என்னதான் பிஸியாக காட்டிக் கொண்டாலும் சில சமயங்களில் ரங்கமணிகள் வீட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பதிவை படிக்கும் நிகழ்கால / வருங்கால ரங்கமணிகளுக்காக - அந்த சிற்சில வேலைகளையும் செய்யாமல் தப்பிப்பது எப்படி என்பதைத்தான் இங்கே பார்க்கப் போறோம்.
இந்த பதிவில் ரங்கமணிகளிடம் ஒப்படைக்கப்படும் மிகவும் முக்கியமான டாப்-3 வேலைகளை மட்டும்தான் பாக்கப் போறோம். மக்களின் ஆதரவுக்கேற்ப இதே தலைப்பில் அடுத்தடுத்த பதிவுகள் வெளியிடப்படும்.
இந்த யோசனைகளை அமுல்படுத்தும் ரங்கமணிகள் - தங்கள் முயற்சியில் வெற்றியடைந்தால் என்னை வாழ்த்தி பதிவிடவும். மாறாக ஏதேனும் 'பின்விளைவுகளை' சந்திக்க நேர்ந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.
பாத்திரம் தேய்த்தல்:
திருமணமான ரங்கமணிகளுக்கு முதன்முதலில் கொடுக்கப்படும் வேலை இதுவாகத்தான் இருக்கும். குழாயடியில் நின்று பாத்திரம் தேய்ப்பது ரொம்பவே கஷ்டமான செயல். அதுவும் ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக தேய்த்தபிறகு அதில் ஏதாவது கறை இருக்கா இல்லே எல்லாம் போய் சுத்தமாயிடுச்சான்னு கவனமாக பார்க்க வேண்டியிருக்கும். அப்படி ஏதாவது ஒரு கறை இருந்துச்சுன்னா, கஷ்டப்பட்டு எல்லா வேலையும் செய்தபிறகும் திட்டு வாங்கும் வாய்ப்பு நிறையவே உண்டு.
அதனால் நாம் செய்ய வேண்டியது என்னன்னா - ஒரு உதாரணத்தோட சொல்றேன். நம்ம நடிகைகள் மணிக்கணக்குலே மேக்கப் போட்டுக்குவாங்க. ஆனா கடைசியில் உதடுக்கு மேலே அல்லது கீழே, கறுப்பா சின்ன மச்சம் ஒண்ணு வெச்சுக்குவாங்க. கேட்டா திருஷ்டி பொட்டுன்னுவாங்க. அதே மாதிரி, பாத்திரங்கள நல்லா சுத்தம் செய்தபிறகு - தேர்ந்தெடுத்த சில பாத்திரங்களில் அங்கங்கே சின்ன திருஷ்டி பொட்டு இருக்கறா மாதிரி பாத்துக்கங்க. அவ்வளவுதான்.
"எதையும் உருப்படியா செய்யமாட்டீங்க. இனிமே உங்ககிட்டே சொல்லி பிரயோஜனமில்லே. நானே பாத்திரத்தை தேய்ச்சிக்கறேன்" - அப்படின்னு தங்கமணிகள் காரியத்தில் இறங்கிடுவாங்க. நீங்க - வேறென்ன - ஒரு தடவை காதை துடைச்சிக்கிட்டு - ஜாலியா தொலைக்காட்சியோ கணிணியோ ஆன் பண்ணிடுங்க. அவ்வளவுதான். கொஞ்ச நாளைக்கு பாத்திரமே தேய்க்க வேண்டாம்.
குக்கர் வைப்பது:
குக்கரில் அரிசி, பருப்பு அல்லது காய்களை வைத்து - விசில்களை எண்ணி சரியாக அடுப்பை அணைப்பது - கேட்பதற்கு சுலபமாகத்தான் தெரியும். ஆனால், அப்படி விசில்களை கவனமாக எண்ண வேண்டும் என்பதால் அந்த ஐந்து/பத்து நிமிடங்களுக்கு வேறெந்த வேலையும் செய்ய முடியாது. நண்பர்களின் பதிவுகளில் ஒரு பின்னூட்டமோ, ஓட்டோ போட முடியாது.
