Monday, November 21, 2011

புகைப்படக் கருவி.




இந்தியாவில் இருந்தவரை புகைப்படக் கருவியை காகிதத்தில் எழுதி வைத்துதான் பார்த்திருக்கிறோம். குடும்ப விழாக்களில் மத்தவங்க படம் எடுக்கும்போது டக்குன்னு அவங்க பக்கத்திலேயோ பின்னாடியோ போய் நின்னுக்கிட்டு ஈஈஈன்னு சிரிக்கிற நல்ல பழக்கம் மட்டும் இருந்தது.

அப்புறம் காலச்சக்கரம் சுழன்று ஒரு நாள் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். நம்ம மக்கள் காட்டிய பாதையில் உடனடியாக ஒரு பு.கருவி வாங்கினோம். அதைக் கொண்டு வந்து கொடுத்த தபால்காரரை க்ளிக் செய்ய ஆரம்பித்து, படம் எடுத்தோம், எடுத்தோம் - வாழ்க்கையில் ஓரத்திற்கே போய் எடுத்தோம். (பிறகு SD கார்ட் தீர்ந்துவிட்டதால் திரும்பி வந்துவிட்டோம்!).

அதன் பிறகு வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிப் போனது அந்த அருவி ச்சே கருவி.

ஒரு நாள் / பல நாள் பயணமாக வெளியே கிளம்பும்போதெல்லாம் என் குடும்ப உறுப்பினர்கள் (ஆமா. அவங்க ரெண்டு பேர்தான்!) என்னென்ன பொருட்கள் கொண்டு போகணும்னு பட்டியல் போட ஆரம்பிப்பாங்க. அந்த பட்டியலில் முதலில் இடம்பெறுவது - அதேதான்.

வெயிட். பட்டியல் போடறது மட்டும்தான் அவங்களது. பு.கருவியும் அதற்குண்டான சாமான்களும் பொறுப்பா எடுத்து வைப்பது என் வேலை. ’பொறுப்பா’ன்னு படிச்சீங்கல்லே. அதுதான் நம்மகிட்டே இல்லேன்னு தெரியுமே. பல தடவை சிலபல மேட்டர்களை மறந்து திட்டு வாங்குவதுண்டு.

இப்படிதான் போன வருடம், FeTNA மூணு நாள் விழாவுக்கு போயிருந்தோம். நிறைய நடிகைகள் வர்றாங்க. எல்லாருடனும் படம் புடிச்சிக்கணும்னு தங்ஸோட ஆசை. சரியா படிங்கப்பா. என் ஆசை இல்லை. சரிதான்’னு சொல்லி கிளம்பி போயாச்சு.

நடிகைகளோட படம் பிடிக்க, புது ட்ரெஸ், குளிர் கண்ணாடி இதெல்லாம் எடுத்துப் போனேன் பாருங்க, ஒரே ஒரு பொருளை மறந்துட்டேன். என்ன பு.கருவியோட பேட்டரி மறந்துட்டியான்னு கேக்கப்படாது. அப்படியெல்லாம் நான் செய்வேனா? ஹிஹி. பு.கருவியையே மறந்துட்டேன். லட்சுமிராய் பக்கத்துலே போய் நின்னு (சரி சரி. எல்லாரும் உக்காருங்க) பு.கருவி இருக்கிற தோல்பையை திறந்து பார்த்தா, உள்ளேயிருந்து வெறும் காத்துதான் வருது. கருவியை காணோம். அவங்களும் பெரிய மனசு செய்து ரெண்டு நிமிஷம் பேசிட்டு அனுப்பிட்டாங்க!!. (அப்புறம் நடந்த லட்சார்ச்சனையைப் பற்றி நான் சொல்ல மாட்டேன்).

இப்படியில்லாமே எல்லாத்தையும் சரியா எடுத்துப் போன நிகழ்வுகளும் உண்டு. ஆனா அப்பல்லாம் இவங்க ரெண்டு பேரும் செய்யற ரப்சர் தாங்கவே முடியாது.

உதாரணத்துக்கு ஒண்ணு: பூ, புஷ்பம், புய்ப்பம் எது மாட்டினாலும், அதை ஐந்து வித கோணங்களில் படம் பிடிச்சிப்பாங்க. ஐந்து கோணமா அப்படின்னு கேக்குறவங்களுக்கு. இடது, வலது, முன்னே, பின்னே மற்றும் மேலே. அந்த பூ-க்கு கீழே போய் படம் பிடிக்கமுடியாததால் அதை விட்டுடுவாங்க. அது மட்டுமில்லாமே எக்கச்சக்க படங்க எடுப்பாங்களா, அதையெல்லாம் slideshowவில் போட்டு வேகமாக ஓட்டினால், ஒரு காணொளியே ரெடி.

சரி போயிட்டு போகுதுன்னு வீட்டுக்கு வந்தா, ஒரு பத்து நிமிடம் உக்கார விடமாட்டாங்க. உடனே அதை கணிணியில் போட்டு, இணையத்தில் ஏத்தி, ஊருக்கு சொல்லி - அப்பப்பா.. முடியலடா சாமி.

இப்பகூட பாருங்க, வெளியே போயிட்டு வந்து, புகைப்படங்களை இணையத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். இருங்க. உள்ளேயிருந்து ஏதோ சொல்றாங்க. என்னன்னு கேட்போம்.

”ஏங்க இங்கே கொஞ்சம் வாங்க. ச்சின்ன கரப்பான்பூச்சி ஒண்ணு போகுது. இந்த ஊர் க.பூ இந்தியாவில் யாரும் பாத்திருக்கமாட்டாங்க. டக்குன்னு காமிரா எடுத்துட்டு வாங்க.”

ஐயய்யோ. மறுபடி காமிராவா? நான் கொஞ்ச நேரத்துக்கு தலைமறைவாகிடப் போறேன். நீங்களும் எஸ்கேப்பாயிடுங்க. என்ன?

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP