டாக்டர், தனது அடுத்த படத்திற்கான கதை கேட்க கே.எஸ்.ரவிக்குமாரை வீட்டுக்கு வரச்சொல்கிறார். ரவியும் வருகிறார்.
இனி டாக்டரும், ரவியும் (ரவி1) பேசிக்கொள்வதுதான் பதிவு. நடுநடுவே ரவி2 என்றிருப்பது ரவியின் மனசாட்சி.
டாக்: வாங்க ரவி சார்... எப்படியிருக்கீங்க?
ரவி2: இவ்ளோ நேரம் நல்லாத்தான் இருந்தேன். இனிமே என்ன ஆகப்போகுதோ தெரியலியே, ஆண்டவா..
ரவி1: நான் ரொம்ப நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.
டாக்: நானும் நல்லாயிருக்கேன். நான் சொல்லி உடனே வந்ததுக்கு ரொம்ப நன்றி.. நான் நேராவே விஷயத்துக்குப் போயிடறேன்.
ரவி2: அப்பாடா. ரொம்ப நல்லதாப் போச்சு. விஷயத்தை கேட்டுட்டு இந்த இடத்தை விட்டு உடனே எஸ்ஸாயிடணும்.
ரவி1: சொல்லுங்க.
டாக்: உங்க 'தசாவதாரம்' பாத்தேன். அருமையா இயக்கியிருந்தீங்க. எனக்கும் அதே மாதிரி ஒரு கதை வேணும். செய்து தருவீங்களா?
ரவி2: என்னது, மறுபடியுமா? சாமி, ஆளை விடுப்பா. நான் ஓடிப்போயிடறேன்.
ரவி1: ரொம்ப நல்ல ஐடியா. எப்படி? அதே மாதிரி பத்து வேடம் போடப்போறீங்களா? கமல் மாதிரி நீங்க மெனக்கிடுவீங்களா? அவ்ளோ வெரைட்டி கொடுக்கத் தயாரா இருக்கீங்களா?
டாக்: நோ நோ. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நான் அப்படி நடிக்கிறதை மக்கள் விரும்பமாட்டாங்க. அதனால், அதிகபட்சம் 2 வேடம்தான் எனக்கு சரிப்படும். அப்போதான் படம் பிச்சிக்கிட்டு ஓடும்.
ரவி2: ஆமா. பின்னே 10 வேஷத்திலேயும் ஒரே மாதிரி தாடி வெச்சிண்டிருந்தா, படம் ஓடுதோ இல்லையோ, மக்கள் தலையெ பிச்சிக்கிட்டு ஓடுவாங்க.
ரவி1: ஓ. சூப்பரா செய்யலாமே. இப்ப பாருங்க. உங்களுக்காகவே ஒரு கதையை கையோட கொண்டுவந்திருக்கேன். கேக்கறீங்களா?
டாக்: அப்படியா. வெரிகுட். சொல்லுங்க சொல்லுங்க. அதுக்குத்தானே கூப்பிட்டேன்.
ரவி1: 7-ஆம் நூற்றாண்டு. மகாபலிபுரம். மகேந்திர வர்ம பல்லவன் ஆட்சியில்தான் நம்ம கதை ஆரம்பிக்குது.
டாக்: என்னது, 7-ஆம் நூற்றாண்டுலியா.. மக்கள் ஒத்துப்பாங்களா.. தசாவதாரத்துக்கு வந்தா மாதிரி இதுக்கும் எதுவும் பிரச்சினை வந்தா?
ரவி2: அது சரி. கமலுக்கு படம் வர்றதுக்கு முன்னாடி பிரச்சினை பயங்கரமா இருக்கும். ஆனா படம் வந்தபிறகு எல்லாம் அடங்கிடும். ஆனா, இங்கேதான் அது தலைகீழாச்சே...
ரவி1: நல்லாயிருக்குமாவா? இப்போல்லாம் அதுதான் ட்ரெண்டே... முதல் பத்து நிமிடம் நல்ல த்ரில்லிங்கா - அதுவும் ராஜா காலத்து கதையா வெச்சிடணும். அப்போதான் மக்கள் படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வந்து உக்காந்துடுவாங்க... அப்புறம், அதான் வந்திட்டமே, கொஞ்ச நேரம் இருந்து பாத்துட்டு போயிடுவோம்னு, படம் முழுக்க இருந்திடுவாங்க.
டாக்: அப்போ எதுவும் பிரச்சினை வராதுன்றீங்க...
ரவி2: இப்போ பிரச்சினை வரணும்றீங்களா.. இல்லே வரக்கூடாதுன்றீங்களா...
ரவி1: அதுக்குத்தான் நாம் 'இந்த கதையில் கொஞ்சம் கற்பனையும் கலந்துள்ளது' அப்படின்னு ஒரு ஸ்லைட் போட்டுடுவோம். அப்புறம் பொது மக்களோ, வலைப்பதிவுகள்லியோ யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.
டாக்: சரி. கதை சொல்லுங்க. நாந்தான் அந்த ராஜாவா?
ரவி2: இப்போ அது ஒண்ணுதான் குறைச்சல்.
ரவி1: சொல்றேன். வெயிட் பண்ணுங்க. மக்களும் அதைத்தான் நினைப்பாங்க. ஆனா, நீங்க ராஜாயில்லை. வேறே யாரையாவது போட்டுக்கலாம். முதல் சீன் சொல்றேன் பாருங்க.
ஒரு நாள் ராஜா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று சாப்பாட்டில் ஒரு 'கல்' வந்துவிடுகிறது. ராஜாவும் அதை 'கடக்'னு கடிச்சிடுறாரு. பல்லு கடகடன்னு ஆடுது.
டாக்: அந்த இடத்திலே க்ராஃபிக்ஸ் போட்டுடலாம். வாய்க்குள்ளே எல்லா பல்லும் டான்ஸ் ஆடறாமாதிரி காட்டினா, ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.
ரவி2: அது என்ன வாயா, இல்லே கால்வாயா, உள்ளேல்லாம் போய் படமெடுக்கறதுக்கு? சொல்றத ஒழுங்கா கேளுய்யா.
ரவி1: ஓ. சூப்பர் ஐடியா. நான் இதை பத்தி டான்ஸ் மாஸ்டர்கிட்டே பேசறேன். நீங்க மேலே கதை கேளுங்க. அந்த ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்துவிடுகிறது. 'கூப்பிடு அந்த சமையல்காரனை'ங்கிறார். நீங்கதான் அந்த சமையல்காரர்.
டாக்: என்ன, நான் சமையல்காரனா?.. இதெல்லாம் சரிவருமா?
ரவி1: எல்லாம் சரியா வரும். ராஜா உங்களைப் பாத்து கோபத்தோட கேக்கறார்... "அரிசியிலே கல்லு பொறுக்கினியா, இல்லையா???"
டாக்: நான் என்ன சொல்லணும்?
ரவி1: நீங்க 'பொறுக்கலேன்னு' சொல்லணும்.
டாக்: இருங்க இருங்க. நான் உடனே சொல்லமாட்டேன். ஒரு பத்து நிமிடம் சும்மா இருப்பேன்.
அந்த சமயத்திலேதான் காமிரா ட்ரிக்ஸெல்லாம் காட்டணும். காமிரா அப்படியே சுத்தி சுத்தி வரும். கீழேயிருந்து மேலே, மேலேயிருந்து கீழே.. அப்படி இப்படின்னு காட்டிட்டேயிருக்கணும்.
ரவி2: சரி. இதெல்லாம் பாக்கணும்றது மக்கள் தலையெழுத்து. நான் என்ன செய்றது?
ரவி1: ஓகே அப்படியே செய்துடுவோம்.
சரி. இப்போ நீங்க பதில் சொல்லப்போறீங்க... கூட்டத்திலே நிக்கற உங்க பொண்ணு உங்களைப் பாத்து சொல்லும். "அப்பா, பொறுக்கினேன்னு சொல்லிடுங்கப்பா.."
ஆனா, நீங்க 'பொறுறுறுறுறுறுறுறு.....க்கலே'ன்னு சொல்லிடறீங்க. மக்கள் எல்லாம் 'ஆஆஆ'னு ஆர்பரிக்கறாங்க. ராஜா கண் காட்டினவுடனே, சாம்பார் வைக்கிற ஒரு பெரிய அண்டாவோட சேத்து கட்டிடறாங்க. அப்படியே உங்களை தூக்கி ஒரு பாழும் கிணத்திலே போட ஏற்பாடு நடக்குது.
டாக்: வாவ். கதை ரொம்ப சூப்பர் த்ரில்லிங்கா இருக்கு. இந்த இடத்திலே ஒரு பாட்டு வரணும்னு நினைக்கிறேன்.
ரவி2: அதான் எல்லாம் போன படத்துலேயே சொல்லிட்டேனே. அப்புறம் என்ன, புதுசா கண்டுபிடிச்சா மாதிரி சொல்றீங்க.
ரவி1: ரொம்ப கரெக்டா சொன்னீங்க. இந்த இடத்திலே ஒரு பாட்டு போடறோம். பாட்டு வரிகள் கூட ரெடியாயிடுச்சு.
'கல்லை மட்டும் கண்டால், சோறு இறங்காது.
சோறு மட்டும் தின்றால், கல்மண் தெரியாது..." அப்படின்னு பாடறீங்க...
டாக்: நான் 'டக்குன்னு' அப்படியே மேலேயிருந்து தாவி குதிச்சி ஓடிடவா...
ரவி2: ஏங்க. உங்களுக்கு ஒழுங்கா நடக்கவோ, ஓடவோ தெரியவே தெரியாதா?? எப்போ பாத்தாலும், தாவவா, குதிக்கவான்னே கேட்டுக்கிட்டிருக்கீங்களே? இங்கே நாந்தான் இயக்குனர். நான் சொல்ற மாதிரிதான் நீங்க நடிக்கணும்.
ரவி1: கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எங்கேயும் ஓடிப்போகலை. தண்டனையை ஏத்துக்கறதுக்காக வெயிட் பண்றீங்க.
ராஜா கோபத்திலே தன் கையில் இருக்கற தட்டை அப்படியே தூக்கி உங்கமேலே வீசறாரு. அந்தத் தட்டு 'டங்'னு உங்க நெத்திலே பட்டு நீங்க மயக்கமாயிடறீங்க... அங்கே கட் பண்றோம்.
டாக்: அப்போ அடுத்த சீன் என்னது?
ரவி1: அடுத்த சீன் 21ம் நூற்றாண்டுலே ஆரம்பிக்குது. தமிழகத்துலே ஒரு சின்ன கிராமத்திலே நீங்க ஒரு கொத்தனாரா இருக்கீங்க.
டாக்: அப்பாடா. இப்போவாவது நான் சொல்றா மாதிரி கதை வைங்க.
ரவி2: விடமாட்டான் போலேயிருக்கே. சரி கேப்போம்.
ரவி1: சொல்லுங்க பாக்கலாம்.
டாக்: மொத்தம் எனக்கு நாலு பாட்டு. அதிலே ஒண்ணு நல்ல குத்து பாட்டா இருக்கணும். அதுக்கு மட்டும் நமீதாவை போட்டுடுங்க. மூணு சண்டையிலே ஒண்ணு பறந்துகிட்டு, இன்னொண்ணு ரயில்லே இருக்கணும். இதெல்லாம் இருந்தா எனக்கு போதும். கதையெல்லாம் உங்க இஷ்டம்.
ரவி2: சரி ஏதோ ஒண்ணு இயக்கணும். ஆனா சத்தியமா நான் அந்த படத்தை பாக்கமாட்டேன். இவர் பாணியில் சொல்றதுன்னா ' நான் இயக்குன படத்தை, நானே பாக்க மாட்டேன்'. அட, இது கூட நல்லாத்தான் இருக்கு.
ரவி1: அடடா, நான் இந்த ஃபார்முலாவிலே கதை யோசிக்கவேயில்லையே. சரி. ஒண்ணும் பிரச்சினையில்லே. எனக்கு ஒரு பத்து நாள் டைம் கொடுங்க. யோசிச்சி ஒரு சூப்பர் கதையோட வரேன். ஓகேவா.
டாக்: அவசரமேயில்லை. நீங்க போய் நல்லா யோசிச்சி எனக்கு சொல்லி அனுப்புங்க. நானே வந்து கதை கேக்கறேன்.
ரவி2: எஸ்கேப் ஆகுடா ரவி. இனிமே இந்த பக்கமே தலை வெச்சி படுக்கக்கூடாது.
ரவி1: வரேங்க. அப்புறம் பாக்கலாம். பை.
(ரவி தலை தெறிக்க ஓடுகிறார்).
Read more...