அதே மாதிரி, சில சமயங்களில் கேஸ்கட் (gaskette) பழுதாகி விடும். அப்போது குக்கர் மூடியை காற்று வெளியேறாமல் அழுத்தமாக பிடித்துக் கொள்ள வேண்டும். உள்ளே சரியான அளவில் தண்ணீர் போட வேண்டும். இவ்ளோ பிரச்சினைகளிருக்கும் இந்த வேலையிலிருந்து தப்பிப்பது மிகவும் சுலபம். கீழே படிங்க.
அ. ஒரு தடவை அரிசியுடன் போடும் தண்ணீர் அளவை சற்று அதிகரிக்கவும். உதாரணத்திற்கு - 5 டம்ளர் தண்ணீர் போடவேண்டுமென்றால், சரியாக 8 அல்லது 9 டம்ளர் போடுங்கள் போதும்.
ஆ. அதே மாதிரி விசில் எண்ணிக்கை. ஐந்து விசிலில் குக்கரை இறக்க வேண்டும் என்று சொன்னால், முதல் விசில் வந்தவுடன் காதை மூடிக்கொள்ளவும். குத்து மதிப்பாக அடுத்த பத்து நிமிடம் கழித்து குக்கரை இறக்கவும்.
இ. அரிசியே போடாமலும் (வெறும் தண்ணீரோடு) குக்கர் வைக்கலாம். அதெல்லாம் உங்கள் தைரியத்தைப் பொறுத்து நீங்களே முடிவு செய்துகொள்ள வேண்டியது.
மேற்கூறிய மூன்றினையும் ஒன்று அல்லது இரண்டு தடவை செய்தால் போதும் - வாழ்க்கையில் இனிமேல் நீங்கள் குக்கர் வைக்கவே வேண்டியிருக்காது. எல்லாவற்றையும் தங்கமணியே பார்த்துக் கொள்வார்கள்.
வீட்டை பெருக்கி, ஒட்டடை அடித்தல்:
என்னிக்காவது ஒரு நாள் லீவில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்தாலோ, சமீபத்தில் 1980யில் நடந்த ஒரு கிரிக்கெட் மேட்சை (வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா) பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தாலோ - அப்போதுதான் வீட்டை பெருக்க வேண்டுமென்றும், ஒட்டடை அடிக்க வேண்டுமென்றும் தங்கமணிகளுக்கு நினைவு வரும்.
வேறு வழியில்லாமல் ரங்கமணிகள் அந்த வேலைகளை செய்தாலும், போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் நிறைய குற்றங்கள் இடம்பெற்றிருக்கும்.
இப்போ இந்த வேலையிலிருந்து தப்பிப்பது எப்படின்றத பாப்போம். இதுக்கு சரியான உதாரணம் நம்ம ஊர் குப்பை வண்டி. அதாவது ஒரு இடத்திலே இருக்கற குப்பையை பல இடங்களுக்கும் பரப்புவது. புரிஞ்சிக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஒட்டடை அடிக்கணும்னா சுவத்திலே ஒரு மூலையில் இருக்கறதை, அப்படியே கோடு மாதிரி பல இடங்களுக்கும் இழுத்துடணும். இந்த மாதிரி செய்யத் தெரியலேன்னா கவலைப்பட வேண்டாம். இதுக்கெல்லாம் எங்கேயும் க்ராஷ்-கோர்ஸ் கிடையாது. நீங்களே ஓரிரு முறை முயற்சி செஞ்சா செய்துடலாம்.
அதுக்கப்புறம் கவலையே கிடையாது. ரஞ்சிக்கோப்பை மேட்சிலிருந்து பழைய மேட்ச் எதுவாயிருந்தாலும், கால் மேல் கால் போட்டு பார்த்துக்கொண்டே இருக்கலாம். ‘யாரும்' தொந்தரவே செய்ய மாட்டார்கள்.
Read more...