Sunday, December 9, 2012

பஜ்ஜியோ பஜ்ஜி!


நண்பர் ஒருவர் தொலைப்பேசினார். நம் வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்தான். மாலையில் அவர் வீட்டிற்கு தொலைதூர உறவினர்கள் இருவர் வரப்போவதாகவும், அவர்களுக்காக பஜ்ஜி செய்யப் போவதாகவும் கூறினார். நான் ஒண்ணுமே ஜொள்ளவேயில்லை. ஆனாலும், தொலைப்பேசியிலேயே அதை கண்டுகொண்ட நண்பர், பஜ்ஜிகளை செய்து முடித்ததும், சூட்டோடு சூடாக 10 பஜ்ஜிகளை கொடுத்தனுப்பினார். அவர் நாமம் வாழ்க!

மாலையில் மறுபடி கூப்பிட்டார். உறவினர்கள் வந்துவிட்டதாகவும், இருவருக்கு பதில் ஐவர் வந்திருப்பதாகவும், இப்படி திடீரென்று வந்துவிட்டதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்பினார். நானும் டென்சனாகி விட்டேன்.

அமெரிக்காவில் பக்கத்து வீட்டிற்குப் போவதென்றாலும், முதலில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, சரியாக அந்த சமயத்தில், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே போய் வருவர். திடீரென்று யார் வீட்டிற்கும் போய் கதவைத் தட்டமுடியாது. நண்பர் வீட்டில் டிபன், சாப்பாடு சாப்பிடும் நேரமாக போய் நான் பல நாட்கள் உட்கார்ந்ததெல்லாம் தற்செயலானதேன்னு சொன்னா யாரும் நம்பப் போவதில்லை. ஆகவே நானும் சொல்லவில்லை.

வேறு சில நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். ’இன்னிக்கு 2 டு 4 நான் ஃப்ரீயா
இருக்கேன். வந்தீங்கன்னா கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்’னு சொல்வாங்க. அப்போ சரியா சாப்பாடு நேரமும் முடிஞ்சிருக்கும். மாலை காபி/டிபன் நேரமும் வந்திருக்காது. அந்த கேப்புலே வெறும் பேசிட்டு அனுப்பிடலாம்னு நினைப்பாங்க. ஆனா, நாங்களும் விடாமே எதையாவது வாங்கி சாப்பிட்டுத்தான் வருவோம்னு வைங்க..

நிற்க. இன்றைய பிரச்னைக்கு வருவோம். அதிக விருந்தாளிகள் வந்தா, நண்பர்தானே டென்சனாகணும், நான் ஏன் டென்சன் ஆனேன்னு யாராச்சும் கேட்டீங்களா? முதலில் எங்களுக்கு பஜ்ஜி கொடுத்தாரே, நினைவிருக்கா, இப்போ அதிகம் பேர் வந்துட்டாங்கன்னு அந்த பஜ்ஜிகளை திரும்பிக் கேட்டுட்டா? எலி பிடிக்க வெச்ச மசால்வடையை எடுத்து கஸ்டமருக்கு கொடுக்கற மாதிரி ஒரு ஜோக்கு வருமே, அதைப் போல இவரும் பண்ணிட்டா? அதனால்தான் நான் டென்சனானேன்.

ஆனா பாருங்க, நண்பர் மறுபடி அவர் நண்பர்தான் நிரூபிச்சிட்டாரு. கொடுத்த வாக்கையும், பஜ்ஜியையும் திருப்பி வாங்கமாட்டேன்னு சத்தியமே பண்ணிட்டாரு. இருந்தாலும், மனசு மாறிட்டார்னா என்ன பண்றதுன்னு அவர்கிட்டே பேசி தொலைப்பேசியை வெக்கறதுக்குள்ளே அவற்றை சாப்பிட்டு ஏவ் விட்டாச்சு.

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமா பட்சணங்களை செய்ங்கன்னு அறிவுரை கூறி, மறக்காமல், அடுத்த வாரம் அவர் வீட்டுக்கு யாராவது வர்றாங்களான்னு கேட்டு அழைப்பை கட் செய்தேன்.

***
 

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP