மறுபடி போனா, அந்த மெக்கானிக் சிரிச்சிக்கிட்டே - "ஹிஹி, உங்க எண்ணைக்குழாயின் மூடி இங்கேதான் இருக்கு. நான் அதை மூட மறந்துட்டேன். ஒரு அஞ்சு நிமிஷம் உக்காருங்க. சுத்தம் செய்து கொடுத்திடறேன்" - அப்படின்னு
சொன்னா மாதிரி செய்து கொடுத்தார்.


ஆனாலும், காரின் உள்ளே விழுந்திருந்த எண்ணையின் விளைவால், அடுத்த ரெண்டு மூணு நாள் புகையோடவே வண்டி ஓட்டிக்கிட்டிருந்தேன்.

அதான் மேட்டரு...

அப்போ நெருப்பில்லாமேகூட புகையும்தானே???

Read more...

Thursday, October 16, 2008

எனக்கு என் மாமியார் செய்யும் கொடுமைகள் 10...!!!

1. மூக்கிலே விரலை விட்டு நோண்டாதீங்க. எனக்கு அசிங்கமா இருக்கு.

2. துவைக்க வேண்டிய துணிகளையெல்லாம் ஒழுங்கா ரூம்லே இருக்கற கூடையிலே போடுங்க.

3. எனக்கு கொஞ்ச நேரம் உங்க கணிணி வேணும். எப்போ பாத்தாலும் கெக்கேபிக்கேன்னு எதை பாத்து சிரிக்கிறீங்களோ?

4. கார்த்தாலே எழுந்தவுடனே போர்வையை மடிச்சி வெக்கணும்னு தெரியாதா?

5. ஷேவ் செய்தபிறகு வாஷ்பேசினை நல்லா சுத்தப்படுத்தணும்றது தெரியுமா?

6. தினமும் சோபா (sofa) உறையை ஒழுங்குபடுத்தி போடணும்னு தெரியாதா?

7. இப்படி நகத்தை கடிக்காதீங்க. அது ரொம்ப கெட்ட பழக்கம்.

8. சாப்பிட்ட பிறகு மரியாதையா தட்டை எடுத்து கழுவி வைங்க.

9. தும்மும்போது முகத்தை மூடிக்கோங்க.

10. நீங்க சொல்ற அறுவை ஜோக்குக்கெல்லாம் என்னாலே சிரிக்க முடியாது. அதுக்கு வேறே ஆளை பாருங்க.



இப்படியெல்லாம் என்னோட தனிமனித சுதந்திரத்திலே தலையிடறாங்க.




சொந்த வீட்லேகூட நிம்மதியா இருக்கமுடியாம தவிக்கிறேன்..



மேலே சொன்னமாதிரியெல்லாம் என்னை கொடுமைபடுத்தற .... மாமியாருக்கு நிகரான... அந்த ஆள் இவங்கதான்..... அவ்வ்வ்வ்...






Read more...

Wednesday, October 15, 2008

கார் ஓட்டும்போது ஏற்படும் சிறு பிரச்சினை.. தீர்வு தேவை!!!

இந்தியாவில் இருக்கும்போது எனக்கு இந்த பிரச்சினை இருந்ததில்லை. ஏன்னா, அங்கே நான் கார் ஓட்டினதேயில்லை. அமெரிக்கா வந்தும்கூட கார் வாங்கி சில நாட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகவே எனக்கு படவில்லை. ஆனால், சமீபகாலமாக ஒரே குழப்பமாக இருக்கிறது. இதை படிக்கும் லட்சக்கணக்கான நண்பர்கள் எனக்கு ஒரு நல்ல தீர்வைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரி சரி. பிரச்சினை என்னன்னே சொல்ல மாட்றியேப்பான்னு பொறுமையை இழக்கறவங்களுக்கு - ஆல் சைலண்ட்.. நீங்களும் சைலண்ட்...

கார் வாங்கி சில நாட்களுக்கு இரண்டு கைகளாலும் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டிக்கொண்டிருப்பேன். ஆனால், இப்போதெல்லாம் ஒரே கையே போதுமென்றிருக்கிறது. பிரச்சினை பிரச்சினைன்னு முதல்லேந்து சொல்லிக்கிட்டிருக்கேனே - அது என்னென்னா - வண்டி ஓட்டும்போது அந்த சும்மா இருக்கிற கையை (ஸ்டியரிங் பிடிக்காத கை) வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவ்ளோதான்.

தினமும் அலுவலகம் செல்லும்போதும், திரும்ப வரும்போதும் பயங்கர தொல்லையாக இருக்கிறது. என்னால் செய்யமுடிந்த சில செயல்களும் அதன் விளைவுகளும் பின்வருமாறு.

1. மீசையை முறுக்குதல்: இடது கையால் வண்டி ஓட்டும்போது, வலது கையை மீசை மேல் வைத்து, அதை முறுக்கி முறுக்கி முறுக்குவது சூப்பராக இருக்கிறது. அடிக்கடி முன்னால் இருக்கும் சிறு கண்ணாடியில் பார்த்தவாறே, மீசையை நேராக்குவது நல்ல பொழுதுபோக்கு.
ஆனால், மீசை நன்றாக முறுக்கியாகிவிட்டது என்ற நிலை வரும்போது அதன் மேல் கை வைக்க மனம் வரவில்லை. அப்பேர்ப்பட்ட சமயத்தில் அந்த கையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

2. பாட்டுக்கு தாளம் போடுவது: MP3 ப்ளேயரில் ஓடும் பாட்டுக்கு தாளம் போடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு ரெண்டு மூணு பாட்டுக்கு மேல் தாளம் போடுவது போரடிக்கிறது. கை வலிக்கிறது. அதனால், இதை என்னால் தொடர முடியவில்லை.

3. அலைபேசியில் பேசுவது: வண்டி ஓட்டும்போது கையில் அலைபேசி வைத்துக்கொண்டு பேசுவதைப் பார்த்தால், மாமா வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார். Handsfreeயில் பேசலாமென்றால், மறுபடி அந்த கை சும்மாதானே இருக்கும்?

4. வண்டிக்குள் சுத்தம் செய்வது: கீழே கிடக்கும் பேப்பர், சில்லறை ஆகியவற்றை சுத்தப்படுத்தலாம். ஆனால், வீடாயிருந்தாலும், காராயிருந்தாலும் - சுத்தம் செய்ய வேண்டுமென்றாலே எனக்கு தூக்கம் வந்துவிடுமென்பதால், அதையும் என்னால் செய்ய முடியவில்லை.

5. நகம் கடிப்பது: இரு கைகளிலும் உள்ள நகங்களை கடித்துத் துப்பிவிட்டால் மறுபடி அவை வளர ஒரு வாரமாவது ஆவதால், இதை தினமும் செய்ய முடியவில்லை. கால் நகத்தை என்னால் கடிக்க முடியவில்லை. வேகமாக நகம் வளர ஏதாவது மருந்திருந்தால் தேவலை.

இதைத்தவிர புத்தகம் படிப்பது, சுடோகு போடுவது, மடிக்கணிணியில் ஏதாவது அடிப்பது - இதெல்லாம் வண்டி ஓட்டும்போது என்னால் முடியாத செயல்களென்பதால் இவைகளையும் செய்யமுடியவில்லை.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்னோட பிரச்சினை என்னவென்று. இதற்கு ஏதாவது ஒரு தீர்வு இருந்தால், அதற்காக தயவு செய்து தற்போதைய ட்ரெண்டின்படி தந்தியெல்லாம் அடிக்காமல், இங்கே பின்னூட்டத்திலேயே சொல்லவும்!!!.

Read more...

Tuesday, October 14, 2008

நடுநிலைவாதிகள் போடவேண்டிய டிஸ்கி 10...!!!

நடுநிலைவாதிகள் அரசியலை/அரசியல்வாதிகளைப் பற்றி பதிவெழுதும்போது எழுதவேண்டிய டிஸ்கிகள் என்னென்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. நான் கலைஞரை மட்டும் திட்டி எழுதுவதாக நினைக்கவேண்டாம். புரட்சித்தலைவி, கேப்டன்,
சூப்பர் ஸ்டார் யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் எழுதுவேன்.

2. சென்ற ஆட்சிக்காலத்தில் நீ இப்படி எழுதினாயா என்று கேட்கவேண்டாம். நான் இந்த வருடம்தான் வலைப்பூ துவக்கினேன்.

3. என் சட்டைக்குள் நெளியற மேட்டர் இருக்கான்னு பார்க்கவேண்டாம். அதற்கும் என் கருத்திற்கும் சம்மந்தமில்லை.

4. நான் யாருக்கும் அல்லக்கை அல்ல.

5. நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை.

6. இந்த பிரச்சினையை மட்டும் பற்றி பேசுவோம். மற்ற பிரச்சினைகளைச் சொல்லி பதிவை திசை திருப்ப வேண்டாம். அதை வேறு பதிவுகளில் பேசுவோம்.

7. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடுதான். நான் மறத்தமிழன்தான்.

8. என்னைப் பற்றியோ என் உறவினர்களைப் பற்றியோ தரக்குறைவாக எழுதவேண்டாம்.

9. இந்த பதிவுக்கு மட்டும் 'பின்னூட்ட மட்டுறுத்தல்' செய்திருக்கிறேன். 'நல்ல' பின்னூட்டங்கள்
மட்டுமே வெளியிடப்படும்.

௰. நான் அவனில்லை.




Read more...

Monday, October 13, 2008

தங்கமணிகள் மறக்கும் விஷயங்கள் 10....!!!

குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு எங்கேயாவது வெளியே புறப்படும்போது, எதையோ மறந்துவிட்டு மறுபடி வீட்டிற்குள் போகவேண்டுமென்பார்கள் (அவரவர்) தங்கமணிகள். அப்படி போவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கமுடியுமென்று பாருங்கள். விட்டுப்போனவற்றை சொல்லுங்கள்.

10. வீட்டில் பீரோ / லாக்கர் பூட்டவேண்டியிருக்கும்.

9. வெளியே காயப்போட்டிருக்கும் துணிகளை உள்ளே எடுத்துப் போடவேண்டியிருக்கும்.

8. ஜன்னல் / பால்கனி கதவுகளை மூட மறந்துவிட்டிருப்பார்கள்.

7. கைக்கடிகாரம், செயின், மோதிரம் - இவற்றை மறந்துவிட்டிருப்பார்கள்.

6. வாங்கவேண்டிய மளிகை/இதர பொருட்களின் பட்டியல் வீட்டுக்குள்ளேயே இருக்கும்.

5. வெளியே போகும்போது போடலாம் என்று வைத்திருந்த குப்பையை விட்டிருப்பார்கள்.

4. மேக்கப் மேல் டச்சப் தேவைப்படும்.

3. சமையல் கேஸ், தொலைக்காட்சிப் பெட்டி, அறையில் எரியும் விளக்கு - இவற்றை அணைத்தோமா என்று சந்தேகப்படுவார்கள்.

2. பர்ஸ், பணம், கைபேசி - இவற்றை எடுத்துக்கொள்ள மறந்திருப்பார்கள்.



டாப்-ஒன் காரணம் என்னவாக இருக்கும்?...




கீழே...




சற்று கீழே...




இன்னும் கொஞ்சம்...




1. ரங்கமணி ஓய்வறையில் பிஸ் அடித்துக்கொண்டிருக்கும்போது, அவரையே மறந்து விட்டிருப்பார்கள்.


முக்கியமான டிஸ்கி: முதலாவது காரணம் நிஜம்ம்ம்ம்ம்மா எனக்கு நடந்ததில்லைப்பா.... உங்களுக்கு யாருக்காவது நடந்திருந்தா மறைக்காமே உண்மையை ஒத்துக்கோங்க.... அவ்வ்வ்...

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP