ஆரம்ப காலத்தில், சென்னையில் ஒரு அலுவலகத்தில் உதவி கணக்கணாய் (Accounts Assistant) வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஒரு நல்ல மதிய வேளையில் நண்பன் சொன்னான். "மாப்ளே, கீழே ரெண்டாவது மாடியிலே ஒரு கணிணி பயிற்சி நிலையம் தொடங்கியிருக்காங்க. சூப்பரா இருக்குடா".
அப்போது எங்க அலுவலகத்தில் ஒரே ஒரு கணிணி இருந்தது. அதையும் குளிர்சாதன வசதியுடன் ஒரு கண்ணாடி அறைக்குள் போட்டு பூட்டி வைத்திருந்தார்கள். சிறப்பு கட்டணம் கட்டி கோயிலுக்குள் அனுமதிப்பது போல் அந்த அறை பாதுகாக்கப்பட்டிருந்தது." நாமளும் கணிணி கத்துக்கிட்டு அந்த அறையில் உரிமையோட நுழையணும்டா" இது மறுபடியும் நண்பன். "சரி வா போய் பாத்துடலாம்னு" உணவு இடைவேளையில் கீழே போனோம்.
"பணம் அதிகமா கறந்துடப்போறாங்கடா" என்று நான் கூற, அவனோ " நாம எதிலேயும் சேரப்போறதில்லை. அங்கே இருக்கும் ஒரு பொண்ணு சூப்பரா இருக்குது. அதைப் பாத்து கொஞ்ச நேரம் கடலை போட்டுட்டு வந்துடலாம்" என்றபடியே உள்ளே நுழைந்துவிட்டான்.
வெளியே சூப்பராக பெயர்ப்பலகை வைத்திருந்தார்கள். "Aptech - We Change Lives". பயிற்சி நிலையத்துக்குள்ளேயும் அருமையாய் அலங்காரம் செய்திருந்தார்கள். நேராக அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் போனோம். "எங்களுக்கு கோர்ஸ் டீடெய்ஸ் வேணும்". அவரும் "உள்ளே போங்க. செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருப்பாங்க" என்றார்.
கண்ணாடி அலுவலகத்தில் நுழைந்து செல்வி முன்னால் உட்கார்ந்ததுதான் தெரியும். அடுத்த 20 நிமிடங்களுக்கு எனக்கும் நண்பனுக்கும் - மஞ்சகாட்டு மைனா நடிகைமுன் நின்ற பிரபுதேவாவைப் போல் - எதுவுமே காதில் விழவில்லை. பிறகு மந்திரித்து விட்ட ஆடுகளைப் போல் - நாளைக்கு வந்து பணம் கட்டுகிறோம் என்று கூறி வெளியே வந்துவிட்டோம்.
அன்று மதியம் எங்களுக்கு வேலையே ஓடவில்லை. "மாப்ளே, நான் கண்டிப்பா கணிணி வகுப்புலே சேரறேண்டா" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தான் நண்பன். "ஏண்டா, அவ அலுவலகத்திலே இருப்பா. நமக்கு வந்து சொல்லிக் கொடுக்கல்லாம் மாட்டா. எதுக்கு வேஸ்டா அங்கே போய் சேர்றே" என்றால், "ஏதாவது ஒரு சந்தேகம் வைத்துக்கொண்டு தினமும் நான் அலுவலகத்திற்குப் போய்விடுவேன்" என்றான்.
மறுநாள் மறுபடியும், "இன்னொரு தடவை போய் பாப்போம். சில சந்தேகங்கள் இருக்கு எனக்கு" என்றான். "இது வேலைக்காகாது. சரியில்லை" என்று புத்தி சொன்னாலும், எப்போதும் போல் மனது கேட்காததால், "சரி, வா போலாம்" என்றேன்.இந்த தடவை கொஞ்சம் தெளிவாக இருந்த நாங்கள் - கேள்வியெல்லாம் கேட்டு சந்தேகங்களை (!!!) தீர்த்துக்கொண்டோம்.
கடைக்கு ரெண்டாவது தடவையா வந்த ஆடுகளை விடவே கூடாதுன்னு அவங்க - ஸ்காலர்ஷிப் தர்றோம், தவணை முறையிலே பணம் கட்டுங்கன்னு - அப்படி
இப்படின்னு நிறைய கவர்ச்சித் திட்டங்களை சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போவும் மசியாத நாங்கள், "ஒரு வாரம் டைம் கொடுங்க. யோசிச்சி திரும்ப வர்றோம்" அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டோம்.
அடுத்த வாரம் திங்கட்கிழமை காலை அலுவலகத்தில்.
நண்பன்: ஏண்டா, அந்த கோர்ஸ் பத்தி என்ன நினைக்கிறே? சேரப்போறியா?
நான்: நீ முதல்லே சொல்லு. நீ சேரப்போறியா?
நண்பன்: ச்சேசே. நாந்தான் அப்பவே சொல்லிட்டேனே. நான் சும்மா கடலை போடத்தான் போறேன்னு.நான் சேரப்போறதில்லை. நீ கூடதான் பணம்லாம் ஜாஸ்தியாகும்னு சேரமாட்டேன்னு சொன்னே.
நான்: அது அப்ப சொன்னேன். ஆனா இப்ப...
நண்பன்: இப்ப?
நான்: அது வந்து... அது வந்து...
*****
ஒரு நல்ல Cost Accountant அல்லது Chartered Accountant ஆயிருக்கவேண்டியன - கடலையா போடறே, மகனே வா - We Change Lives அப்படின்னு சொல்லிட்டு என் வாழ்க்கையவே மாத்திட்டாங்க... ஆமாங்க. நான் அங்கே மூணு வருட கோர்ஸ்லே சேந்துட்டேன்..... அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் புவியியல்தான்.. ஐ மீன்... வரலாறுதான்...
Read more...